இவரின் எழுத்துகள் மண்ணைக் கிளறும் மழைத்துளிகள்! – தி.ஜா நினைவுக் கட்டுரை

மழையின் முதல் துளி நிலத்தில் விழும்போது எழும் மணம் பிரியமானது. அந்த மழையின் சக்தி இவரின் எழுத்துக்கு உண்டு. மண்ணைக் கிளரும் மழை போலதான் இவர் எழுத்தும், மனத்தைக் கிளறி பேரன்பின் வாசத்தில் நம்மைக் கிறங்க வைக்கும். இந்தச் சின்னஞ்சிறு எழுத்துகளுக்கு அவ்வளவு அன்பின் சுமையைச் சுமக்கும் வலிமையை எப்படி இவர் தருகிறார் என வியக்க வைக்கும். “எனக்கு உலகம் முழுக்க அணைச்சுத் தழுவிப் பிரவாகமா ஓடணும் போலிருக்கு” என்று சொல்லும் இவரின் கதைமாந்தர்கள் படிக்கும் போதே நம் அருகில் அமர்ந்து நம்மை அணைத்துக்கொள்வதைப் போன்ற உணர்வை எழ வைக்கும்.

பார்ப்பவர்களை எல்லாம் கட்டிப்பிடித்துப் பேச, கரம் பிடித்துப் பேச எழும் ஆசைகளைத் தடுக்க நம்மைப் போராட வைக்கும். மண்ணைக் கழுவும் மழையைப் போல, மனதில் படர்ந்திருக்கும் பேதங்கள், பொறாமைகள், கோபதாபங்கள்

விலக்கி மனதின் அடிவார உணர்ச்சிகளைத் தூண்டினால் எழும் வித்தியாசமான, அழகான, இதுவரை அனுபவித்தறியாத, மயக்கும் வாசனையை எழ வைக்கும். இதில் இன்னோர் அழகு என்னவென்றால், நிலத்துக்கு நிலம் மாறும் மண் வாசனையைப் போல் மனதுக்கு மனம் மாறும் வாசனைதான். படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாசனை, ஒவ்வோர் அனுபவம். ஆனால், பேரன்பில் திளைக்கும் சுகம் கண்டிப்பாகக் கிட்டும். அதுதான் தி. ஜானகிராமன்.

இவரின் கதைமாந்தர்கள் பலதரப்பட்டவர்கள். ஆனால், அனைவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இவர்கள் அனைவருமே பிரியமானவர்கள். அதே சமயம், மனித பலவீனங்களையும் இவர் எடுத்துக் காட்டத் தவறியதில்லை. பல்வேறு ஆசைகளும், உணர்ச்சிகளும் கிடந்து போராடும் மனக்களத்தை அதன் பேராசைகளோடு, வெறியோடு காட்சிப்படுத்துவார். நாமே நமக்காக உருவாக்கிக்கொண்ட ‘நியாயத்தின்’ அடிப்படையைக் கேள்வி கேட்பார். சிக்கலான மனித உறவுகள்தான் இவர் கதைகளின் அடிநாதம். அந்தக் கடினமான அடிநாதத்தை அன்பின் வசத்தினால் இயல்பாய், அழகாய், செயற்கைப்பூச்சு எதுவுமின்றி மென்மையாய்த் தன் கதைகளில் படர விடுவார்.

பெண்மையின் வார்ப்பு யமுனா என்றால், தாய்மையின் வார்ப்பு செங்கம்மா. தன் பிரியத்தால் எல்லோரையும் அணைத்துக் கொள்ளத் தவிக்கும் உயிர். தன்னை அடையத் துடிக்கும் ஒருவன், தன் பொருட்டே ஊரை விட்டு விலகி நின்று பலரின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளும்போது, அவனைக் குறித்த அவளின் எண்ணவோட்டம் போதும், அவள் பிரியத்தைப் புரிந்துகொள்வதற்கு. தனக்குத் திருமணமாகிவிட்ட நிலையில், தன் கணவரை உயிராய் நேசிக்கும் அவள், தன் பொருட்டே, தன் உடலழகை முன்னிட்டே அனைவரின் வெறுப்பைச் சம்பாதித்த அவனுக்காகக் கலங்குவாள், அவன் நிலையை எதைச் செய்தும் சரி செய்ய முடியாத இயலாமையை எண்ணி கண்ணீர் வடிப்பாள். இந்த அன்புதான் செங்கம்மா. மனித பேதங்களால் மட்டுமல்ல மனித வக்கிரங்களினால் கூட அவள் அன்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அனைவரையும் அணைத்துப் பிரவாகமாய் ஓட விரும்பும் அனுசூயா, எவரிடமும் கரம் பிடிக்காமல் பேசவியலாத அம்மணி அம்மாள்… அன்பும் அன்பு நிமித்தமும்தான் இவரின் கதைமாந்தர்கள்.

இவரின் படைப்புகளைக் ‘கதை’ என்று குறிப்பிட்டால் அது போதாது. கதை என்பதைத் தாண்டி, இவர் வாழ்க்கையை எழுதுபவர். அன்றைய தஞ்சை மாவட்டத்தின் (இன்று திருவாரூர் மாவட்டம்) மன்னார்குடியில் பிறந்த இவர், அந்த மண்ணின் மைந்தர்களாகத்தான் தன் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளார். தஞ்சை மாவட்டத்து அக்ரஹாரத் தெரு பேச்சு வழக்கும், காவேரி நதியின் செழிப்பும் இவரின் நாவல்களில் தவறாமல் இடம்பெற்றிருக்கும். சிறுவயதிலேயே கர்நாடக இசையைக் கற்றுத் தேர்ந்த இவர், தன் இசைப் புலமையையும் ‘மோக முள்ளில்’ புகுத்தியிருப்பார். பள்ளியில் ஆசிரியராகவும், டெல்லி வானொலி நிலையத்தில் உதவி தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றிய தி.ஜா, பிற்பாடு தமிழ் இலக்கிய மாத இதழான ‘கணையாழியின்’ ஆசிரியரானார்.

Ref : Vikatan

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *