நிஜ மெர்செல் 5 ரூபா டாக்டர்

 ஐந்து ரூபாய் ஃபீஸ்… 60 ஆண்டுகால மருத்துவ சேவை… அசத்தல் டாக்டர் மயிலாடுதுறை ராமமூர்த்தி

“மத்தவங்களுக்கு உதவி செய்யறதுங்கிறது சின்ன வயசுலயே ரத்தத்துல ஊறிடுச்சு, ஸ்கூல் படிக்கும்போது அம்மா கொடுத்துவிடும் சாப்பாட்டை மத்தவங்களுக்குக் கொடுத்துடுவேன். யாராவது பசியில இருக்குறதைப் பார்த்தா மனசு தாங்காது. சின்ன வயசுலயே நம்ம வாழ்க்கை முழுக்க மத்தவங்களுக்காகத்தான் வாழணும்னு எனக்குள்ள ஒரு தீர்மானம் வந்துடுச்சு’’ என்கிற டாக்டர் ராமமூர்த்திக்கு எண்பத்து நான்கு வயது. கொஞ்சமும் பிசிறில்லாத உறுதியான குரலில் பேசுகிறார் இந்த ‘மக்கள் மருத்துவர்’. அந்தப் பகுதி மக்கள் இவரை அப்படித்தான் அழைக்கிறார்கள்.

இருபத்து நான்கு வயதில் தொடங்கியது இவரின் மருத்துவச் சேவை. அந்தச் சேவைக்கு இப்போது வயது அறுபது. இத்தனை வயதிலும் எந்தச் சோர்வும் இல்லாமல் ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை செய்கிறார் ராமமூர்த்தி. மயிலாடுதுறை வட்டார கிராமங்களில் மருத்துவர் ராமமூர்த்தியைத் தெரியாதவர்களே இல்லை. அதேபோல் அவருக்கும் சுற்றியிருக்கும் அத்தனை கிராமங்களும், அங்கிருக்கும் மக்களும் அத்துப்படி. ஆரம்பகாலத்தில் பல கிலோமீட்டர்கள் நடந்து சென்றே வைத்தியம் பார்த்திருக்கிறார் இந்த மக்கள் மருத்துவர்.

“நடந்து மட்டும் இல்லை… மாட்டுவண்டியில போய்க்கூட மருத்துவம் பார்த்திருக்கேன். யாருக்காவது முடியலைனு தகவல் வந்தா கிளம்பிடுவேன். ஏழை மக்களை ரொம்ப நேரம் கஷ்டப்படவிடக் கூடாது இல்லியா?” என்றவர் மீண்டும் உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்.

“நான் பிறந்தது முடிகொண்டான்கிற சின்ன கிராமம். அங்கே இருந்து நன்னிலத்துல இருந்த ஸ்கூலுக்குப் பல மைல் தூரம் நடந்து போய்தான் படிச்சேன். அரசாங்கத்துல கிடைச்ச ஸ்காலர்ஷிப் மூலமாத்தான் படிச்சேன். ஸ்கூல் படிப்பு முடிஞ்சது. சென்யிட் ஜோசப் கல்லூரியில ரெண்டு வருஷம் இன்டர்மீடியேட் படிச்சேன். அப்போ எங்க காலேஜ்ல நான்தான் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட்.

அப்புறம் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல மருத்துவம் (1953-58) படிச்சேன். அப்பா வேலை செஞ்ச எஸ்டேட் முதலாளிதான் நான் படிக்கறதுக்கு உதவி செஞ்சார். அந்த பெரிய மனுஷன் புண்ணியத்தாலதான் நான் டாக்டர் ஆனேன்.

டாக்டர் ஆனதும், சொந்த ஊருக்குப் போயி மக்களுக்கு சேவை செய்யணும்னு முடிவு பண்ணிட்டேன். மயிலாடுதுறைக்கு வந்துட்டேன். இங்கே வந்து மாயவரம் அரசு மருத்துவமனையில பதினைந்து வருஷம் சம்பளமே இல்லாம அசிஸ்டென்ட் சர்ஜனா வேலை பார்த்தேன்” என்கிறார் ராமமூர்த்தி.

`அரசு மருத்துவமனையில் சம்பளம் இல்லாமலா?’ என்று கேட்டால் சிரிக்கிறார். “அதெல்லாம் இப்போ யாருக்கும் தெரியுறது இல்லை. அப்போ அரசு மருத்துவமனைகள்ல சம்பளமே இல்லாம வாரத்துல ரெண்டுநாள் வைத்தியம் பார்ப்போம். சேவை மனப்பான்மை உள்ள டாக்டர்களைத்தான் கௌரவ டாக்டர்களா நியமிப்பாங்க.

இப்பல்லாம் அந்த சிஸ்டம் இல்லை. அப்பவே தனியா கிளினிக்கும் வெச்சிருந்தேன். ஒரு ரூபா ஃபீஸ் வாங்கிட்டு ட்ரீட்மென்ட் குடுப்பேன். அரசாங்கம் கௌரவ டாக்டர்கள் முறையை நீக்கினதுக்கு அப்புறம் முழு நேரமா தனியாவே மருத்துவம் பார்க்க ஆரம்பிச்சேன். அப்பவும் ஒரு ரூபாதான் ஃபீஸ் வாங்கினேன். இப்போ கன்சல்டிங்குக்கு அஞ்சு ரூபா வாங்குறேன். யாராவது பணம் குடுக்கலைனாலும் கேட்க மாட்டேன். வர்ற நோயாளிகளுக்கு ஒரு நாள், அதிகபட்சம் ரெண்டு நாள்தான் மருந்து, மாத்திரை எழுதிக்கொடுப்பேன். அதுலயும் குறைஞ்ச விலை மருந்துகளாத்தான் எழுதிக் கொடுப்பேன்.

இப்போல்லாம் உடம்பு சரியில்லைனு ஆஸ்பத்திரிக்குள்ள நுழைஞ்சவுடனே அஞ்சு டெஸ்ட்டாவது எடுக்கச் சொல்லிடறாங்கா. நான் எந்த டெஸ்ட்டும் எடுக்கச் சொல்ல மாட்டேன். என் மூளையை மட்டும்தான் யூஸ் பண்ணுவேன். எனக்குக் கிடைக்கும் சாம்பிள் மருந்துகளை எல்லாம் ஏழை மக்களுக்கு இலவசமாகக் குடுத்துடுவேன்.

மத்தவங்களைக் குறை சொல்றது தப்பு. அவங்க எவ்வளவு ஃபீஸ் வாங்குறாங்கங்கிறது எனக்கு முக்கியம் இல்லை. என் மனசுக்கு எது திருப்தியோ அதைத்தான் நான் செய்றேன். என் மனைவி நீலாவும் அப்படித்தான். பணம், பொருளுக்கு ஆசைப்பட மாட்டாங்க.

டாக்டர்களுக்கான கூட்டங்கள்ல பேசும்போது ‘தினமும் பத்து ஏழைகளுக்காவது இலவசமா மருத்துவம் பாருங்க’னு ஒவ்வொருமுறையும் சொல்வேன்.

நிறையப் பேரை படிக்கவெச்சிருக்கேன். ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் மருத்துவம் பார்த்திருக்கேன். இப்போ வயசாயிட்டதால அந்த நேரத்தைக் கொஞ்சம் குறைச்சுட்டேன்.

இன்றைய இளம் மருத்துவர்களுக்கு என்னோட ஒரே வேண்டுகோள்… `இரவு, பகல் பார்க்காம உழைங்க’ அப்படிங்கறதுதான். நம்ம நாடு ஏழை விவசாய நாடு. அதனால வர்ற மக்கள்கிட்ட அன்பா, பாசமா, பொறுமையா வைத்தியம் பார்க்கணும். காஸ்ட்லியான மருந்துகளை எழுதிக்கொடுக்கக் கூடாது. அவங்களால என்ன முடியுதோ அதை மட்டும் ஃபீஸா வாங்கிக்கணும். இல்லையா… சரினு ஏத்துக்கணும். கிராமங்களிலிருந்து அதிகமான டாக்டர்கள் வரணும்கிறது என்னோட ஆசை” என்கிறார் மருத்துவர் ராமமூர்த்தி.

இவர் மட்டுமல்ல… இவரது ஒரே மகன் சீனிவாசனும் மருத்துவர்தான். சிறுநீரகச் சிறப்பு மருத்துவரான இவர் சென்னை தி.நகரில் கிளினிக் வைத்திருக்கிறார். ‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்பதற்கேற்ப இவரும் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வருகிறார்.

Ref : Vikatan

8 Responses to நிஜ மெர்செல் 5 ரூபா டாக்டர்

 1. RAJU NEELAKANTAN says:

  Great inspiration would like to join this group

 2. Venkataraman Ramachandran says:

  Great people and great work

 3. Sreekrishna says:

  God bless for your good service to humanity.

 4. R MURALI says:

  Great,what a helpinghand in this century too. I remember i was his patient when he was running a clinic in SEMPOÑNARKOIL near MAYAVARAM

 5. R MURALI says:

  GREAT IN THESE YEAR TOO.

 6. Dr.C.R.Naveen BDS says:

  Sometimes exhistance of God is proved by great persons walking amongst us,my ananthakodi namaskarams to him

 7. S. Muraleedaran says:

  Yes, I have personally seen you Doctor. I am from Mayiladuthurai Thirumanjana Veedi, Thiru Indalur. My and my family’s aneka koti Namaskarangal to you. We pray for your good health.

  I am at present staying at Nanganallur, Chennai.

 8. panchapakesan ramachandran says:

  I am a patient of Dr Srinivasan. More than a God to me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *