Zero to Hero – PN Vasudevan

மாதக் கடைசியில் வீட்டு செலவுகளைச் சமாளிக்கவே திண்டாடிய குடும்பத்தில் பிறந்து, கல்லூரியில் படித்து முடிக்கும்வரை தான் என்னவாக ஆக வேண்டும் என்றுகூட யோசிக்காத ஒருவர், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்படும் முதல் தனியார் வங்கிக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

அவர்தான் எக்விடாஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.என்.வாசுதேவன். ஜீரோவில் தொடங்கி இன்று ஹீரோவாக இருக்கும் அவரது வாழ்க்கை கதையை அவரே சொல்கிறார்.

இரண்டு முறை ஆறாம் வகுப்பு!

“என் அப்பா சமஸ்கிருத வாத்தியார். அம்மா வீட்டை கவனித்து வந்தார். அப்பாவின் சொற்ப சம்பளத்தில் காலத்தைத் தள்ளினோம். அம்மா பெரிதாக படித்தவரில்லை. என்றாலும், எங்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார்.

ஆறாவது வரை தமிழ் மீடியத்தில் படித்தேன். ஐஐடியில் உள்ள கேந்திரா வித்யாலயாவில் ஏழாம் வகுப்பில் சேர நுழைவுத் தேர்வு எழுதினேன். ஆனால், பாஸாகவில்லை. எனவே, என்னை ஆறாம் வகுப்பிலேயே சேர்த்துவிட்டார்கள். இதனால் இரண்டு முறை ஆறாம் வகுப்பு படித்தேன்.

கல்லூரியில் படித்து முடித்தபின், என்ன வென்று தெரியாமலே கம்பெனி செகரட்டரி படித்தேன். அது முழுக்க சட்டம் தொடர்பானது என்றாலும் அதில் எனக்கு ஆர்வமிருப்பதை புரிந்துகொண்டேன். தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தேன்.

கம்பெனி செகரட்டரி படிக்கும்போது கடைசி வருடம் மேனெஜ்மென்ட் டிரெயினிங் செய்ய வேண்டும். 1986-ல் சோழமண்டலம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் டிரெயினிங் சேர்ந்தேன். என் டிரெயினிங் முடியும்போது அப்போது இருந்த அசிஸ்டென்ட் கம்பெனி செகரட்டரி வேலையிலிருந்து விலகினார். கம்பெனி செகரட்டரி அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள என்னிடம் கேட்டார். நானும் ஏற்றுக்கொண்டேன். ஃபைனான்ஸ் துறையில் என் வாழ்க்கை தொடங்கியது.

பிசினஸ் கற்றுக்கொண்டேன்!

இரண்டு வருடம் அசிஸ் டென்ட் கம்பெனி செகரட்டரி யாக இருந்தபோது பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அப்போது திடீரென்று அந்த நிறுவனத்தின் கம்பெனி செகரட்டரி வேலையை விட்டு விலகினார். அந்தப் பொறுப்பை என்னிடம் தந்தார்கள். அப்போது கம்பெனிகளுக்கு மட்டுமே கடன் தந்து வந்தோம். ரீடெயில் கடன்கள் தர வில்லை. 1991-ல் முதன்முறை யாக வாகனங் களுக்கான கடன் தரத்  தயாரானபோது, அதன் இயக்குநர் “எவ்வளவு நாளைக்கு கம்பெனி செகரட்டரியாக இருக்கப் போகிறாய், பிசினஸுக்கு வா” என்று அழைத்து, என்னிடம் வாகனங்களுக் கான கடன் வழங்கும் பிசினஸ் பொறுப்பைத் தந்தார். அதைத் தொடங்கி கிட்டதட்ட 15 வருடங்கள் நடத்தினேன். இன்று அதன் சந்தை மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி.

எனக்கான இடம்…! 

2005-ல் சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் பேங்குடன் ஜாயின்ட் வென்சர் ஆரம்பித்தோம். அப்போது அதன் சிஇஓவாக நான் நியமிக்கப்பட இருந்த நேரத்தில், டிபிஎஸ் பேங்க் நிறுவனத்தைச் சேர்ந்தவர்தான் சிஇஓவாக இருக்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கான இடம் இல்லை என்றவுடன் நான் அந்த வேலையை விட்டு விலகினேன். வேலை போய் விட்டதே என்று மனம் உடைந்து போகாமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

வித்தியாசமான நகரம்!

மும்பையில் டிசிபி பேங்கில் வேலைக்குச் சேர்ந்தேன். மும்பை என்பது முற்றிலும் வேறொரு நகரம். பிசினஸ் உள்பட அங்கு எல்லாமே வித்தியாசமாக நடக்கும். எனக்கு அங்கு வேலை செய்வது மிகவும் பிடித்திருந்தது. அங்குதான் கன்ஸ்யூமர் பேங்கிங் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டேன். ஆனால் சிக்கல் வேறு விதமாக வந்தது.

நாங்கள் தங்கியிருந்த கிழக்கு மும்பை முழுக்க தொழிற்சாலை களின் புகை எப்போதும் இருக்கும். என் மகளுக்கு அப் போது மூன்று வயது. மும்பையில் தொடர்ந்து இருந்தால், உடல் நலம் பாதிக்கும்  என்பதால் சென்னைக்கே திரும்பி வந்தேன்.

சென்னையில் ஏதாவது ஒரு வங்கியில் வேலைக்குப் போக லாம் என்றால் எந்த வங்கியின் தலைமையிடமும் இங்கு இல்லை. பெரிய பொறுப்புகளில் இருந்து விட்டு, இங்குள்ள பிராந்திய அலுவலகங்களில் வேலை செய்ய மனம் வரவில்லை. இந்த நிலையில், என் நண்பர்களில் சிலர், ‘‘நீ ஏன் ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் தொடங்கக் கூடாது?’’ என்று கேட்டனர். காரணம், எனக்கு அதில் அனுபவம் இருந்தது. சரி, சந்தை நிலைமையை ஆராய்ந்து பார்ப்போம் என்று சென்னை அசோக் நகர் மெயின் ரோட்டில் இருந்து சிறிய சந்துக்குள் பைக்கில் போனபோது தான் தெரிந்தது, அடுத்த வேளை சோற்றுக்கு உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை வாழும் மக்கள் பலர் இருக்கிறார்கள் என்று. அங்கு தான் நான் யாருக்காக என் வாழ்க்கையைத் திட்டமிட வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

எக்விடாஸ் என்றால்..!

அங்குள்ள மக்களுக்கும், அவர்களுக்கு கடன் வழங்கும் வங்கிகள், ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கும் இடையே இடைவெளி இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. அங்குள்ள மக்களுக்கு நிலையான வருமானம் இல்லை. இதர செலவுகளுக்கு கந்து வட்டிக்கும், அதிக வட்டிக்கும் கடன் வாங்கி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாவதைப் பார்த்தேன். அவர் களுக்கு மைக்ரோ ஃபைனான்ஸ் சரியாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்த நிலையை மாற்ற வேண்டும் என்று நினைத்து, அவர்களுக் காகவே 2007-ல் தொடங்கப் பட்டதுதான் எக்விடாஸ் ஃபைனான்ஸ் நிறுவனம். எக்விடாஸ் ஒரு லத்திய மொழி வார்த்தை. இதற்கு ‘நியாயமும் வெளிப்படையும்’ என்பது அர்த்தம்.

நாங்கள் வெற்றியடையக் காரணம், ஏழைகளுக்குக் கடனுடன் சேர்த்து மரியாதையும் கொடுத்தோம். மற்ற நிறுவனங்கள் 40% வட்டியில் கடன் தந்தார்கள்.  நாங்கள் 25.5 சதவிகித வட்டியில் கடன் கொடுத்தோம். அதேபோல், கடன் தந்தவரின் பாதுகாப்புக்காக கடன் கொடுப்பவரால் எடுக்கப் படும் இன்ஷூரன்ஸ்க்கு கமிஷன் வாங்கக்கூடாது என்று முடிவெடுத்தோம். நாங்கள் வைத்திருந்த இந்த பாலிசிகள் பின்னர் ரிசர்வ் வங்கியினால் விதிமுறை யாகவே மாற்றப் பட்டது.

தொழில்முனைவோர்களை உருவாக்கினோம்!

நாங்கள் கடன் மட்டும் வழங்கவில்லை; மாறாக ஏராளமான தொழில்முனை வோர்களை உருவாக்கினோம். எங்களுடைய பிசினஸ் அடிப்படையே அதுதான். கடனைக் கொடுத்து வசூலிப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை தரவேண்டும் என்று முடிவு செய்தோம்.

வீடுகளில், தெருக்களில் தொழில் செய்து கொண்டிருப் பவர்களுக்குக் கடன் வழங்கி முறையாக ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து சிறப்பாக தொழில் செய்ய உதவி செய்கிறோம்.

எங்களுடைய அனைத்து கடன் திட்டங்களுமே மிகவும் கீழ்நிலையில் இருப்பவர் களுக்கானது. இதன் மூலம் ஏராளமானோர் பயன் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, பெண்கள். இன்று இந்தியா முழுவதும் 124 மாவட்டங் களில் 361 கிளைகளுடன் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்களைக் கொண்டிருக்கிறது. இதுவரை ரூ.7,309.29 கோடி கடன் வழங்கப் பட்டிருக்கிறது.

இனி எக்விடாஸ் வங்கி!

தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு தனியார் வங்கி தொடங்க (ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்) ரிசர்வ் வங்கி அனுமதி தந்துள்ளது. அதற்கு வெளிநாட்டு முதலீடு 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதால், பொதுப் பங்கு வெளியிட்டோம். வரும் செப்டம்பரில் எக்விடாஸ் வங்கியைத் தொடங்க இருக்கிறோம். நாடு முழுக்க 412 கிளைகளுடன் செயல்படும். சென்னையில் மட்டும் 25 கிளைகள்.

இதுவரை வங்கிகளிடமிருந்து பணம் வாங்கி கடன் கொடுத்து வந்தோம். இப்போது வங்கியாக மாறுவதால், நாங்கள் டெபாசிட் மூலம் மட்டுமே பணம் சேர்த்து கடன் வழங்க வேண்டும். ஆனால், இதில் சவாலும் இருக்கிறது. குறை வான வருமானம் பெறுபவர்கள் தங்களின் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதில்லை.

எனவே, ஒவ்வொரு பகுதியிலும் பிரபலமான ஒரு கடையை பிசினஸ் கரஸ்பாண்டன்ட் டெர்மினலாக மாற்றி, அங்குக் கடனை வழங்குவதோடு மட்டு மல்லாமல் அவர்களை டெபாசிட் செய்ய வைக்கவும் திட்டமிட்டுள்ளோம். தினக்கூலி வாங்கும் பெரும் பாலானோர் கையில் அன்று மிஞ்சும் 50 ரூபாயை அங்கே உடனே டெபாசிட் செய்ய லாம். ஏதேனும் அவசர மென்றால் அவர்கள் அங்கிருந்தே பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

எங்கள் வங்கியின் நோக்கம் கடன் வாங்காமல் சேமிப்பு செய்து வைத்து செலவு செய்யும் பழக்கத்தை மக்களிடம் கொண்டுவர வேண்டும். அதன் முதல்படியாக ‘பிக்கி பேங்க்’ என்ற உண்டியல் திட்டத்தைத் தொடங்கியிருக் கிறோம். எங்கள் வாடிக்கை யாளர்கள் அனைவருக்கும் உண்டியல் தந்து சேமிக்கச் சொல்லி இருக்கிறோம். வங்கி தொடங்கப்பட்டதும் அவர்கள் அந்த உண்டியலை அப்படியே கொண்டுவந்து டெபாசிட் செய்து எங்கள்  வங்கியில் கணக்கு தொடங்க லாம்” என்று கூறி முடித்தார்.

எந்தவொரு பிரச்னை வந்தாலும் எடுத்துக்கொண்ட வேலையில் விடாமுயற்சி யுடன் நேர்மையுடனும் வெளிப்படையாகவும் இருந்தால் இவரைப் போல அனைவருமே வாழ்க்கையில் மிகப் பெரிய உச்சங்களை வென்று காட்டலாம்!

கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

1. பிசினஸ் செய்ய பணம் ஒரு பிரச்னை இல்லை. சரியான திட்டம்      இருந்தால், பலரும் கடன் தர தயாராக இருக்கிறார்கள்!

2. பிசினஸ் தொடங்கும்முன் அந்தத் துறையில் வேலை செய்து அனுபவம் பெறுவது கட்டாயம்.

3. பிசினஸை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செய்ய வேண்டும்.

4. ஆங்கிலம் ஒரு பிரச்னையே இல்லை. தொடர்ந்து படித்தால் எளிதில் கற்றுக்கொள்ளலாம்.

5. மக்களுக்குத் தேவைப்படுவதை தருவதே பிசினஸ்.

Ref; Nanayam Vikatan – 2016-July-31

4 Responses to Zero to Hero – PN Vasudevan

  1. Great Vasu! Keep it up! As founder and editor of Green India(online) and Intellectuals for India, we will invite you for ourApril 14, Tamil New Year seminar on finance, accounts, taxation and insurance, to tell us your story.
    All the best, for All, Always.

    • Dear sir
      Instead of giving lecture on ones prograss
      We will give opportunity to increase production in agriculture eliminating chemical fertilisers and pesticides now in use. Minimum 30%more yield than normal practise.

  2. Sankar IYER says:

    A business man, all challenges,we are born to win . happy to read your story
    I am sankar IYER from Chennaimy per mobile.9176633006

  3. Sankar IYER says:

    I would like to speak in general and for business development together possible..call 9176633006..or SMS me

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *