இதற்குத்தானே ஆசைப்பட்டார் பாலகுமாரன்!
பாலகுமாரனை எனது 18-வது வயதிலிருந்து அறிவேன். நேரடியான அறிமுகமும் பழக்கமும் 23-வது வயதில் நிகழ்ந்தது. பரஸ்பர விமர்சனங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் மத்தியிலும்கூட அந்த உறவில் கடைசி வரை எந்தக் கீறலும் இல்லை. அவர் வழியேதான் நான் இலக்கியத்திற்குள் வந்தேன். இலக்கியப் பள்ளியில் அவரே என் முதல் மானசீக ஆசான். என் காலத்து வாசகர்கள் பலரையும் அவர் எங்காவது ஓரிடத்தில் தன் படைப்பின் வழியே சந்தித்திருக்கிறார். இப்படி பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்று கோலோச்சிய காலத்தில் நானும் இருந்தேன்.
ஆண் – பெண் உறவு குறித்து ஜானகிராமனுக்குப் பிறகு அதிக அளவில் நுணுகி நுணுகிப் பல்வேறு கோணங்களில் எழுதியவர் பாலகுமாரன் என்பது என் அனுமானம். பெண்களின்பால் கரிசனத்தோடு பேசும் அவர் எழுத்துகள், பெரும் பெண் கூட்டத்தையே வாசிக்க வைத்தது. அவர்களில் சிலருக்கு அவை தைரியமும் தெளிவும் நிம்மதியும் தந்தன. சளைக்காமல் இருநூறுக்கும் மேற்பட்ட நாவல்களை, பல நூறு கட்டுரைகளை, சிறுகதைகளை எழுதிக் குவிக்கும் அளவுக்கு அவர் எழுத்தின் மீது கொண்டிருக்கும் வேட்கை அவரது வயதுக்கு மீறிய வயதைத் தந்ததுடன் உடலையும் கடுமையாய் நலிவடையச் செய்தது.
ஒரு அரசியல்வாதியால் இயலாத, ஒரு சமூக சேவகரால் எட்ட முடியாத, ஒரு தத்துவவாதி தர இயலாத, சிலசமயம் கடவுள் நம்பிக்கையும் செய்ய இயலாது தோற்கிற ஒன்றை ஒரு கலைஞன் தனது கலையின் வழியே சப்தமில்லாமல் செய்துவிடுகிறான். அவனால் நிகழ்ந்தது தெரியாமல்.. தெரிந்த பின்னும் உரிமையேதும் கோராமல். பாலகுமாரனும் இதைச் செய்தார்.
அவரது சிறந்த கதைகளில் ஒன்று ‘தட்டாரப்பூச்சி’. கதையின் அருமந்த உள்ளடக்கமும் பாத்திரச் செதுக்கலும் அபாரமானவை. வரலாறு நெடுக, முள்ளை மட்டுமே பெரும்பாலும் பதிவுசெய்தவர்கள் மத்தியில், 87 ஆண்டுகள் வாழ்ந்து, 100 அரிய தமிழ் நூல்களை நமக்குப் பதிப்பித்துத் தந்த மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதய்யர், ஒரு ரோஜாவைப் பதிவுசெய்தார். தன் வாழ்வில் ஒரு வண்டிக்காரத் தேவன் தன்னிடம் சவாரிக்குக் கூலி வாங்க மறுத்ததை நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார். அதுபோலவே ‘தட்டாரப்பூச்சி’. பின்னாளில், அவர் தேர்ந்த வசனகர்த்தாவாக வந்ததன் தடயங்களைக் கொண்ட பல கதைகளில், இதுவும் ஒன்று. தமிழ் சினிமாவின் தேவைக்கேற்ப வசனமெழுதுவது ஒரு பிரம்ம சூத்திரம். தமிழ் நவீன திரைக்கதை வசனத்தின் முன் ஏர்களில் ஒருவரான இவர், அதிலும் சில காலம் தனது கொடியைப் பறக்கவிட்டார்.
வாழ்வின் அபத்தத்தை, நிலையாமையைச் சொல்லும், ‘மிஷின்’ கதை 76-ல் எழுதப்பட்டிருந்தாலும் இன்றும் யௌவனம் கெடாத நவீனத்துவத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு இயந்திரச் சுழற்சியை வார்த்தைகளின் வழியே நம் கண்முன் நிறுத்துகிற கதை. அவர் கதைகள் பற்றி விசேஷமாகச் சொல்ல பிரத்தியேகமாகச் சில இடங்கள் இருந்தாலும், சில கதைகள் அபாரமான கதைகளே. சுதந்திரப் போராட்ட காலத்தில் ‘மணிக்கொடி’யில் எழுதிய பலரும், அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள்கூட, அதைப் பற்றி ‘மணிக்கொடி’யில் எழுதவில்லை. எழுதுவது என்பதும் அதன் உள்ளடக்கம் என்பதும் வேறொன்று என்ற மனநிலை அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், அது ஒரு இலக்கிய ஆவண வரலாற்று இழப்புதான்.
இன்று மேலைநாடுகளில் டெக்னிக்கல் ரைட்டிங் நிறைய எழுதப்பட வேண்டுமெனப் பேசிவருகின்றனர். அது இப்போது கணிசமாக வரத் தொடங்கியுள்ளது. தமிழில் அந்த வகை தொழில்நுட்ப எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர் பாலகுமாரன். தனக்குச் சம்பந்தமில்லாத பல துறைகளுக்குள்ளும் சென்று ஊடாடித் திரிந்து, பலவிதமான டெக்னிக்கல் நாவல்களை எழுதியுள்ளார். ஒரு காலத்தின் கலாச்சார ஆவணங்கள் அவை. அதுபோன்ற கதைகளின் துல்லியத்துக்காக அவர் திரட்டும் புள்ளிவிவரங்கள், மேற்கொள்ளும் பயணங்கள், சேகரிக்கும் புத்தகங்கள், இரவு – பகல் பாராத விவாதங்கள், துறை சார்ந்த அருஞ்சொற்கள், பழக்கவழக்கப் பண்பாட்டுக் குறிப்புகளுக்காக அவர்களோடே சில காலம் வாழ்ந்து விஷயங்கள் சேகரிக்கும் விதத்தை நான் நேரில் கண்டிருக்கிறேன். பதில் சொல்பவரே சோர்ந்துபோகும் அளவுக்கு அவ்வளவு விலாவாரியாய், துருவித் துருவிக் கேள்விகள் கேட்பார். ஒரு பென்சில், பேப்பர், பேனா, டேப்ரிக்கார்டர் எதுவும் இருக்காது. எல்லாம் மனசுக்குள் வாங்கிக்கொள்வார். கதைக்குள் வரும்போது அவை கதையின் உறுப்பாய் இருக்கும். விமானமோ, விவசாயமோ, இயந்திரமோ, இயல் கலையோ எதுவாயினும் அது சார்ந்த விற்பனன் சொல்வதுபோன்ற த்வனியைப் படைப்புகளில் கொண்டுவந்துவிடுவார்.
படைப்புகளில் விஷயங்களுக்கு அவருக்குப் பஞ்சமில்லாமல் போனதற்கு இன்னொரு காரணம், அவர் தனது வாசக வாசகியரோடு கொண்டிருந்த நேரடி, கடித, தொலைபேசி, மேடை, பத்திரிகைத் தொடர்புகள். பதின்பருவ வயதினரை அவர்களுக்கேயான விஷயங்களைத் தந்து வசப்படுத்தி முதலில் கதைக்குள் இழுத்துவிடுவார். ஆனால், அவன் கதையை விட்டு வெளியே செல்கையில், ஒரு பக்குவம் உணர்ந்த தன்மையை அவன் உணர, அவனை அடுத்த படிநிலைக்கு இயல்பாய் நகர்த்த, சதா அவர் தன் எழுத்துகளின் வழியே முயன்றுகொண்டேயிருந்தார். தளர்ந்துபோனவளைத் தாங்கிப் பிடித்து உற்சாகம் தருவதையும் காயம்பட்டவனுக்குக் களிம்பு தடவியதையும் அவர் எழுத்து செய்ததாலேயே அவருக்குப் பெரும் திரளான வாசகர் கூட்டம் இருக்கிறது. அவருக்குப் பின் அது யாருக்கும் இல்லை.
இவை எல்லாவற்றையும்விட முக்கியமாகச் சொல்ல வேண்டியது, அவரது அசாத்தியமான நடை. மர்ம நாவல்களில் துலங்கும் விறுவிறுப்பை, சமூக நாவல்களின் நடையில் கொண்டுவருதல் அவ்வளவு எளிதான காரியமல்ல. எந்தத் திருவிழாவிலும் தன் குழந்தையை இறுகப் பிடித்தபடி, வாத்சல்யத்தோடு நிகுநிகுவென அழைத்துச் செல்கிற அபூர்வ நடை அவருடையது. வாத்தியார் வீட்டு அகல நெடுந்திண்ணையில் யார் யார் வீட்டுப் பிள்ளைகளுக்கோ எப்போதும் பாடம் நடந்தபடிதான் இருக்கும். நான் அவரைப் பார்த்தபடியே சைக்கிளில் அவர் வீட்டைக் கடப்பேன். ஒரு கணம் இருவரும் பார்த்துக்கொள்வோம். அவரும் கூப்பிடுவதில்லை. நானும் நிற்பதில்லை. ஆனால், இருவரும் பேசிக்கொள்வோம்.
– ரவிசுப்ரமணியன், எழுத்தாளர்.
Ref : TamilHindu
-x-x-x-x-x-x-x
0-களில் இரண்டு வகைப் படைப்பாளிகள் தோன்றினர். அதில் ஒரு தரப்பு பொதுத்தளத்தில் புகழ்பெற்ற புதுக்கவிதையை எழுதிக்கொண்டு நகர்ந்தது. இன்னொரு தரப்பு நவீன கவிதையின்பால் பற்றோடு வந்தது. கவிதைகளுக்கு அப்பால் கதைகூறு முறைகளிலும் செம்மையான மாற்றங்கள் ஏற்பட்டன. வட்டார வழக்கு இலக்கியமானது. ஜெயகாந்தனுக்குப் பிறகு நிலவிய கதைத்தளத்தில் நூற்றுக்கணக்
கானவர்கள் கதையெழுதத் தொடங்கினர். இந்தப் பின்னணி அனைத்தையும் கொண்டவராக இலக்கியத்தில் நுழைந்தவர்தாம் பாலகுமாரன். ‘முட்டி முட்டிப் பால்குடிக்கின்றன நீளக்குழல் விளக்கில் விட்டில் பூச்சிகள்’ என்று ‘கணையாழி’யில் வெளியான பாலகுமாரனின் கவிதையைப் பலரும் பாராட்டினர்.
“என் தோள்மீது கைப்போட்டுக் கற்றுக்கொடுத்தவர் ஞானக்கூத்தன்” என்று ‘கணையாழி’ கவிதைக் கூட்ட நாள்களை நினைவுகூர்ந்திருக்கிறார் பாலகுமாரன். பாலகுமாரனின் ‘விட்டில் பூச்சிகள்’ கவிதைத் தொகுப்பு வெளியானபோது, அவர் நவீன கவிஞராகச் செயல்படுவதற்குரிய அனைத்துத் தகுதிகளையும் அடைந்திருந்தார். அவ்வழியில் மேலும் தொடர்ந்து செல்லக்கூடிய வாய்ப்பைக் காலம் அவருக்கு வழங்கவில்லை. அவர்சோட்டு இளைஞர்களான மாலன், சுப்ரமணியராஜு போன்ற பலருக்கும் இதழியலின் மீது பார்வைபட்டது. பாலகுமாரனுக்குச் சென்னை வாழ்க்கை ஒரு வாய்ப்பானது.
ஒரு பக்கம் தி.ஜானகிராமன், அசோகமித்திரன் என்று இலக்கியக் கணப்புடைய கதையுலகம். மறுபக்கம் வார இதழ்களும் பொதுக்கதைகளும் மக்களிடையே பெற்றிருந்த செல்வாக்கு. கவிதையை விடுத்து, கதையுலகிற்கு வந்த பாலகுமாரனுக்கு முன்னணி இதழ்களை வெல்ல வேண்டிய அறைகூவல் பிடித்திருந்தது. ‘குமுதம்’ அண்ணாமலையின் வீட்டு முன்னுள்ள பொதுத் தொலைபேசி யிலிருந்தே அவரை அழைத்துப் பேசிய துணிவு. “நல்ல கதையாயிருந்தா போடுவோமே…” என்று அவரைச் சொல்லும்படி செய்து, அவரிடமே கதைக் கட்டுகளைத் தந்து திரும்பியவர் பாலகுமாரன். இதற்கிடையே, ‘மௌனமே காதலாக…’ கதைக்கு ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றதும், தேர்ந்த கதைக்காரராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அன்றைய முன்னணி இதழ்களில் இடையறாது எழுதுபவராக மாறிப்போனார். எங்கெங்கும் பாலகுமாரன் என்ற பெயர் தென்படத் தொடங்கியது.
மூத்த இதழாளர் சாவி வழங்கிய வாய்ப்பினால், ‘மெர்க்குரிப் பூக்கள்’ தொடர்கதைக்கு எதிர்பாராத திக்குகளிலிருந்து வரவேற்பு கிடைத்தது. தேர்ந்த புதினத்தின் கட்டுமானத்தோடு பதைபதைக்கவைக்கும் நடையில் அத்தொடரை எழுதிமுடித்தார். உழுனித் தொழிற்சாலையில் பணியாற்றிய பட்டறிவு, ‘இரும்புக் குதிரைகள்’ ஆயிற்று. அந்நேரத்தில் காதல் ஓவியம் படப்பாடல்கள் வெளிவந்து, எங்கே பார்த்தாலும் ‘வைரமுத்து’ எனும் பெயர் பேசப்பட்டது. ‘இரும்புக் குதிரை’ களில் வைரமுத்தின் வரிகள் கதையூடே கூறப்படும். இப்போது, பாலகுமாரன் நன்கறிந்த எழுத்தாளர் ஆகிவிட்டார். பார்த்துக்கொண்டிருந்த பணியைத் துறந்து முழுநேரமும் எழுதினார். பாலசந்தரிடம் ‘சிந்து பைரவி’, ‘புன்னகை மன்னன்’ படங்களுக்கு உதவி இயக்குநரானார். ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கினார். பள்ளிச் சிறுவனான எனக்குப் பாலகுமாரன் அறிமுகமான காலகட்டம் அதுதான்.
அவரைப் படிக்கத் தொடங்கியபோது, நான் பையன். என் சிறுவம் கழிந்து மீசையரும்பும் இளைஞனானபோது, பாலகுமாரன் எழுதியவை பலவும் என்னோடு உரையாடின. நான் கணையாழியை நோக்கிப் போகாமல் இருந்திருந்தால், இலக்கியத்தின் வாயில்கள் எனக்கு அடைபட்டிருக்கக் கூடும். என்னை அதை நோக்கிச் செலுத்தியவை பாலகுமாரனின் தன்வாழ்க்கைக் கட்டுரைகள். ஓர் எழுத்தாளராக அவர் ஆவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் முதற்று, மனைவியோடு ஊடிக்கொண்டு திருப்பூருக்கு வந்து அலைவது வரை ‘மேய்ச்சல் மைதானம்’ என்ற கட்டுரை நூலில் பகிர்ந்திருக்கிறார். அந்தத் தொகுப்பைப் படித்ததும் நான் என்ன செய்ய வேண்டும்; எதை நாடவேண்டும்; எப்படிப் படிக்கவேண்டும்; எப்படி எழுதவேண்டும் என்று எல்லாம் விளங்கின.
இருவழிக் குடும்பத்தாராலும் ஏற்காமல் கைவிடப்பட்ட நிலையில் எண்ணற்ற காதல் திருமணங்கள் அக்காலத்தில் நடந்தன. இன்றுள்ளதைப்போல் ஒரு காதலை என்ன ஏது என்று சீர்தூக்கிப் பார்க்கும் முதிர்ச்சி அன்று இருக்கவில்லை. அவர்களுடைய காதலுக்கு பாலகுமாரன்தான் ஆறுதல். அவர்களுடைய வாழ்க்கைக்கும் பாலகுமாரனே வழிகாட்டி. புதிதாகக் கடை பிடித்து ஒரு கணினியை வாங்கி அச்சுக்கோப்பகம் வைத்தவர், பொதுத் தொலைபேசியகம் நடத்தியவர், தட்டச்சுப் பணியாளர், வீட்டுப் பலகாரம் செய்து கடைகளுக்குப் போட்டவர் என்று அவர் கதைகளில் நடமாடிய ஒவ்வொருவரும், அவ்வாறு நாமும் வாழலாமே என்னும் மறைமுக வழிகாட்டியாயினர்.
நான் பள்ளிப் படிப்போடு என் கல்வியை நிற்பாட்டிக்கொண்டு ஒரு நிறுவனத்தில் உதவியாளாகச் சேர்ந்தேன். இந்தச் சிறுதொழில்பாட்டோடு என் கவிதைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மனமெல்லாம் இருளாய்க் கவிந்திருந்தபோது, சென்னையிலிருந்து திருப்பூரை நோக்கிய இருப்பூர்திப் பயணம் ஒன்று வாய்த்தது. சென்னை மலைச்சாலையில் உள்ள காப்பீட்டுக் கழகத்தின் எதிரே இருக்கும் ஹிக்கின்பாதம்ஸில் பாலகுமாரனின் ‘இரவல் கவிதை’ என்ற கதைநூலை வாங்கியிருந்தேன். இருண்ட மனத்தோடு அந்நூலைப் பிரித்துப் படித்தபடியே வந்தேன். அந்தக் கதையில் இடம்பெற்றிருந்த இளைஞன் நானேதான். முன்னொருநாள் அவன் பாலகுமாரனாகவும் இருந்திருக்க வேண்டும். கவிதை எழுதுகிறான். தீராக்காதலோடு தன்னைச் சீராட்டும் ஒருத்தியை என்செய்வதென்று தெரியாமல் தவிக்கிறான். வாழ்க்கையை எப்படிப் பார்ப்பது, எப்படி எதிர்கொள்வது, என்ன செய்யவேண்டும் என்று அல்லாடுகிறான். கதையைப் படிக்கப் படிக்க என்னை அழுத்திய எடைகள் அனைத்தையும் அடையாளங்கண்டேன். அவற்றை என்ன செய்வது என்று தெரிந்துவிட்டது. எதிர்காலம் என்பது முடிவில்லாத வாய்ப்புகளைக்கொண்டது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. என் பதற்றங்கள் அனைத்தும் நீங்கின. இந்த விடுபாட்டைப் பற்றியும் அந்தக் கதை எனக்குள் ஏற்படுத்திய பரவய நிலை பற்றியும் பாலகுமாரனிடமே சொன்னேன். அவர் எவ்வித எதிர்வினையும் காட்டாமல் கேட்டுக்கொண்டார். அவரிடம் அப்படிச் சொல்கின்ற பத்தாயிரத்துப் பன்னிரண்டாவது ஆளாக நான் இருந்திருக்க வேண்டும்.
முகநூல் வழியாக பாலகுமாரனின் அன்பைப் பெற்றதும், அவர் எனக்குக் கூறிய அறிவுரைகள் பல. பொதிகைத் தொலைக்காட்சியில் நான் தோன்றி கவிதை படிக்கிறேன் என்று அறிவித்ததும், அவர் நினைவு வைத்திருந்து அந்நிகழ்ச்சியைப் பார்த்தார். “கொஞ்சம் பூசினாற்போன்று இருக்கிறீர்… அதில் ஒன்றும் தவறில்லை. வயிறு நிறைந்த பிற்பாடு கிடைக்கின்ற சொகுசோடு தொடர்புடையதுதான் கவிதை. அப்படித்தான் இருக்கணும்…” என்று கூறினார். “அடுத்த முறை சென்னை வரும்போது, கட்டாயம் என்னை வந்து பாருங்கள்” என்று பலமுறை கூறிவிட்டார். சென்னைக்குச் செல்வதென்றாலே நான் அடித்துப் பிடித்து ஓடுகிறவன். அப்பயணங்கள் யாவும் கடைசி இரண்டொரு நாளில் முடிவாகும். முன் திட்டமில்லாமல் பார்ப்பதற்காகச் சென்று பாலகுமாரனின் செயல்நிரல்களைக் குலைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
நாமொன்று நினைக்க பேரியற்கை ஒன்று நினைக்குமே…. எம்மூருக்கு வந்த பாலகுமாரன் என்னை நடுவழியில் பிடித்துவிட்டார். போக்குவரத்து விளக்குக்காகக் காத்திருந்தபோது, பக்கத்து வண்டியிலிருந்த ஓட்டுநர் என்னை அழைத்தார் “அவிநாசி சாலைக்கு எப்படிப் போகணுங்க?” என்பது அவர் கேள்வி. நான் வழி கூறியவாறே நோக்க அருகில் பாலகுமாரன். “ஐயா….” என்று கத்திவிட்டேன். அவரும் அடையாளம் கண்டுகொண்டார். வழியோரத்தில் வண்டியை நிறுத்தி, கையைப் பற்றி, நெற்றியோடு நெற்றி வைத்து அணைத்து, நெஞ்சைத்தொட்டு கண்மூடி ஏதோ செய்தார். தம்மிடமிருந்த புதுத்துணிகளை விரித்துப் போர்த்தி “தமிழுக்கு மரியாதை” என்றார். “தீர்க்காயுஷ்மான் பவ” என்று வாழ்த்திச் சென்றார். தற்செயல்கள்மீது எனக்கிருந்த நம்பிக்கை தகர்ந்தது. எல்லாம் விருப்பின் பெயரால் நிகழ்வது என்று நம்பத் தொடங்கினேன்.
கடைசியாக அவர் என்னை அழைத்து ஓர் ஐயம் கேட்டார். “கண்ணே வண்ணப் பசுங்கிளியே… ப் வருமா வராதா?” என்றார். “ஐயா… வண்ணம் என்பது மகர மெய்யீற்றுச் சொல்லுங்க… அது வருமொழி வல்லினத்தோடு சேர்ந்தால் மகர ஒற்று நீங்கி வருமொழி வல்லினத்தின் ஒற்று மிகும்ங்க ஐயா…” என்றேன். ‘‘அப்ப ப் வருமா… சரி” என்றார். இரும்புக் குதிரைகளில் வைரமுத்து கவிதையை எடுத்தாண்டவர், ‘கண்ணே வண்ணப் பசுங்கிளி’யில் என்னைக் குறிப்பிட்டி ருந்தார். நண்பர்கள் பலரும் எனக்கு வாழ்த்து கூறினர். விரைவில் அவரை நேரில் சென்று கண்டு மகிழ வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அந்த நாளும் வந்தது. நேரில் அவருடைய உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் நாள். “நீங்கள் சென்ற பிறகே வருவேன் என்று நினைக்கவேயில்லை ஐயா….”
பாலகுமாரன் எழுதிய பரப்பளவைத் தொடுமளவுக்கு இனி ஓர் எழுத்தாளர் தமிழில் வருவாரா என்பது ஐயமே. அந்தப் பேருழைப்புக்கு யார் ஒப்பாவர்? அவருடைய இருநூற்றெண்பதுக்கும் மேற்பட்ட நூல்களில் தமிழ்நாட்டின் நாற்பதாண்டு கால மக்கள் பாத்திரங்களாக உலவிக்கொண்டிருக்கிறார்கள். தாம் வாழ்ந்த காலத்திலேயே தமக்கான புகழை அடைந்த எழுத்தாளரும் அவரே.
ref : vikatan thadam
Balakumaran sir’s writing is unique and I am one of his followers. Let me pray God to give him good health and energy to come up with more valuable write ups for the society.
Udayar is pearl in the grredam of his padaipukkal.