மகாத்மா காந்தி

காந்தி எப்படி மகாத்மா ஆனார்?

அனைத்து ஆன்மீகச் செயல்முறைகளையும் ஒவ்வொருவரும் செய்யமுடியும். இதில் கேள்விக்கே இடமில்லை. அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால், அது மிகவும்

துன்பகரமானது. ஏதோ ஒன்றுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதால்தான் அவர்கள் ஓர் எல்லைக்குள் தங்களை குறுக்கிக் கொள்கிறார்கள். நம் அடையாளங்கள் குறுகிய எல்லைக்குள் இருப்பதால், நம்முடைய சாத்தியங்களும் குறுகிய எல்லைக்குள்ளேயே இருக்கிறது. உடலுடன் உள்ள அடையாளத்தை விட, எவ்வளவு பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதை நீங்கள் உணர்வீர்கள். சரித்திரத்தில் இடம் பெற்ற பலருடைய வாழ்க்கையில் இப்படி நடந்திருக்கிறது. ஒரு குறுகிய எல்லைக்குள் வாழ்ந்துகொண்டு இருந்திருப்பார்கள். ஏதோ ஒரு காரணத்தால், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏதாவது நடந்து அவர்கள் எல்லையை உடைத்துவிடும். பிறகு அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விரிந்த செயல்முறைகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தாங்களே எதிர்பார்க்க முடியாத விஷயங்களைச் செய்வார்கள். உங்களுக்கெல்லாம் தெரிந்த ஓர் உதாரணம்… மகாத்மா காந்தி, மிகுந்த எல்லைக்குள் இருந்த மனிதர். அவர் திறமையான வழக்கறிஞரும் அல்ல. நீதிமன்றத்தில் தைரியமாக எழுந்து சரளமாக பேசக்கூடியவரும் அல்ல. ஆனால் ஒரே ஒரு சம்பவம், திடீரென அவருடைய அடையாளங்கள் கழன்றுவிட்டன.

தென் ஆப்பிரிக்காவில் அவர் வழக்கறிஞர் தொழில் செய்துகொண்டு இருந்தபோது ஒரு நாள் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது நடுவில் ஒரு ரயில் நிறுத்தத்தில் ஏறிய ஒரு வெள்ளைக்காரர், காந்தியிடம் ஒழுங்கான பயணச்சீட்டு இருந்தபோதும் அவர் கறுப்பர் என்பதால் இறங்கச் சொன்னார். காந்தி மறுக்க, அந்த வெள்ளைக்காரர் பயணச்சீட்டு பரிசோதகருடன் சேர்ந்து காந்தியை அவருடைய உடைமைகளுடன் அந்த பெட்டியிலிருந்து தூக்கி வெளியே வீசினார். அப்போது பிளாட்பாரத்தில் விழுந்த காந்தி பல மணி நேரங்களுக்கு அங்கிருந்து எழுந்திருக்கவே இல்லை. “எனக்கு இது ஏன் நடந்தது? நானும் முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தேன், பிறகு நான் ஏன் தூக்கி எறியப்பட்டேன்? இதற்கு வழி காண வேண்டும்” என்று அன்று முதல் மக்களின் பெரிய பிரச்சனைகளுடன் தன்னை தானே அடையாளப்படுத்திக் கொள்ள, காந்தி மகாத்மாவாய் மலர்ந்தார். சிறிய அடையாளங்களைத் தகர்த்தெறிந்து மிகப் பெரிய அடையாளங்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் மகாத்மாவானார்.

மகாத்மா காந்தியைப் போல் வேறு யாரும் இந்தப் பிரபஞ்சத்தில் இவ்வளவு மனிதர்களை வழிநடத்தியதில்லை. அதுவும் மிக எளிய வழிகளில். இந்த நாட்டில் நன்றாக வேர் ஊன்றியிருந்த அன்னியரை போர், வன்முறை போன்ற எந்த வழிகளுமின்றித் துரத்தினார். இந்தப் பிரபஞ்சத்தில் இதற்கு முன் நடந்திராத அதிசயம் இது. இந்த நாட்டை வென்றவர்கள் அதற்கென்று சில விலை கொடுத்துதான் இந்த நாட்டைக் கைப்பற்றினர். அவர்களும் எளிதாகப் போய்விடவில்லை. ஆனாலும், சண்டையில்லாமல், துப்பாக்கி ஏந்தாமல், வன்முறையைக் கடைப்பிடிக்காமல் அவர்களைத் துரத்தியடித்தார் மகாத்மா. இந்த நாட்டு மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுத்த அவரால் முடிந்தது. காவலர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுடுவது ஒரு விஷயம். அவர்கள் மீது குண்டு எறிவது மற்றொரு விஷயம், ஆனால் நிராயுதபாணிகளாகத் தெருவில் சென்று தலையில் அடிவாங்கி மண்ணில் வீழ்வது முற்றிலும் வேறு விஷயம். முதல் பகுதி மக்கள் அடிபட்டு வீழ்ந்தவுடன் அடுத்த குழுவைச் சார்ந்த மக்கள் அடிவாங்கப் போய் நிற்பது என்பது மிகவும் வேறுவிதமான வலிமையான விஷயம். அது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் அப்படிச் செய்வதற்கு மிகவும் ஆழமான மன வலிமை வேண்டும். லட்சக்கணக்கான மக்களை அவரால் அப்படி ஈடுபடுத்த முடிந்தது.

தான், தன் குடும்பம், தன் வாழ்க்கை என்ற எல்லையை விட்டுவிட்டு அப்போது சமூகத்தில் நிலவிவந்த மக்களின் முக்கியப் பிரச்சனைகளோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால் அவருடைய சிறிய அடையாளம் சிதறியது. எனவே நீங்கள் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று நிர்ணயித்து ஓர் எல்லைக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களால் செய்ய முடிந்த எதையும் செய்யுங்கள். செய்ய முடியும் என்று நினைக்கும் எதையும் செய்யுங்கள்!

Ref : Isha Blog

 

 

One Response to மகாத்மா காந்தி

  1. Raghuraman says:

    Alas ….
    Gandhi was a non brahmin
    and the killer of that Great Soul was a Brahmin

    Has this community ever regretted for the terror act of Godse…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *