Tribute to Ashokamitran

அசோகமித்திரன்: ஓய்வில்லா எழுத்தியக்கம்

தமிழின் மாபெரும் எழுத்தாளர்களுள் ஒருவரான அசோகமித்திரன் கடந்த 23-03-2017 அன்று காலமானார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்புலகில் தீவிரமாக இயங்கிவந்தவர் அசோகமித்திரன். இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஒன்பது நாவல்கள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என விரியும் படைப்புலகம் அவருடையது. 1960-களில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய அவர், தன் இறுதி மூச்சுவரையிலும் எழுத்தாளராகவே வாழ்ந்தார். எண்பது வயதுக்குப் பிறகும் அவரது எழுத்து வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. நம் ‘தி இந்து’ நாளிதழிலும் சமீபத்தில் அவர் எழுதிய ‘மவுனத்தின் புன்னகை’ தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

1931-ல் செகந்தராபாதில் பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் தியாகராஜன். இந்திய வரலாற்றின் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் தனது இளமைப் பருவத்தைக் கழித்தவர் அவர். இந்திய சுதந்திரத்துக்குப் பின் ஹைதராபாத் மாகாணத்தை இந்தியாவுடன் இணைப்பதற்காக நடந்த போரின் அவலங்களைக் கண்முன் கண்டவர் அவர். தந்தையின் மரணத்துக்குப் பின் மதராஸுக்கு வந்த அவர் ‘ஜெமினி’ ஸ்டூடியோவின் கதை இலாக்காவில் சேர்ந்தார். பத்துக்கும் மேற்பட்ட வருடங்களை அங்கு கழித்தார்.

தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்த அசோகமித்திரன், 1950-களின் தொடக்கத்திலிருந்து இரு மொழிகளிலும் கதைகள் எழுத ஆரம்பித்தார். அவரது நீண்ட எழுத்துப் பயணத்தில் அவர் உருவாக்கிய படைப்புகள் பலவும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் செழுமையான பகுதிகளாயின. தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படும் அசோகமித்திரன், உண்மையில் உலக அரங்கில் வைத்துப் பேசப்படுவதற்குத் தகுதியானவர்.

அவரது எழுத்துக்களைக் குறித்துச் சொல்லும்போது ‘ஏமாற்றும் எளிமை’ என்று சொல்வது கிட்டத்தட்ட ஒரு தேய்வழக்கு போல் ஆகிவிட்டது என்றாலும் அதுதான் உண்மை. அவர் சொல்லும் கதைகள் அப்படிப்பட்ட நடையால்தான் மகத்துவம் பெற்றன என்பதை மறுக்க முடியாது. ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த நடுத்தர, ஏழை வர்க்கத்தினரின் துயரங்களையும் வாழ்க்கைப் பாடுகளையும் சொல்லும் கதைகள் என்று அவரது கதைகளின் உலகத்தைப் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. அது பகுதியளவே உண்மை. அவரது ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ நாவலில் ஹைதராபாத் நிஜாமின் கீழ் இருந்த இஸ்லாமிய மக்களின் துயரங்களையும் பதிவுசெய்திருப்பார். இரு தரப்புத் துயரங்களும் மதங்களின் எல்லைகளை அழித்து மானுடப் பேரழிவாக உருவெடுத்திருப்பதை அந்த நாவல் மூலம் ஆழமாகச் சொல்லியிருப்பார். ‘புலிக்கலைஞன்’ முதலான சிறுகதைகளிலும், ‘கரைந்த நிழல்கள்’ போன்ற நாவல்களிலும் திரைப்படத் துறையில் உதிரித் தொழிலாளர்களாக இருப்பவர்களின் உலகத்தை ‘புண் உமிழ் குருதி’ போல் திறந்து காட்டியிருப்பார். கணிசமான கதைகளின் பின்புலமும் சூழலும் நடுத்தர வர்க்கத்தினுடையனவாக இருந்தாலும் அவை யாவற்றையும் மானுட வாழ்வின் பொதுத் துயரமாக மாற்றுவது அசோகமித்திரனின் எழுத்து வல்லமை.

வாழ்தலின் துயரங்களை, அவமானங்களை, கொடுமைகளை எழுதினாலும் ஆசிரியரின் குரலோ நெகிழ்ச்சியோ பரிதாபமோ அவரது கதைகளில் அநேகமாக வெளிப்படுவதில்லை. கதைமாந்தர்களின் வாழ்க்கையிலும் மனதிலும் சிசிடிவி கேமரா பொருத்தியதுபோல்தான் இருக்கும் அவரது கதைகள். அது ஆசிரியர் பொருத்திய சிசிடிவி கேமரா போலில்லாமல் கதாபாத்திரமே தனக்கென்று பொருத்திக்கொண்டு, அதில் பதிவான காட்சிகளைப் பிற்பாடு ஓட்டிப்பார்த்துச் சலித்துக்கொள்வதுபோல்தான் இருக்கும் அவரது கதைகள். நித்திய வாழ்வின் அபத்தங்களில், மூடத்தனங்களில் உழலும் மனிதர்கள் மீதான தடையற்ற கரிசனத்தை வெளிப்படுத்துபவை அவரின் கதைகள். அசோகமித்திரனின் இந்த கரிசனம் அவரது எழுத்துக்களில் வெளிப்படையாகத் தோற்றம் கொள்ளும் கரிசனம் அல்ல. படிப்பவர்களின் மனதிலிருந்து அசோகமித்திரன் வெளிப்படச் செய்யும் கரிசனம். அதுதான் அவரை மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவராகக் கொண்டாடுவதற்கான காரணமாகிறது.

தமிழ் எழுத்தாளர்களில் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் அசோகமித்திரன். எனினும் அவரது படைப்பு உயரத்துக்கு உரிய அங்கீகாரம் தமிழக அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும் கிடைக்கவில்லை. சாகித்திய அகாடமி போன்ற விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அவரது உயரம் அவற்றையெல்லாம் தாண்டியது. ஒரு சமூகம் தனது மகத்தான எழுத்தாளரைக் கொண்டாடுவதே எல்லா விருதுகளையும்விட மேன்மையானது. அந்த விருதைத்தான் அசோகமித்திரனுக்கு நாம் வழங்கத் தவறிவிட்டோம்.

நம் காலத்தின் மாபெரும் எழுத்தாளரான அசோகமித்திரனை ‘தி இந்து’ நாளிதழ் தனது நடுப்பக்கங்களில் இங்கே பெருமையுடன் நினைவு கூர்கிறது!

 

Ref: tamil.thehindu.com/general/literature/அசோகமித்திரன்-ஓய்வில்லா-எழுத்தியக்கம்/article9600937.ece

 

அசோகமித்திரன் குரல்

 

அசோகமித்திரன் எழுதுவதில் எந்த விஷயம் மிகவும் சவாலானது என்று நினைக்கிறீர்கள்? அந்த மாதிரி சவால் என்று ஏதாவது இருக்கிறதா?

சில பேர் சொல்றாங்க, ‘இது சவால், அது சவால்’னு. எழுதறதுல சவால்னு என்ன இருக்கு? வாழ்க்கையை நடத்துறதுதான் சவால். வாழ்க்கையில எதிர்ப்படும் சின்னச் சின்ன விஷயங்கள்தான் சவால். திடீர்னு ஆயிரம் ரூபா, ஐந்நூறு ரூபா நோட்டு செல்லாதுங்கறாங்க, ஆதார் கார்டு அது இதுனு என்னென்னமோ வேணும்றாங்க. இதெல்லாம்தான் சவாலா இருக்கு.

(சமீபத்திய பேட்டி ஒன்றிலிருந்து…)

நான் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறேன்? ஒரு ரெயிலைப் பிடிக்க; இந்த ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் நகர ஆரம்பித்துவிட்ட ஒரு ரெயிலைப் பிடிக்க. நான் ரெயிலைப் பிடிக்க வேண்டும். அல்லது அது என்னை விட்டுப் போய்விட வேண்டும். இந்த இரண்டுதான் சாத்தியம். இதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அரை நிமிடம். அதிகம் போனால் ஒரு நிமிடம். ஆனால் இதென்ன மணிக்கணக்காகச் சிந்தனைகள்? எத்தனை சிந்தனைகள், எவ்வளவு எண்ணங்கள்! எண்ணங்கள் என்பது வார்த்தைகள். வார்த்தைகள் காலத்துக்கு உட்பட்டவை. இவ்வளவு நேரத்தில் அதிகபட்சம் இவ்வளவு வார்த்தைகளே சாத்தியம் என்ற காலவரைக்கு உட்பட்டவை. ஆனால் மணிக்கணக்கில் எண்ணங்களை ஓட விட்டுக் கொண்டிருக்கிறேன்! கடவுளைக்கூடக் கொண்டுவந்துவிட்டேன்! கடவுள் காலத்துக்கு உட்பட்டவரா?

எனக்குத் தெரியாது. எனக்கு காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை, இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது இரண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுத்தது என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரையில் ரெயில் நின்று கொண்டிருக்கிறது. அது கிளம்பிவிடவில்லை நான் அதைப் பிடிப்பதற்கு அதைத் துரத்திக்கொண்டு போக வேண்டியதில்லை.

– (‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ சிறுகதையிலிருந்து…)

இந்த ஆளு சத்தம் போடாமதான் படிச்சுண்டு இருக்கான். படிச்சுண்டே இருக்கான். நானும் காத்திண்டே இருக்கேன். இவன் படிக்கிற பக்கத்திலே பாதிலே ஒரு பாங்க் பாலன்ஸ் ஷீட். ஒரு எண்கூட எட்டு இலக்கத்துக்குக் குறைஞ்சு கிடையாது. எட்டு, ஒன்பது, பத்து, பதினொண்ணு கூட இருக்காப்போல இருக்கு. பதினொரு இலக்கத்து எண்ணை ரூபாயாக் கற்பனை பண்ணிக்கூடப் பாக்க முடியலை. இதுவே பட்ஜெட் தாளாக்கூட இருக்கலாம். அப்பவும் பத்து, பதிணொண்ணு, பன்னெண்டுன்னு பெரிய பெரிய எண்கள். அவன் பத்து இலக்கத்துலே போட்டாலும் ஒண்ணுதான். இருபது இலக்கத்துலே போட்டாலும் ஒண்ணுதான். இவ்வளவு ரூபாயைப் பற்றி நிஜமாத் தெரிஞ்சவங்க நிச்சயம் இருப்பாங்க. அவங்க எப்படி இருப்பாங்க ? என் மாதிரி இருக்கமாட்டாங்க. இந்த ஆள் மாதிரி கூட இருக்க மாட்டாங்க. இலவசப் பேப்பர் பறக்கப் பறக்கப் படிச்சுட்டுப் போறவங்களுக்கு மூணு இலக்க எண் தெரிஞ்சாலே பெரிய விஷயம். இது பிச்சைக் காசு. பிச்சைக்காரங்களுக்குப் பிச்சைக்காசு பத்தித்தான் தெரியும். லட்சம் கோடியெல்லாம் பள்ளிக்கூடத்திலே பரீட்சை பாஸ் பண்ணற அளவுக்குத் தெரிஞ்சாப் போதும். அவ்வளவுதான் தெரியும் வேறே.

(‘எண்கள்’ சிறுகதையிலிருந்து…)

காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான். அரைக் கோப்பை அளவு மிஞ்சியிருந்த காபிமீது லேசாக ஏடு பரவ ஆரம்பித்திருந்தது. இந்த காபியைத் தான் குடிக்கப் போவதில்லையே, ஏன் ஈயை விரட்டினோம் என்று அவனுக்குத் தோன்றியது. ஓர் ஈ எத்தனை நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கும்? பத்து நாட்கள்? இருபது நாட்கள்? ஒரு மாதம்? அந்தக் குறுகியகால வாழ்க்கையில் ஒரு கணம், அதன் ஒரு வாய் உணவு, பெரும்பங்கைத்தான் வகிக்க வேண்டும். அவனால் இப்போது சாக்கடையில் கொட்டப்பட இருக்கும் அந்த காபி எத்தனை ஜீவ ராசிகளின் முழு ஜீவித ஆதாரமாக இருக்கக்கூடும்? எவ்வளவு எளிதில் சிருஷ்டி தர்மத்தை, ஓருயிர் தான் வாழவேண்டும் என்று மேற்கொள்ளும் இயக்கத்தை, தன்னால் ஒரு சலனம் கூட இல்லாமல் புறக்கணிக்க முடிகிறது, துஷ்பிரயோகம் செய்ய முடிகிறது? மனிதனுக்கும் மனிதனுக்கும்கூட இப்படித்தானோ? காந்தி இதற்குத்தான் மீண்டும் மீண்டும் தான் ஆங்கிலேயரை வெறுக்கவில்லை, ஆங்கிலேயரைத் துவேஷிக்கவில்லை என்று கூறிக்கொண்டாரோ?

(‘காந்தி’ சிறுகதையிலிருந்து…)

 

காலத்தின் நீளம்

யாருக்கு நினைவிருக்குமோ என்னவோ

மவுண்ட் ரோடு பச்சை சிவப்பாக

மாறும் விளக்கில்லாத

மவுண்ட் ரோடாக இருந்த காலமது.

நடுத்தெரு போலீஸ்காரனுக்கு

இருட்டில் விளக்கே தொப்பி

அவனும் எட்டு மணிக்குப்

போய் விடுவான்.

விளக்குத் தொப்பி மட்டும் இருக்கும்.

இன்னும் சிறிது நேரம்.

நான் நடுத் தெருவில்

எதிரே வெகுவேகமாக லாரி ஒன்று.

அதுவும் நடுத் தெருவில்.

எனக்கு என்னென்ன மனச்சுமைகள்.

தக்க தருணத்தில் சைக்கிளைச்

சிறிது ஒடித்துச்

சுமை தாங்கி வரும் அந்த லாரியில்

மோதினால்

இருட்டில் யாருமில்லா அந்தத்

தார்ப்பரப்பில்

யாருக்குத் தெரியும்?

யாருக்குத் தெரிந்தாலென்ன? பின்

எனக்குத் தெரியாதே-

அந்த ஒரு கணத்தில்-

கணமா? அது கணத்தில்

ஐந்தில் பத்தில் நூறில் ஆயிரத்தில்

ஒரு பங்குதானிருக்கும்.

அந்தக் கால அணுவில்

என்னை சைக்கிளை

ஒடித்துப் போகாமலிருக்க

எது செய்தது?

எது செய்ததோ அந்தக் கால

அணு இப்போது இருபது

ஆண்டுக்கும் மேல் நீண்டு விட்டது.

இன்னும் நீண்டு கொண்டேயிருக்கும்-

நான் இருக்கும்வரை.

நானிருக்கும் வரை காலமே அணு.

(கவிதைகள் மீது ஒட்டுதலைக் காட்டிக்கொள்ளாத அசோகமித்திரன் அபூர்வமாக எழுதிய கவிதை இது, ‘இன்று’ நாவலிலிருந்து…)

 

Ref:

அசோகமித்திரனை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை

 

எவ்வளவோ பேருக்கு அஞ்சலிக் கட்டுரை எழுதியவர் அசோகமித்திரன். அஞ்சலிக் கட்டுரைகள் எழுதுவதில் உள்ள நெருடல்களைப் பற்றியும் சில நேரங்களில் அதற்கு மெனக்கெடுவது பற்றியும் அதன் தேவைகுறித்த அனுபவங்களை சற்று விரிவாகவே எழுதியிருந்தார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி, சாந்தாராம் உள்ளிட்ட பிரபலங்களை இணைய தளங்கள் இல்லாத நாட்களிலேயே ஓரிரு மணிநேரங்களில் எழுதித் தந்துவிடும் அசாத்திய நினைவாற்றலும் தேடலும் கொண்ட அவரது உழைப்பை பத்திரிகை உலகம் நன்கறியும்.

ஒருமுறை ‘எனக்கான அஞ்சலிக்கட்டுரையைக் கூட நானே எழுதி வைத்துவிட்டேன்’ என்றும் அசோகமித்திரன் கூறியிருந்தது பலரையும் அதிர்ச்சியடைய செய்யவில்லை. மாறாக அவரது இந்தக் கூற்று நுட்பமான நகைச்சுவையின் பிரிதொரு தொடர்ச்சியாகவே வாசகர்கள் புரிந்து கொண்டனர்.

எண்பதுகளின் இறுதி. கிட்டத்தட்ட ‘கணையாழி’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து அசோமித்திரன் விடுபட்ட தருணம். அவர் ஆசிரியராகப் பணியாற்றிய அந்தக் கடைசி இதழில் அவர் திடீர் அதிர்ச்சியாக கணையாழி ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகுவதாக, அதுவும் இந்த இதழிலிருந்தே விலகுவதாகவும் எழுதிய தலையங்கம் எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணையாழியின் ஒவ்வொரு இதழிலும் அவர் முதல் பக்கம் (உள்ளடக்கம்) தவிர அடுத்த இரண்டு பக்கங்களிலும் எழுதிவந்தது எனக்கு இலக்கியம் உள்ளிட்ட சக உலகத்தை இன்னொரு அணுகுமுறையோடு புரிந்துகொள்ள பெரிதும் உதவி வந்தது. இனி அதற்கு வாய்ப்பில்லை என்ற ஏமாற்றம் கவ்விப் பிடித்தது.

அவர் கணையாழி இதழின் முதல் பக்கத்தில் தலையங்கமாகவும் ஒரு கடிதம் போலவும் வாசகர்களுக்கு ஒரு தகவலை எழுதியிருந்தார். கணையாழி ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கான காரணங்களை நேரடியாக பகிர்ந்துகொண்ட வருத்தங்கள் சில அதில் இருந்தன. எந்த கைம்மாறும் சன்மானமும் எதிர்பார்க்காமல் ஆசிரியர் பொறுப்பை ஏற்று இலக்கியம் மீதான அக்கறையின்பாற்பட்ட ஒரே காரணமாகவே 20 ஆண்டுகள் மிகுந்த சிரத்தையோடு செயல்பட்டுவந்தேன். பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினையோடு இணைந்து வந்து கொண்டிருக்கக் கூடிய இந்த பொறுப்பு மீது பெரிய பெருமைகள் தேவையில்லை. தனிப்பட்ட பாராட்டும் கூட வேண்டியதில்லை.

20 ஆண்டுகளாக பல்வேறு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய நிலையிலும் பரந்துபட்ட இலக்கிய உரையாடல்களை உருவாக்கிய நிலையிலும் விரும்பத்தகாத குறுக்கீடுகளும் நிபந்தனைகளும் தொடர்ந்து சங்கடத்தை ஏற்படுத்திவரும்நிலையில் இந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியேயில்லை என்று எழுதியிருந்தார். அவருடைய சொற்களை அப்படியே சொல்லும் ஆற்றல் இல்லாததால் நினைவின் தடங்களிலிருந்து இந்த வாசகங்கள்தான் என்பதை ஏகதேசமாகச் சொல்லமுடியும்.

அவர் ஆசிரியராக இருந்த காலம் வரையிலும் கணையாழியின் இதழை வடிவமைப்பதில் அவருக்கிருந்த வெளிப்பாட்டுத் தன்மைக்கான அழகுணர்ச்சியை ஒவ்வொரு இதழிலும் அனுபவித்து செய்து வந்தார். 87ல் வெளிவந்த ஒரு இதழில் ஜெயமோகனின் முதல் சிறுகதை ‘நதி’யை வெளியிடும்போது ‘அப்பாவுக்கு’ என்று ஒரு குறிப்பை பக்கவாட்டில் குறிப்பிட்டிருப்பார். அதே இதழில் முரளி என்பவர் எழுதியிருந்த ஒரு கதைக்கு பக்கவாட்டில் ‘அம்மாவுக்கு’ என்று குறிப்பிட்டிருப்பார்.

ஒருவகையில் கணையாழியிலிருந்து அவர் வெளியே வந்தது நல்லதாகப் போய்விட்டது. அதன்பிறகுதான் அவர் எண்ணற்ற சிறுகதைகளை, குறுநாவல்களை, எழுதிக் குவித்தார். அவர் நினைவுகளில் இருந்தது முழுக்கமுழுக்க இளம்வயது செகந்தராபாத் நாட்களே. அவை வெறும் அசைபோடும் நினைவுகள் மட்டும் இல்லை. வெவ்வேறு போர்களை உலகம் சந்தித்தபோது தென்னிந்தியாவின் அரசப் பாரம்பரிய நகரம் ஒன்று எதிர்கொண்ட கலகங்களையும் சண்டைகளையும் அரசியல் மாற்றங்களையும் தனது படைப்புகளில் முன்வைத்தார். அவரது பாணி என்று சொல்லவேண்டுமானால் எளிய நடுத்தர குடும்பத்து மனிதனின் வாழ்வில் வரலாறு குறுக்கிடுவதை போகிறபோக்கில் சொல்வார்.

78-ல் நக்சலைட் இயக்கங்கள் தமிழகத்திலும் இருந்ததை அவரது ‘தலைமுறைகள்’ சொல்கிறது. இதைப் படித்துவிட்டு என் தந்தையார் என்னிடம் நான் பெரிதும் சிலாகிக்கும் அசோகமித்திரன் இப்படி எழுதிவிட்டாரே என்று என்னிடம் குறைபட்டுக்கொண்டார். ஒரு மகன் தந்தையை அறைந்துவிடும் காட்சி அது. ‘தலைமுறைகள்’ குறுநாவல் ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்து சிலகாலம் நடத்திய கல்பனா இதழில் வெளிவந்தது.

‘சரிப்பா நான் அவரை நேர்ல சந்திக்கும்போது இதைப்பற்றி கேட்கறேன்’ என்று என் தந்தைக்கு ஆறுதல் அளித்துவிட்டு சென்னை வந்து அவரைச் சந்தித்தேன். முன்னறிவிப்பு தகவல் எதுவும் இன்றி திடுமென்று தி.நகர் இல்லத்தில் காலை 7 மணிக்கு போய்ப் பார்த்தேன். கிட்டத்தட்ட கணையாழியிலிருந்து அவர் ஒருமாதத்திற்கு முன் வெளியே வந்த தருணம் அது.

அவரிடம் ஒரு மணிநேரம் பேச முடிந்தது. கிருஷ்ணவேணி தியேட்டருக்கு அருகே தாமோதரச் செட்டித் தெரு என்று நினைவு. சுற்றுமதில் கிராதி கேட்டைத் திறந்து சிறிது தூரம் நடக்கவேண்டும். அதன்பிறகு வீட்டின் குட்டி வராந்தா. அங்கேயே அவரது வரவேற்பரை போன்ற எழுத்து சார்ந்த தளவாடங்கள். யாரோ வெளிநாட்டு ஓவியர் வரைந்துகொடுத்ததுபோன்ற அவரது ஓவியம் ஒன்று. மேசையில் புத்தக அடுக்குகளுக்கு அருகே… ”பால்நிலவன்” என்று சொன்னதும் ”யார் ஸ்ரீதரனா?” என்றுதான் கேட்டார். எனக்கு ஒருவகையில் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்கு முன்னதாகவே தொடர்ந்து அவர் சொன்னது செல்லமான கோபத்தைத் தூண்டியது. ”இந்த ஒருமணிநேரம் பால்நிலவன் வேண்டாமே… நான் உங்களை ஸ்ரீதரன்னு கூப்பிடறேன்.. உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா?” என்று கேட்க. ”சரிங்க சார்” என்று ஒப்புதல் வழங்கினேன்.

அவருடன் நடந்த உரையாடல்கள் அவ்வளவும் நினைவில் கல்வெட்டாக உள்ளன. ஆனால் இங்கு மேலே சொன்ன நாவல் பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். ”என் தந்தையார் உங்களிடம் கேட்க சொன்னார்… ஒரு மகன் தந்தையை அடிக்கலாமா அதற்கு பதில் சொல்லுங்கள்…?”

 

அவர் சொன்னார்…. ”கதையில் தந்தையை அடிக்கிறவன் ஒரு நக்சலைட். அவனது நடவடிக்கைகள் தந்தைக்குப் பிடிக்கவில்லை. படித்துவிட்டு ஏதாவது வேலைக்கு போகவேண்டும் என்பதுதான் ஒரு சராசரி தகப்பனின் ஆசையாக இருக்கும். போராட்டம் புரட்சி இயக்கம் என்று சுற்றிக்கொண்டிருப்பதை எந்த தந்தைதான் விரும்புவார். இதில் போலீஸுக்கு தெரியாமல் மறைந்து வாழும் நிலைவேறு… ஒருநாள் இரவு அவன் வீட்டுக்கு வருகிறான் யாருக்கும் தெரியாமல் அம்மாவுடன் வந்து பேசுகிறான். அம்மா அவனிடம் அழுகிறாள். சாப்பிடச் சொல்கிறாள். இந்த நேரம் பார்த்து அப்பா பார்த்துவிட அவனிடம் வந்து சண்டை போடுகிறார். இரு உன்னை போலீஸ்ல பிடிச்சிக்கொடுக்கிறேன் என்று போலீஸுக்கு போன் செய்கிறார். அவன் உடனே அங்கிருந்து தப்ப முற்படுகிறான். தந்தையோ அவனை இழுத்துப் பிடிக்கிறார். அவருக்கு அவனை போலீஸில் பிடித்துக் கொடுத்துவிடவேண்டும். அந்த நிலையில்தான் அவன் தன் தந்தையை அறைந்துவிட்டு தப்பிக்கிறான். இதில் என்ன தவறை உங்கள் தந்தையார் கண்டார் சொல்லுங்கள் என்று என்னை திருப்பிக்கேட்டார்.

எனக்கு அவரது விளக்கம் போதுமானதாக இருந்தது. ஊர் திரும்பிய நான் என் தந்தையிடம் இதைக்கூறினேன். சமாதானம் அடைந்தார் என்று சொல்லமுடியாது. ஆனால் அவர் கேட்டதற்கு விளக்கம் கேட்டுவந்த பிள்ளையை ஆசையோடு பார்த்துப் புன்னகைத்தார் என்றுவேண்டுமானால் சொல்லலாம்.

அசோகமித்திரனுடனான அந்த சந்திப்பில் இன்னொன்றும் நடந்தது. கணையாழியிலிருந்து வெளியே வந்த பிறகும் அவர் பொறுப்பில் இதழில் வெளிவர வேண்டிய சில கதைகள் இருந்தன. அதில் என்னுடையதும் ஒன்று. அதைப் பற்றியும் சொன்னார். ‘சில திருத்தங்களோட பிரஸ்க்கு அனுப்பியிருக்கேன். அந்த திருத்தம் உங்களுக்கு சம்மதம்னா பரவாயில்லை. சம்மதம் இல்லைன்னா நீங்க அதை எடுத்துக்கலாம்’ என்று கிருபாகரன் போன்ற ஏதோஒரு பெயரைச் சொல்லி அச்சகத்தில் என் கதை இருப்பதையும் சொல்ல, உடனடியாக 149 பெல்ஸ் ரோடுக்கு வந்தேன். பிரஸ்ஸில் மிகவும் நைந்த புடவைகளை அணிந்த பெண்கள் அச்சுக்கோக்கும் பணியில் ஈடுபட்ட காட்சியைக் கண்டதும் மனம் வலித்தது.

 

அடக்கடவுளே இவர்களா நமது எழுத்துகளை கோக்கிறார்கள். அடப்பாவமே என்று ஏதோ ஒரு ஏமாற்றம் மனசைப் பிசைந்தது. அங்கு பொறுப்பில் இருந்தவரை சந்தித்தேன். கதையை வாங்கிப் பார்த்தேன். அதில் 19 பக்க ஏ4 தாள்களில் கடைசி இரண்டரை பக்கத்தை சிகப்பு மையில் குறுக்கும்நெடுக்குமாக கோடுபோட்டு வைத்திருந்தார். என் கதை இப்படி திருத்தத்தோடு எப்போதுமே பிரசுரம் ஆனதில்லை. அதைப் பார்த்ததும் வெறுப்புமேலிட அசோகமித்திரன் சொன்னதை அவரிடம் சொல்லி கதையை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.

அதன்பிறகு பலமுறை அசோகமித்திரனின் எழுத்துவன்மையை பல பத்திரிகைகளில் கண்டுவியந்தேன். கூட்டங்களிலும் சந்தித்துப் பேசினேன். ஆனால் அந்தக் கதையைப் பற்றி நானும் சொல்லவில்லை அவரும் கேட்கவில்லை. இதற்கிடையில் என்னுடைய புத்தகங்கள் கிடைக்கப்பெற்று எனக்கு அவர் பாராட்டுக்கடிதம் எழுதுகிறார்.

அவர் திருத்தம் செய்த கதையை சில பத்தாண்டுகள் அதை எந்தப் பத்திரிக்கைக்கும் அனுப்பாமல் அப்படியே வைத்திருந்தேன். ஒருநாள் எதேச்சையாக எடுத்துப் படிக்கையில் என் கதையை எங்கே நிறுத்தவேண்டும் என்று அவர் குறிப்பிட்ட மீதியுள்ளதை அவர் அடித்திருந்தது கதையின் பளிச் தன்மை புலப்பட்டதை அறிந்தேன். மனம் ஒருகனம் கிடந்து தவித்தது. ஐயோ அவர் கைவண்ணத்திலேயே பிரசுரமாகியிருந்தால் எவ்வளவு சரியாயிருந்திருக்கும். பின்னர் அவர் திருத்தியிருந்தவிதமாகவே வேறொரு பத்திரிகையின் முதல் இதழில் வெளிவந்தது.

தான் தன் வாழ்க்கை என்றுமட்டும் வாழாமல் சக உலக மாற்றங்களையும் மிகச் சிறப்பாக தனது எழுத்தின் ஊடாக எழுதியவரின் ஆன்மா விடைபெற்றுக்கொண்டுவிட்டது. குறுகுறுவென்று உலகை ரசிக்கும் இளவயது மாணவப் பருவத்தின் அழகுணர்ச்சியை அவரைப் போல் எழுதியவர்கள் இல்லை.

உலக சினிமா குறித்த ஹாலிவுட்டின் சிறந்த முயற்சிகள் பலவற்றையும் தன் எழுத்தின் வாயிலாக துவக்கத்தில் அவர்தான் பேசிக்கொண்டிருந்தார். அந்தவகையில் ‘கான் வித் விண்ட்’ நாவல், திரைப்படம் இரண்டையும் பற்றி அவர் குறிப்பிட்டபிறகே அமெரிக்க எம்பஸியின் நிகழ்வில் வேறெந்த வேலையும் ஒதுக்கிவிட்டு போய் ‘கான் வித் விண்ட்’ திரைப்படத்தைக் காணவேண்டியிருந்தது. மிகப்பெரிய படம் அது. நாவலைப் பற்றி அவர் வலியுறுத்தி எழுதியதன் அவசியம் புரிபட்டது. ஒரு மிகப்பெரிய குடும்பத்தின் வீழ்ச்சியின் வாயிலாக அமெரிக்க உள்நாட்டுக் கலங்களினால் நேர்ந்த அரசியல் மாற்றங்கள் போன்றவற்றை அந்த நான்குதலைமுறை கதையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது. அதேபோல அமெரிக்க எழுத்தாளர்களின் குறிப்பாக அமெரிக்காவை ‘இதுஎன் நிலம் அல்ல’ என துணிச்சலாக ஒரு படைப்பு ஒன்றில் உள்ளுறை எனப்படும் மறைபொருளாக எழுதிய வில்லியம் பாக்னரையும் தமிழில் அவர்தான் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

‘தண்ணீர், கரைந்த நிழல்கள்’, ’18வது அட்சக்கோடு’ போன்ற அவரது நாவல்கள் உலகத்தரம் வாய்ந்தவை. இதில் ‘தண்ணீர்’ நாவல் திரைப்படமாக்கும் முயற்சிகளும் நடந்து அப்படியே கிடப்பில் உள்ளது. சிலநேரங்கள் அவரது நேர்காணல்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன. சர்ச்சைகளையும் உண்டாக்கின. அவரது எழுத்தின் வாயிலாக மனித உறவுகளின் ஊடாட்டங்களை உணர்ந்தவர்கள் நிச்சயம் அவரது கூற்றை சந்தேகிக்கவில்லை. ஆனால் அதுவும் மிகவும் குறைந்த எண்ணிக்கையான வாசகர்கள்தான்.

ஒவ்வொரு முறையும் தமிழுக்கு ஞானபீடம் குறித்த விவாதங்கள் உருவாகிக்கொண்டேயிருக்கும். சமீப சில ஆண்டுகளில் அவருடைய பெயர் முதன்மையாக இடம்பெற்றது. ஆனால் அதை மத்தியில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் மட்டும் இல்லை. அவருக்கு அருகாகவே இருந்த பலரும்கூட அவரை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. நான் உட்பட.

 

Ref: http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article9599775.ece?widget-art=four-rel

 

 

 

 

 

–x–x–x

 

ப்போது நான் அசோகமித்திரனைச் சந்தித்தேன்? எங்கே சந்தித்தேன்? யோசனை செய்துகொண்டே இருக்கிறேன். ஞாபகத்திற்கு வரவில்லை. முதன்முதலாக அவருடைய கதைப் புத்தகத்தை தி.நகரில் வீராசாமி் தெருவில் உள்ள நூல்நிலையத்தில், படிக்க எடுத்தேன். அந்தத் தொகுதியில்தான் எனக்குப் பிடித்த கதையான ‘ரிக்‌ஷா’ வந்திருந்தது. அதைப் படித்துப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன். அவர் பெரும்பாலான கதைகளை வாசகர்களிடம் விட்டுவிடுவார்.

வாசகர்தான் அந்தக் கதையை முடிக்க வேண்டும். மேலும், அவர் கதைகள் ஒருமுறைக்கு இருமுறை படிக்கத் தூண்டிக்கொண்டே இருக்கும். ஆடம்பரமான வார்த்தைச் சேர்க்கை தென்படாது. கிட்டத்தட்ட ஒரு செய்தித்தாளைப் படிப்பதுபோல் இருந்தாலும், ஆழமான உணர்வுநிலைக்குப் படிப்பவரைக் கொண்டுசெல்லும். நான் கதைகள் வாசிப்பதில் ஆர்வம் உள்ளவன். பொதுவாக, கதைக்கென்று ஒரு விதி இருக்கும். ஒரு ஆரம்பம் பின் முடிவு என்று. ஆனால், அசோகமித்திரன் அதை முற்றிலும் மாற்றிவிட்டார். அப்போதிலிருந்தே எனக்கு அசோகமித்திரன் மீது பெரிய மதிப்பு ஏற்பட்டுவிட்டது. சந்தித்து, பார்க்க வேண்டும் என்று நினைத்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். அவரிடமிருந்து நிறைய தெரிந்து
கொள்ள வேண்டுமென்று நினைத்துக்கொள்வேன்.

யோசித்துப் பார்க்கிறேன்… எங்கே அசோகமித்திரனை முதலில் சந்தித்தேன்? அப்போது அவரிடம் என்ன பேசினேன். எனக்கு ஞாபகம் வந்துவிட்டது. முதன் முறையாக தி.நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில்தான் சந்தித்தேன். முன்பே இலக்கியக் கூட்டங்களில் பார்த்திருப்பதால், அவர்தான் அசோகமித்திரன் என்று அடையாளம் காண முடிந்தது. உண்மையில் என் மனைவி அங்கு பணி  புரிந்துகொண்டிருந்ததால், அங்கு வந்திருந்தேன். பணம் எடுக்க அங்கு வந்திருந்தவரை நெருங்கி, “நீங்கதானே அசோகமித்திரன்” என்று கேட்டேன். அவர் என்னை முறைத்துப் பார்த்தார். அந்த இடத்தில் அப்படி ஓர் அறிமுகத்தை அவர் விரும்பவில்லை என்று தோன்றியது. பெரும்பாலும் நான் இப்படி ஏதாவது பேசும்போது, கேட்பவர்கள் என்ன மாதிரியான மனோநிலையில் இருப்பார்கள் என்பதை யோசிப்பது இல்லை. திரும்பவும் இன்னொரு முறை கேட்டேன். இந்த முறை அவருக்குக் கோபம் வந்துவிட்டது. “நான் அசோகமித்திரனா இருந்தா என்ன? ஏன் இங்கே இதையெல்லாம் கேட்கிறீங்க?”என்று கேட்டார். உடனே நான் அப்படிக் கேட்பது சரியில்லை என்று ஒதுங்கிவிட்டேன். அன்று அப்படி நடந்ததே தவிர, உண்மையில் அசோகமித்திரன் அப்படி இல்லை. எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசக்கூடியவர்.

அடுத்த முறை அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குத் திரும்பவும் ஏற்பட்டது. இந்த முறை அவர் வீட்டு முகவரியைத் தெரிந்துகொண்டு அவர் வீட்டுக்கே சென்றேன். ‘கணையாழி’யில் என் குறுநாவல்,   ‘தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டி’யில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நான் எப்போதும் என்னைச் சுற்றியே கதை எழுதிக்கொண்டிருப்பேன். ‘விபத்து’ என்ற அந்தக் கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் (அது நான்தான்) வங்கியில் பணிபுரிபவராக எழுதியிருந்தேன். வங்கியில் பணிபுரிபவராக எழுதியிருந்தாலும், எந்த வங்கி என்று எழுதவில்லை. ‘கணையாழி’யில் வரும் என் கதையைப் படித்துவிட்டு, என் வங்கியில் உள்ள பெரிய அதிகாரி எனக்குத் தண்டனை கொடுத்துவிடுவாரோ என்று தோன்றியது. ஏனெனில், என் வங்கியில் உள்ள நண்பர் ஒருவர் ‘இந்து’வில் வாசகர் கடிதம் ஒன்றை அப்போது எழுதியிருந்தார். அதைப் படித்த மேல் அதிகாரி ஒருவர் நண்பரை எச்சரிக்கை செய்தார். எது எழுதினாலும் வங்கியிட
மிருந்து அனுமதி பெற வேண்டுமென்று. அந்த பயம் எனக்கும் தொற்றிக் கொண்டிருந்தது. தமிழ் பத்திரிகையான ‘கணையாழி’யைப் படித்துவிட்டு அதுமாதிரி ஆகிவிடுமோ என்ற பயம்தான்.

அசோகமித்திரன் அன்று உடம்பு சரியில்லாமல் இருந்தார். ஜுரம். படுத்துக்கொண்டிருந்தார். அந்த நிலையிலும் அவர் என்னைப் பார்க்க அனுமதித்தார்.  ‘கணையாழி’யில் வரப்போகும் என் குறுநாவலைப் பற்றிச் சொன்னேன். அதைக் கேட்டவுடன் அவர் அந்தக் குறுநாவலை முழுதாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

“சரி அந்த குறுநாவலுக்கு இப்போ என்ன?” என்று கேட்டார்.

“அந்தக் குறுநாவலில் பணிபுரியும் இடம் வங்கி என்பதற்குப் பதிலாக, வேற இடத்தில் பணிபுரிவதாக மாற்றிவிடலாமா?” என்று கேட்டேன்.

“ஏன்?”

“வங்கியில் பணிபுரிவது போல் வருகிறது. அதை மாற்ற நினைக்கிறேன்.”

“அதெல்லாம் மாற்ற வேண்டாம். நீங்க கவலைப்படாதீங்க, உங்களை யாரும் ஒன்றும் கேட்க மாட்டார்கள்” என்றார் அசோகமித்திரன்.

என் கதை ‘கணையாழி’யில் வருவது எங்கள் அலுவலகத்தில் உள்ள யாருக்கும் தெரியவில்லை. ஏன் அதுமாதிரியான பத்திரிகையை அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை. மேலும், நான் தமிழில் கதை எழுதி இருந்தேன். யாரும் தமிழே படிக்க மாட்டார்கள். உண்மையில் நான்தான் தேவை இல்லாமல் பயந்திருந்தேன். இப்படித்தான் என் உண்மையான சந்திப்பு அவர் வீட்டில் நடந்தது.

இன்னொரு முறை அசோகமித்திரன் வீட்டிற்கு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு போனேன். அந்த நண்பர் கல்லூரியில் படிக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு, “கதை எழுதுவதை அப்புறம் வைத்துக்கொள்ளுங்கள் முதலில் படிப்பில் கவனம் செலுத்துங்கள்; எழுதுகிறேன் என்று படிப்பில் கோட்டை விட்டுவிடக் கூடாது”  என்று அறிவுரை கூறி அனுப்பினார். இதுதான் அசோகமித்திரன். அவர் எப்போதும் நடைமுறை வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பவர்.

சோகமித்திரனின் சிறுகதைகளில் நான் முக்கியமாய் கவனிப்பது, அவர் பெண் கதாபாத்திரங்களை எப்படி உருவாக்குகிறார் என்பது. படிப்பவர்களுக்கு, பெண் பாத்திரங்கள் மீது ஒருவித பச்சாதாபம், இரக்க உணர்வு ஏற்படாமல் இருக்காது.  அவருடைய பெண் பாத்திரங்கள் பலவீன மானவர்களா என்ற கேள்விகூட என்னுள் எழும். ஆனால், கதையில் சில தருணங்களில் அவர்கள் தீவிரமாக இருப்பார்கள். ‘அடுத்த தலைமுறை’ என்ற சிறுகதையில் வரும் அம்மா, முதலில் பையன் வேறு ஒரு ஜாதியில் உள்ள பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை விரும்ப மாட்டாள். அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ளமாட்டாள். சாதாரண நிலையில் இருக்கும் பையனை அந்தப் பெண்தான் மாற்றி, அமெரிக்காவில் பணிபுரியவைப்பாள்.  அவன் மனைவியை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வர முயலும்போது, அவனை ஏசி அனுப்பிவிடுவாள். பல ஆண்டுகள் கழித்து, திரும்பவும் பையன் இந்தியா வருகிறான். அம்மா கேட்கிறாள், “ஏன் அவளை அழைத்து வரவில்லையா?” என்று. “இல்லை. அடுத்த முறை அழைத்து வருகிறேன்” என்பான். பார்க்க அம்மா மோசமாக ஒப்பிப்போய் விகாரமாக இருப்பாள். அவள் என்ன மருந்தைச் சாப்பிடுகிறாள் என்பது அவளுக்கே தெரியாது. “அடுத்த முறை நான் எங்கே பார்க்கப்போகிறேன்?” என்பாள் அம்மா. அவன் அமெரிக்கா போய்விடுவான்.  விமான நிலையத்திற்கு வரும் அவன் மனைவி சொல்வாள். “அப்பா போன் பண்ணிச் சொன்னார். உங்கள் அம்மா இறந்துவிட்டாள்” என்று. கதை முடிவில் அசோகமித்திரன் எழுதியிருப்பார், ‘அவன் அம்மா பத்து நாட்கள் சாப்பிட வேண்டிய மருந்தை  ஒரே நாளில் சாப்பிட்டுவிட்டாள்’ என்று.
படிக்கும்போதே அம்மா கதாபாத்திரம் மீது  நம் இரக்கம் முழுவதும் செல்லும்.

இன்னொரு கதையில் (கதைப் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை) கணவன் சொல்லைத் தட்டாத மனைவி.  காரணம் இல்லாமல் அவனுடைய கடுமையான கோபத்திற்கு பயந்தபடி இருப்பாள்.  பொருளாதாரரீதியில் மிக மோசமான சூழ்நிலை.  கணவனுக்காகக் குறி கேட்க ஒரு ஆன்மிகப் பெரியவரைப் போய்ப் பார்ப்பாள்.  அங்கிருந்து வீடு திரும்பி வர தாமதமாகிவிடும். கணவனுக்கு பயப்படுவாள். கணவனும் அவளை அடிக்கப்போவான்.  இந்த இடத்தில் ஒரே ஒருமுறை கணவனை முறைப்பாள்.  அடுத்த நாளிலிருந்து கணவன் அந்த வீட்ட்டை விட்டுப் போய்விடுவான். வீட்டை விட்டுப் போய்விட்ட கணவன் மீது நமக்கு எந்த இரக்கமும் உண்டாகாது. ஆனால், அந்த மனைவி மீதுதான் நமக்கு எல்லாவித இரக்க உணர்ச்சியும் குவியத் தொடங்கும்.  இதுதான் பெண் பாத்திரங்கள் மீது ஒரு விசேஷத்தன்மையை அசோக

மித்திரன் எப்போதும் உருவாக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. சாதாரணமாகச் சொல்வதைப் போல, அசாதாரண அனுபவத்தைச் சொல்லிக்கொண்டு போவார். கதையைத் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும்விதமாய் இருந்துகொண்டே இருக்கும்.

ன் புனைபெயர் அழகியசிங்கர். இந்தப் பெயரை நான் தேர்ந்தெடுப்பதற்கு மறைமுகமாக அசோகமித்திரன்தான் காரணம். அப்போது நான் ‘கணையாழி’,  ‘தீபம்’ பத்திரிகைகளின் தீவிர வாசகன். ஒருமுறை கணையாழியில் நோபல் பரிசு பெற்ற ஐ.பி.ஸிங்கர் என்ற எழுத்தாளரைப் பற்றி அசோகமித்திரன் எழுதியிருந்தார். அதைப் படித்துவிட்டு நான் அமெரிக்கன் நூல்நிலையத்தில் ஐ.பி.ஸிங்கரின் புத்தகங்களைத் தேடி எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது தி.ஜானகிராமன் பெயரில்  ‘கணையாழி’ குறுநாவல் போட்டி அறிவித்திருந்தது. முதன்முதலாக நான் ஒரு குறுநாவல் எழுதி, அந்தப் பத்திரிகைக்கு அனுப்பத் தயாராக இருந்தேன். என் இயற்பெயரை ஒரு நாடக நடிகர் கெடுத்துவிட்டார் என்று நினைத்தேன்.

அதனால், புனைபெயரில் குறுநாவலை அனுப்ப வேண்டுமென்று நினைத்திருந்தேன். அந்தத் தருணத்தில்தான் நான் இலக்கிய நண்பர்கள் சிலருடன் பார்த்தசாரதி கோயிலைச் சுற்றிக் கொண்டிருந்தேன்.

உண்மையில் பார்த்தசாரதி கோயிலில் மூலவருக்குப் பின்னால் உள்ள ஒரு பிரகாரத்தில் அழகியசிங்கர் என்ற பெயரில் நரசிம்மன் உருவச்சிலை இருந்தது. அந்த சந்நிதிக்கும் பலர் வந்திருந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த சாமி சந்நிதியில் உள்ள பெயரைப் பார்த்தவுடன், என்ன புனைபெயர் வைத்துக்கொள்ளலாம் என்று புலப்பட்டது. ஐ.பி.ஸிங்கருக்கு இணையாக அழகியசிங்கர் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு மறைமுகமாக அசோகமித்திரன்தான் காரணம். அவருக்கு என் நன்றி எப்போதும் உரித்தாகும்.

1988 ஆம் ஆண்டு ‘நவீன விருட்சம்’ என்ற பெயரில் நான் ஒரு சிற்றேடு தொடங்கினேன். ஆரம்பத்தில் ஞானக்கூத்தன் ஒவ்வொரு இதழுக்கும் ஒரு கவிதை எழுதிக் கொடுப்பார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்த இதழ் வெளிவரும். என் பத்திரிகையில் அசோகமித்திரனையும் எழுதவைக்க  ஆசைப்பட்டேன். நான் அவரிடம், “எழுதித் தர முடியுமா?” என்று கேட்டேன். அவர் உடனே எழுத ஆரம்பித்துவிட்டார். அவர் ஒப்புக்கொண்டு எழுதித் தருவார் என்று முதலில் நான் நம்பவில்லை. பின், நவீன விருட்சத்தில் பெரும்பாலான அஞ்சலிக் குறிப்புகளை அசோகமித்திரன்தான் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அதுபோலவே அவருக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தபோது, ஸ்ரீனிவாஸ் காந்தி நிலையத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தேன். கூட்டத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் சீக்கிரமாகவே பேசி முடித்துவிட்டார்கள். கூட்டம் 1 மணி நேரத்தில் முடிந்துவிட்டது.
எனக்கு இது குறையாகவே இருந்தது. அசோகமித்திரன் அடிக்கடி ஒன்று சொல்வார். ‘இங்க கூட்டம் நடக்கிற இடத்திலதான் நாம பெருமை பேசிக்கொள்வோம். ஆனால், தெருவில் இறங்கி நாம நடந்து போனா, நாம யாருமில்லை. நமக்கு எந்த மதிப்பும் இருக்காது.’

னக்கு அவரிடம் பிடித்தது. அவரது நகைச்சுவை உணர்வு. எப்போது பேசினாலும் இந்த நகைச்சுவை உணர்வோடுதான் பேசுவார்.

ஒருமுறை ஓர் இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொண்டு நானும் அசோகமித்திரனும் டூவீலரில் வந்துகொண்டிருந்தோம். அந்தக் கூட்டத்தில் நான் கவிதை வாசித்திருந்தேன். அவரிடம் தயங்கித் தயங்கிக் கேட்டேன்.  “என் கவிதை எப்படி இருந்தது?” என்று. கொஞ்ச நேரம் அசோகமித்திரன் பேசவில்லை. பின் அவர் சொன்னார், “நான் கவிதை எழுதினால் எப்படி இருக்குமோ… அப்படி இருந்தது” என்றார். எனக்கோ தாங்க முடியாத சிரிப்பு. ஏன் என்றால், அவருக்குக் கவிதையே பிடிக்காது. எழுதவும் மாட்டார்.

பத்திரிகையில் வரும் கதையை அவர் படித்து, பிடித்திருந்தால், ஒரு கார்டில் பத்திரிகை பற்றியும் கதை நன்றாக வந்துள்ளது என்றும் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அவர் அதுமாதிரி ஒரு கார்டில் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை.

அவர் வேளச்சேரியிலிருந்து தி.நகருக்கு அவருடைய பெரிய புதல்வன் வீட்டிற்குக் குடிபெயர்ந்து வந்துவிட்டார். இதனால், மேற்கு மாம்பலத்தில் குடியிருக்கும் நான், அடிக்கடி அவரைச் சந்திப்பேன். வாரத்திற்கு ஒருமுறையாவது போனில் பேசிக்கொள்வோம். அவருக்கு ஏதாவது உதவி என்றால், உடனே போய்ச் செய்வேன். அவரைப் பார்க்கும்போதெல்லாம் மாம்பலத்தில் உள்ள போளி ஸ்டாலில் ஒரே ஒரு மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு செல்வேன். அதைச் சாப்பிட்டுக்கொண்டே,  ‘இதைத் தயாரிக்கிறவனுக்கு நோபல் பரிசு தர வேண்டும்’ என்பார். மௌனி, ஜி.நாகராஜன் போன்ற எழுத்தாளர்களைச் சந்திக்கும்போது ஏற்பட்ட அவதிகளை நகைச்சுவை ததும்பக் குறிப்பிடுவார். ஒரு மூத்த எழுத்தாளரைப் பற்றிச் சொல்லும்போது, “உங்களுக்கு ஏதாவது தண்டனை வேண்டுமா சொல்லுங்கள். அந்த எழுத்தாளர் எழுதிய நாவலுடன் உங்களை அறையில் பூட்டி விடுகிறேன். அதைப் படிப்பதுபோல தண்டனை வேற எதுவும் கிடையாது” என்பார். நகைச்சுவை உணர்வு மிக்க மனிதர்.

ந்த மாதம் 22ஆம் தேதி அவருக்கு 86 வது வயது முடியப்போகிறது என்று நினைக்கிறேன். அசோகமித்திரன் எளிதான மனிதர். ஆடம்பரமான வாழ்க்கைமுறை அவரிடம் கிடையாது. தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்திக்கொள்ள மாட்டார். அவருடைய இந்தத் தன்மையை நேரிடையாக அவரிடம் சொன்னால்கூட சாதாரணமாகக் கேட்டுக்கொண்டு இருப்பார். அவர் உண்மையிலேயே தமிழில், இந்திய அளவில், ஏன்… உலக அளவில் முக்கியமான எழுத்தாளர். குறிப்பிடப்பட வேண்டிய பெரிய எழுத்தாளர். புதியதாக எழுத வருபவர்கள் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

 

Ref : Vikatan Thadam magazine

3 Responses to Tribute to Ashokamitran

  1. Ragunathan says:

    I have read many of his books. That too books on his secunderabad childhood. Excellent.

  2. k.govindan says:

    Thondril pukazodu thondruga enpatharkku etuthukkatta vilangiyavar. Our sincere heart felt condolence.

  3. M.venugopal says:

    Only recently i read his karaindha nizalgal, .it was an experience by itself , i just got hooked, searching for his ’14 years with boss’ ‘iruthil erudhu velichathruku’ and his other books

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *