Janakiraman

நான் எழுத வந்ததும், தி.ஜானகிராமனைப் பற்றிய பிம்பம் எனக்குள் உருவானதும் 1970-களில்தான். அப்போது என் வயது 25-ஐக்கூட எட்டவில்லை. ஆனந்த விகடனில் 1970-களில் தி.ஜானகிராமனின் ஒரு முத்திரைச் சிறுகதையோடு அவர் பிறந்த ஊரின் சிறப்புகளைப் பற்றி அவரே எழுதிய சிறு கட்டுரையும் வெளிவந்தது. அப்படித்தான் நான் ஜானகிராமனின் பிறந்த ஊர், கீழவிடயல் கருப்பூர் என்பதைத் தெரிந்துகொண்டேன். அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், வலங்கைமானுக்கு மிக அருகில் அமைந்த ஊர். தி.ஜானகிராமனின் பிறந்த ஊரைத் தெரிந்துகொண்டவுடன், அவரை நேரில் சந்தித்துவிட வேண்டும் என்ற தவிப்பு மேலோங்கிவிட்டது. நானிருப்பது, தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்துக்கு அருகிலிருக்கும் இடையிருப்பு. என் ஊருக்கும் கீழவிடயலுக்கும் சுமார் பதினாறு மைல்கள்தான். பேருந்து வசதி இருந்தது. அவர் முகத்தையாவது நேரில் பார்த்துவிட்டு வந்துவிடவேண்டும் என்ற தவிப்பான தவிப்பில் பேருந்து ஏறிவிட்டேன்.

கீழவிடயலில் இறங்கி கப்பி ரஸ்தாவில் கொஞ்ச தூரம் நடந்ததும் ஊர் வந்தது. என் முன்னால் தென்பட்டவர்களிடம் அவரைப் பற்றி விசாரித்தேன். “அக்ரஹாரத்துக்குள் போய்க் கேளுங்கள், சொல்வார்கள்” என்றார்கள்.அக்ரஹாரத்துத் தெருமுனையில் நின்றபடி, யாரை விசாரிப்பது என்ற குழப்பத்தில் நின்றுகொண்டிருந்தேன். சற்றைக்கெல்லாம் கட்டுக்குடுமி, பஞ்சகச்சம், பூணூல் சகிதமாய் வந்த ஒரு பெரியவர் என் முன்னால் வந்து, “அம்பி யார், எந்த ஊர்?” என்பதுபோல் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார். நான் “எழுத்தாளர் ஜானகிராமனை சந்திக்கவேண்டும்” என்றேன். ‘`ஓ… ஜானகியைப் பார்க்கவந்த பையனா? ஆத்துலதான் இருந்துண்டு இருக்கார். அதோ அந்த நாழி ஓடு போட்ட வீடுதான். போய்க் கேளு’’ என்று கை காட்டவும் அப்பெரியவரோடு பேசுவதைத் தவிர்த்துவிட்டு, அவர் கைகாட்டிய வீட்டிற்குச் சென்றேன்.

முன்வாசலோடு கூடிய திண்ணையில் நடுத்தர வயதுடையோர் ஐந்தாறு பேர் கும்பலாக உட்கார்ந்துகொண்டு சுதிப்பெட்டி சகிதமாய்ச் சங்கீத சம்பாஷணைகளில் தீவிரமாய் இருந்தார்கள். பூஜைவேளைக் கரடியாக நான் போய் நின்றதும், அவர்கள் சம்பாஷணைகளை விட்டுவிட்டு என்னைப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவர் என்னைப் பார்த்ததும் மிகவும் கனிவாக, “அம்பி யார், எந்த ஊர்?” என்று கேட்டார். நான் என்னைப்பற்றிய விவரங்களைச் சொன்னேன்.

‘`மதுரை சோமு இருக்காரோன்னோ திருக்கருகாவூர், அந்த ஊருக்கும் பக்கமா?’’

‘`ஆமாம் ஐயா, அந்த ஊருக்கும் பக்கம்தான். சரியாக ஒரு மைல் தெற்கே போனால், இடையிருப்பு. அதுதான் என் ஊர்’’ என்றேன்.

‘`சரி, அம்பி என்ன வேலையா இங்க வந்த?’’

‘`ஜானகிராமனைப் பார்க்க வந்தேன்.’’

‘`நான்தான் ஜானகிராமன்… என்னையா பார்க்க வந்தே?’’

அதிர்ந்துவிட்டேன் நான். நான் பார்க்க வந்த ஜானகிராமனா இவர்? செக்கச்செவேலென்று தாட்டிகையுமில்லாத பருமனும் அல்லாத அளவான திரேகத்தோடு கருணையும் மென்மையும் தவழும்படியான முகம்.

‘`ஆமாம் ஐயா, உங்களைத்தான் பார்க்க வந்தேன்.’’

‘`சரி, முதலில் நீ உட்கார். தூர்த்தம் சாப்பிடுறியா?’’

‘`அதெல்லாம் வாணாம் ஐயா, உங்களைப் பார்த்ததே எனக்குப் பெரிய சந்தோஷம்.’’

“அதெல்லாம் இருக்கட்டும். இவ்வளவு தூரம் பிரயாசை எடுத்துண்டு வந்திருக்கே. கூச்சமெல்லாம் படக்கூடாது. வந்த களைப்பு, ஆயாசமெல்லாம் இருக்குமோன்னோ… தூர்த்தம் சாப்பிடு.’’

வீட்டுக்குள் பார்த்துக் குரல் கொடுக்கவும், தண்ணீர் வருகிறது. தண்ணீர் சொம்பை உதடுபடாமல் தூக்கிக் குடித்துவிட்டுச் திண்ணையில் வைத்தேன். அவர் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போதுதான் நான் அவரைப் பார்க்கின்றேன். மற்றவர்கள் சங்கீத சாகரத்தில் மூழ்கியபடி தீவிரமாய் உரையாடிக்கொண்டும் பாடிக்கொண்டுமாய் இருக்கிறார்கள்.

`சரி, என் கதைகளை வாசித்திருக்கிறாயா… எந்தக் கதையெல்லாம் வாசித்தேன்னு சொல்லமுடியுமா?’’

‘`வாசித்ததனால்தான் உங்கள்மீது பிரியம்கொண்டு பார்க்க வந்தேன்’’ என்று சொல்லிவிட்டு, தெரிந்தவரை அவர் கதைகளைப் பற்றிப் பேசுகிறேன். நான் பேசப் பேச அவர் பரவசப்பட்டுப் போகிறார். “நானும் கதைகள் எழுதுவேன்’’ என்று சொல்லி விட்டு என்னைப் பற்றிய சிறிய அறிமுகத்தையும் செய்து கொள்கின்றேன். அவற்றை யெல்லாம் கேட்டதும் சந்தோஷப்படுகிறார்.

‘`நீங்கள் பாடுவீர்களா ஐயா?’’

‘`பார்த்தால் தெரியலை… அந்தப் பிரக்ஞையெல்லாம் என்னிடம் கொஞ்சம்போல் உண்டு. நான் டெல்லியிலேருந்து இங்க வந்துட்டா இவாளெல்லாம் வந்துடுவா, ஒரே சங்கீத அமர்க்களம்தான்… ஆமாம் நீ பாடுவியோ?’’

‘`நானும் கொஞ்சம்போல் பாடுவேன்’’

‘`குரு வெச்சிண்டு பாடம் கத்துண்டயோ?’’

‘`அப்படியெல்லாம் எதுவுமில்லை. கேள்வி ஞானம் மட்டும்தான்.’’

‘`கீர்த்தனையெல்லாம் பாடுவயோ?’’

‘`ஐந்தாறு தெரியும். ரேடியோவில் கேட்டதுதான்.’’

‘`எங்கே ஒரு பாட்டு பாடு, பார்ப்போம்.’’

நான் பாடுகிறேன்.

‘`ஸ்ரீவேங்கட கிரி ஸ்மாலோ ஹய… விநாயக தூர ஹாருடம்… ஸ்ரீ வேங்கட கிரி…’’

‘`பலே பலே … பேஷ் பேஷ்… நன்னா அட்சரம் பிசகாமல் பாடறியேடா அம்பி. குருவெல்லாம் வெச்சிண்டு கத்துக்கிட்டா ஜொலிப்பே. ஆமா, இது என்ன ராகம்?’’

“சுருட்டி’’

‘`பலே, உனக்கு ஞானமெல் லாம் பகவான் கொடுத்தி ருக்கார். நன்னா வருவே… அமர்க்களம்.’’

‘`இவன் பிராமணனா பொறக்க வேண்டிய பையன். தப்பிப் போய்ச் சூத்ரனாப் பொறந்துட்டான்’’ – உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவர் சொல்கிறார்.

‘`எவனா பொறந்தா என்ன ஓய்? ஞானம் இருக்கு பாடுறான்’’ – ஜானகிராமன் சொல்கிறார்.

இந்தச் சம்பாஷணைகள் தானோ என்னவோ, நான் பின்னாளில் ‘ஐந்து பெண் மக்களும் அக்ரஹாரத்து வீடும்’ என்ற நாவலை எழுதுவதற்கு உந்துசக்தியாக இருந்தது. அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு கிளம்பும் போது எதையோ இழந்துவிட்டு வருவதைப்போல்தான் ஊர் வந்து சேர்ந்தேன்.

1970களிலிருந்து நான், தஞ்சை பிரகாஷை தினசரி சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். எங்கள் சந்திப்பு, தஞ்சை பிரகாஷ் உயிருடன் இருந்த காலம்வரை, சுமார் 30 ஆண்டுகள் நடந்தது. அவருடனான பழக்கத்தின் மூலமாகத்தான் நான் தமிழின் முக்கிய ஆளுமைகளை யெல்லாம் சந்திக்கவும் பழகவும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்படித்தான் ஒருநாள் பிரகாஷை சந்திக்கச் சென்றபோது சொன்னார். ‘`முத்து, நாளை ஜானகிராமன் தஞ்சாவூர் வருகிறார். இரண்டு நாள் தங்குகிறார். மெய்ப்புத் திருத்த வந்த உன் நாவல் பிரதியை ஜானகிராமனிடம் கொடு. இரண்டுநாள் சந்தர்ப்பத்தில் உன் நாவலைப் படித்துவிடுவார். உன் முதல் நாவல் தி.ஜானகிராமனின் முன்னுரையோடு வரட்டும்’’ – பிரகாஷ் இப்படிச் சொன்னது என் காதுகளில் தேன்வந்து பாய்ந்ததுபோல் இருந்தது. தஞ்சாவூர் அசோகா லாட்ஜில் ஜானகிராமன் தங்கியிருந்தார். நானும் பிரகாஷும் என் முதல் நாவல், ‘நெஞ்சின் நடுவே’யை எடுத்துக்கொண்டு ஜானகிராமனைச் சந்தித்தோம். கீழவிடயலில் நான் அவரை முதன்முதலாகப் பார்த்தபோது பார்த்த தேகக்கட்டு உடைந்து போயிருந்தது. கொஞ்சம்போல் மெலிந்து இருந்தார். நாவலைக் கொடுத்ததும் சந்தோஷப் பட்டார்.

‘`நாவல் எழுதுகிற அளவுக்கு வளர்ந்து விட்டாயா நீ?’’ என்று ஆச்சர்யப்பட்டு முதுகில் தட்டிக்கொடுத்தார்.

‘`நாளை தஞ்சாவூர் வருவாயா?’’ என்று கேட்டார்.

‘`வருவேன்’’ என்றேன்.

அவர் சொன்னதுபோல் மறுநாள் சென்றேன். அவருடன் பிரகாஷும் இருந்தார். என்னை ஜானகிராமன் கட்டிப்பிடித்துக் கொண்டு, ‘`இது உன்னுடைய முதல் நாவலாகத் தெரியவில்லையே… ஐந்தாவது ஆறாவது நாவல் போலல்லவா இருக்கிறது. உன்னைப்போல் நான் எழுதிவிடமுடியாது. ஆனால் நீ என்னைப்போல் எழுதிவிடலாம்’’ என்றார். ‘`நன்னா வருவடா நீ’’ என்றும் சொன்னார். ‘`உங்கள் ஆசீர்வாதம்’’ என்றேன். இந்த நிகழ்வு நடந்து சில நாள்களில் காலம் அவரை எடுத்துக்கொண்டது. அவரது முன்னுரை இல்லாமல்தான் என் முதல் நாவல் வெளிவந்தது.

நட்பைப் பேணுவதில் தி.ஜானகிராமனைப் போல் ஒரு ஆகிருதியை நான் கண்டதில்லை. எம்.வி.வெங்கட்ராம் மீது அவர் பெரும் நட்பும் அன்பும் கொண்டிருந்தார். தி.ஜானகிராமன் புதுடில்லியில் பணியிலிருந்த சமயம் அது.

எம்.வி.வி அவர்கள் உடலும் மனமும் நலிவுற்றிருந்ததைக் கேள்விப்பட்டு தஞ்சை பிரகாஷுக்குக் கடிதம் எழுதி, எம்.வி.விக்கு உதவி செய்யும்படி வற்புறுத்தியிருந்தார். பிரகாஷும் தி.ஜானகிராமன் சொல்லை ஏற்று எம்.வி.விக்கு உதவிசெய்தார். பிரகாஷ் மதுரையில் இருந்தபோது, பி.கே புக்ஸ் என்ற பெயரில் பதிப்பகமும் ‘பாலம்’ என்ற பெயரில் இலக்கியப் பத்திரிகையும் நடத்திக் கொண்டிருந்தார். அதில், கி.ராஜநாராயணன், அம்பை, ஆ.மாதவன் போன்றோர்களின் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருந்தார். தி.ஜானகி ராமன் ‘கொட்டுமேளம்’, ‘சிவப்பு ரிக்‌ஷா’ என்ற தனது இரண்டு சிறுகதைத் தொகுப்புகளின் பதிப்புரிமையைப் பிரகாஷுக்கு வழங்கியிருந்தார். ‘அது எம்.வி.விக்கு பிரகாஷ் செய்த உதவிக்கு நன்றிக் கடனாக’ என்று கடிதமும் எழுதியிருந்தார். ஆனால், ஏதோ சூழல் காரணமாக பிரகாஷால் அந்த இரண்டு நூல்களையும் கொண்டுவர முடியவில்லை. பிறகு, அவற்றை பிரகாஷ் ‘வயல்’ மோகனுக்குக் கொடுத்து வயல் வெளியீடாக மிகவும் நேர்த்தியாக அந்த இரண்டு நூல்களும் வெளிவந்தன. இந்த இடத்தில் நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ‘மனுஷ பட்சம்’ என்று எங்கள் கிராமத்தில் வட்டார வழக்குச் சொல் ஒன்று உண்டு, கலைஞன் என்ற அந்தஸ்தையெல்லாம் தாண்டிய ‘மனுஷ பட்சமான மனிதர்’ தி.ஜானகிராமன் என்பதைச் சொல்வதற்குத்தான்.

எம்.வி.வி, கரிச்சான் குஞ்சு, தேனுகா மூவரையும் கும்பகோணம் பஞ்சாமி ஐயர் ஓட்டலில்தான் பார்க்க முடியும். அவர்கள் மூவரையும் அந்த ஓட்டலில் வைத்துப் பார்க்கிறபோது ‘மோகமுள் யமுனா எந்தத் தெருவில் இருக்கிறாள் என்று சொல்லுங்கள்’ என்றுதான் கேட்பேன். மடத்துத் தெரு, சுக்கம்பாளையம், மோதிலால் தெரு, காசுக்கடை தெரு, பாணாத்துறை, மொட்டை கோபுர வாசல் என்று கும்பகோணத்தில் யமுனாவைத் தேடி நான் அலையாத இடம் பாக்கி இல்லை. தி.ஜா கும்ப கோணத்தை மட்டுமல்ல, மாயூரம், சீர்காழி என்று தன் கதைக் களன்களை அமைத்துக் கொண்டவர். அங்கெல்லாம் போகும் தருணம் கிட்டும்போது நான் தி.ஜாவைத்தான் நினைத்துக் கொள்வேன். இப்போதைய என் 70 வயதிலும் கூட நான் யமுனாவை மறந்துவிடவில்லை. இப்போதும் தேடித்தான் அலைந்துகொண்டிருக்கிறேன்.

தி.ஜானகிராமன் இப்போது மோட்சத்தில் இருப்பார். கலைஞர்கள் எல்லோரும் மோட்சத்துக்குத்தான் போவார்கள். நானும்கூட மோட்சத்திற்குத்தான் போவேன். அங்கு போனதும் தி.ஜானகிராமனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரு கேள்வி கேட்க வேண்டும். ‘ஐயா, இப்போதாவது சொல்லுங்கள், ‘மோகமுள் யமுனா’ உண்மையான கதாபாத்திரம்தானே… அந்த மூக்கும் முழியும் நெளிவும் சுளிவும் உண்மையானதுதானே’ என்று. அவரைச் சந்தித்த இளம்பிராயத்தில் அதைக் கேட்கிற துணிச்சல் எனக்கு வரவில்லை.

written by : சி.ஏ.முத்து

Ref : Vikatan.com

Link : https://www.vikatan.com/arts/literature/a-tribute-article-to-tamil-writer-thi-janakiraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *