வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்!
வைணவர்களுக்கு பெருமாள்தான் சகலமும். அவரைக் கொண்டாடுவதும் சீராட்டுவதுமாகவே தங்கள் வாழ்வை பயனுள்ளதாக அமைத்துக்கொள்வார்கள். ஆழ்வார்களுக்கு பகவானிடம் அப்படி ஒரு பிரேமை!
பன்னிருஆழ்வார்களில் நம்மாழ்வாருக்கு சிறப்பான இடமுண்டு. ஶ்ரீவைஷ்ணவத்தில் பெருமாள், தாயார் ஆகியோருக்கு அடுத்தபடியாகப் போற்றப்பெறுபவர் விஷ்வக்சேனர் ஆவார். அவரே நாமெல்லாம் உய்யும்படியாக இந்த மண்ணுலகில் நம்மாழ்வாராக அவதரித்தார்.
ஆனால் நம்மாழ்வாரின் குழந்தைப்பருவம் அவரைப் பெற்றவர்களுக்கு அத்தனை இனிமையானதாக இல்லை. காரணம், பிறந்ததில் இருந்தே எதுவும் பேசாமல், அசையாமல் இருந்தார். இப்படி உலக நிலைக்கு மாறாக இருந்ததால் பெற்றவர்கள் குழந்தைக்கு மாறன் என்று பெயரிட்டனர். உலக இயல்புக்கு மாறாக இருந்த குழந்தையின் நிலை கண்டு பெற்றவர்கள் மிகவும் கவலைப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் மனதில் ஒரு யோசனை தோன்றியது. பிள்ளையை அழைத்துக்கொண்டு, ஆழ்வார் திருநகரிக் கோயில் பெருமாளை உளமார வேண்டுவதுதான் அது.
தங்கள் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆழ்வார்திருநகரிக்குச் சென்றனர்.
பாற்கடலில் வீற்றிருக்கும் திருமாலுக்குக் குடையாகவும் இருக்கையாகவும் படுக்கையாகவும் உள்ளவர் பாம்பாகிய ஆதிசேஷன். விஷ்வக்சேனரின் அம்சமான நம்மாழ்வார் தங்குவதற்காக, ஆதிசேஷன் திருக்குருங்கூரில் ஒரு புளிய மரமாக வளர்ந்திருந்தார். ஒரு நாள் குழந்தையாகிய நம்மாழ்வார் தனது தாயின் மடியிலிருந்து இறங்கிச் சென்று அருகில் இருந்த அந்தப் புளிய மரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டார்.
நம்மாழ்வாருடன் இருந்த தொடர்பு காரணமாக அந்தப் புளியமரத்தை ‘திருப்புளி ஆழ்வார்’ என்றே பிற்காலத்தில் அழைத்தனர். இப்படி அவர் பல ஆண்டுகள் வாய் பேசாமலே அந்தப் புளிய மரத்தடியில் வளர்ந்து வந்தார்.
பல ஆண்டுகள் சென்ற பிறகு பெருமாளே அவரைத் தேடி வந்து தரிசனம் கொடுத்தார். அதன் பின்னர் பேச ஆரம்பித்தவர் வைணவத்தின் பொக்கிஷமான திருவாய்மொழி பாசுரங்களை இயற்றி புகழ்பெற்றார்.
இவரை விட வயதிலும் அனுபவத்திலும், பெரியவரான மதுரகவி ஆழ்வார், ராமபிரானை தரிசிக்க அயோத்தியில் தங்கி இருந்தார். அப்போது தென் திசையில் இருந்து ஓர் ஒளி வானவீதியில் தெரிந்தது. அந்த ஒளி எங்கிருந்து வருகிறது என்பதை அறிய விரும்பிய மதுரகவி ஆழ்வார், அந்த ஒளி வரும் திசையை நோக்கி பயணித்தார். அந்த ஒளியைத் தொடர்ந்தபடி வந்தவர், ஆழ்வார்திருநகரி புளியமரத்தின் பொந்தில் இருந்து வந்தது என்பதைத் தெரிந்துகொண்டார். அந்த பொந்தினுள் ஜடம் போல் இருந்த நம்மாழ்வாரை அழைத்துப் பார்த்தார். அவர் பதில் எதுவும் பேசாமல் இருக்கவே, ஒரு கல்லை எடுத்து எறிந்தார். அப்போதும் அவர் பேசவில்லை. எப்படியும் அவரிடம் பேசிவிடவேண்டும் என்று முடிவு செய்த மதுரகவி ஆழ்வார், அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
‘செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் அது எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’ என்பதுதான் அந்தக் கேள்வி. அறிவற்ற உடலோடு ஆத்மாவுக்குத் தொடர்பு ஏற்பட்டால், அது எதை அனுபவித்துக்கொண்டு எங்கே இருக்கும்? என்பதுதான் அந்தக் கேள்விக்கான பொருள்.
பலமுறை அழைத்தும், கல்லெறிந்து பார்த்தும் பேசாமல் இருந்த நம்மாழ்வார், வேதாந்த ரீதியிலான இந்தக் கேள்வியைக் கேட்டதும், தம்முடைய திருவாய் மலர்ந்து, ‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’ என்றார். அதாவது அந்த ஆத்மா உடலைப் பற்றிக்கொண்டு, அதில் உள்ள இன்ப துன்பங்களை அனுபவித்துக்கொண்டு அங்கேயே கிடக்கும் என்பதுதான் நம்மாழ்வாரின் பதிலுக்கான பொருள்.
அவருடைய பதிலைக் கேட்டு மிகவும் வியப்புற்ற மதுரகவி ஆழ்வார், தம்மைவிட வயதில் இளையவரான நம்மாழ்வாரிடம் தம்மை சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். நம்மாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரை தம்முடைய சீடராக ஏற்றுக்கொண்டார். நம்மாழ்வாரின் பாசுரங்களை சுவடியில் எழுதும் பேற்றினையும் பெற்றார் மதுரகவி ஆழ்வார். பன்னிரண்டு ஆழ்வார்களில் பெருமாளைப் பாடாத ஆழ்வார் மதுரகவி ஆழ்வார் மட்டுமே. தமக்கு இறைவனாகவும், எல்லாமாகவும் இருப்பவர் குருவான நம்மாழ்வாரே என்பதில் உறுதியாக இருந்தார் மதுரகவி ஆழ்வார். நம்மாழ்வாரின் பாசுரங்களை சுவடியில் எழுதிய மதுரகவி ஆழ்வார், பெருமாளைப் பாடவில்லை என்றாலும், தம்முடைய குருவாகிய நம்மாழ்வாரைப் போற்றி பாசுரங்களை இயற்றி இருக்கிறார். அந்தப் பாசுரங்கள் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று அழைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒரு பாடல்:
நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி
பாவி னின்னிசை பாடித் திரிவனே.
குருகூர் நம்பியைத் தவிர தெய்வம் வேறு அறியேன் என்று நம்மாழ்வாரைப் போற்றிப் பாடுகிறார் மதுரகவி ஆழ்வார்.
Leave a Reply