கப்பலோட்டிய இந்தியன் – ஒரு தமிழன்
வ உ சிதம்பரம் பிள்ளை 1893ல் இந்திய நாட்டின் சுதந்திரப்போரில் ஈடுபட அவருக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் சிலர்..,ஒன்று சுவாமி விவேகானந்தரின் எழுத்துக்கள், மற்றொருவர் மராட்டி சிங்கம் லோகமான்ய பாலகங்காரதிலகர். தென்னிந்தியாவில் ராமகிருஷ்ண இயக்கத்திற்கு வித்திட்ட, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியுமான ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துறவியான ’சுவாமி ராமகிருஷ்ணானந்தருடனான’(சசி மகராஜ்) சந்திப்பு வ.உ.சி யின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்திய தேசிய காங்கிரசில் 1898ல் சேர்ந்தார். அவர் எழுதிய முதல் அரசியல் கட்டுரை “விவேகபானு‘ என்ற இலக்கிய பத்திரிகையில் முதன் முதலாக பிரசுரம் ஆகி வெளிவந்தது. அதில் அவர் எழுதிய அரசியல் சிந்தனைகள்..
1. பாரத மக்கள் உணவின்றி, உடையின்றி, இருக்க இடமின்றி நோய் நொடியோடு மடிந்து அடிமைப்பட்டது போதும்.
2. பெற்ற தாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு சொந்த நாடும் முக்கியமானது.
3. இந்தியர்கள் ஒன்றுபட ஜாதியும், மதமும் தடையாக உள்ளன.
4. ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து விடுதலைபெற ஓரணியில் திரள வேண்டும்….
வ.உ.சி வெறும் கட்டுரை எழுதிவிட்டு சும்மா இருக்க வில்லை. விடுதலைப் போரை துவக்கும் முயற்சியில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 1901 கல்கத்தா காங்கிரஸ் மகாசபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நாட்டில் உயர்ஜாதி மக்களைப் போல் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றினால்தான் நாடு உயர்வடையும் என்ற சுவாமி விவேகானந்தரின் எழுத்துக்கள் வ.உ.சியை மேலும் உத்வேகம் கொள்ள வைத்தது…
தேச துரோக குற்றத்தில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற முதல் இந்தியரான இவர் கடும் சட்ட போராட்டங்களுக்கு பின் டிசம்பர் 24, 1912ல் விடுதலை பெற்றார்..
விடுதலை பெற்று வெளியில் வந்த அவரை நேரில் வரவேற்றவர்கள் மிக சிலரே என்பது கொடுமை…அதிலும் இன்று என் சாதிக்கு மட்டுமே சொந்தம் வ.உ.சி என கொண்டாடும் இவரது இன்றைய சாதிய சொந்தங்கள் கிட்டே நெருங்க கூட வில்லை.
வெளியில் வந்தவரை சுப்பிரமணிய சிவா தொழு நோயோடு வ.உ.சியை புகைவண்டி நிலையத்தில் வரவேற்றார். வ.உ.சி. கட்டிப்பிடித்து சிவாவை தழுவி கண்ணீர் விட்டார். சிறைக்கொடுமை சுப்பிரமணிய சிவாவுக்கு தொழுநோயை பரிசாக கொடுத்தது.
தூத்துக்குடியில் இருந்து வெளியேறி சென்னை சென்று வறுமையை போக்கிக்கொள்ள மளிகைக்கடை ஆரம்பித்தார். ஏழைகளுக்கு மளிகை சாமான்கள் கடனாக கொடுத்து வசூலிக்க முடியாமல் விரைவில் மளிகைக் கடையை இழுத்து மூடினார்..கப்பல் வாங்கி வியாபாரம் நடத்தியவருக்கு மளிகை வியாபாரம் கைகொள்ளவில்லை…
அரசியல், தொழிற்சங்கம், இலக்கிய பணிகளை அயராது செய்து விடுதலை போரில் வீர இளைஞராக வலம் வந்த வ.உ.சி 1934ஆம் ஆண்டு ஜனவரி 24ல் காந்தி தூத்துக்குடிக்கு வந்தபோது “தீண்டாமை ஒழிப்பு‘ ஆதரவு பிரச்சாரம் நடத்தினார்.
ஒரு ஹரிஜனத் துறவியை தனது வீட்டில் தங்க வைத்து அடைக்கலம் கொடுத்தார். அவரது “சாதிக்காரர்கள்” எதிர்த்தும் வ.உ.சி கேட்கவில்லை.
தனது இறுதி காலத்தில் காந்தியின் அஹிம்சை வழியில் போராடி விடுதலை வாங்குவது என்ற கருத்தில் உடன்பட்டார். 1936 நவம்பர் 18 அன்று என்று தணியும் இந்த சுதந்திரதாகம் என்ற பாடலை பாடச்சொல்லி அதைக் கேட்டுக்கொண்டே இரவு 11.30க்கு தனது சுவாசத்தை நிறுத்திக்கொண்டார்….
செக்கிழுத்த செம்மலாகவும், கப்பலோட்டிய இந்தியனாகவும் இன்றும் நம் மண்ணில் புகழோடு வலம் வரும் வ.உ.சி வாழ்க்கையை ஒவ்வொரு இந்திய குடிமகனும் அறிய வேண்டும்.
மேலும் சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்; ஆயிரம் ஆயிரம் வீரர்கள் வ.உ.சியைப் போன்று தியாகம் செய்து வாங்கிய விடுதலை என்ற உணர்வை நாம் பெற்றால் நாட்டுப்பற்று செழித்தோங்கும்; நாடு முன்னேறும்…
Leave a Reply