பி.எஸ்.ராமையா – 300 சிறுகதைகள் எழுதிய கவனிக்கப்படாத படைப்பாளி!

மேடையேறி பேசுகிறவனுக்குக் கிடைக்கும் மரியாதை, அந்த மேடையை அமைத்தவனுக்குக் கிடைப்பதில்லை… அவனும் ஒரு பேச்சாளனாகவே இருந்தாலும். அந்தக் கதைதான் எழுத்தாளர் பி.எஸ்.ராமையாவுக்கு நிகழ்ந்தது. மணிக்கொடி பத்திரிகைதான் நாம் குறிப்பிடும் மேடை.

300-க்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருந்தாலும் அவர் இலக்கிய உலகத்தில் மறக்கப்பட்ட மனிதராகவே இருந்தார். மணிக்கொடி பத்திரிகையின் ஆசிரியராக 1935 மார்ச் முதல் 1938 பிப்ரவரி வரை பணியாற்றியவர் பி.எஸ்.ராமையா.

மணிக்கொடி இதழ் மூன்று கட்டங்களாக வெளிவந்தது. முதல் கட்டம் என்பது, 1933 செப்டம்பர் முதல் 1935 ஜனவரி வரை பாரதியின் சரித்திரம் எழுதிய வ.ரா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. `தாயின் மணிக்கொடி பாரீர்…’ என்ற பாரதியின் பாடலிலிருந்து சொல்லெடுத்துப் பெயர் சூட்டிக்கொண்ட இதழ் அது. காந்திஜி முன்னெடுத்த தேசிய கிளர்ச்சி மதிப்பீடுகளுடன் அதிகம் விமர்சனம் மற்றும் அரசியல் கட்டுரைகளுடன் முதல் கட்ட மணிக்கொடி வந்து நின்றுபோனது. இரண்டாம் கட்டமாக, நவயுகப் பிரசுராலய வெளியீடாக பி.எஸ்.ராமையாவை ஆசிரியராகக்கொண்டு `அவ்வ்வ்வ்வளவும் சிறுகதைகள்’ என்ற விளம்பரத்துடன் வெளியானது. மூன்றாவது கட்டம் என்பது, 1938-39 ஆண்டுகளில் ப.ராமஸ்வாமி ஐயங்கார் அவர்கள் பொறுப்பில் மொழிபெயர்ப்புகள் அதிகம் வெளியான இதழாக சுயமரியாதை இயக்க எதிர்ப்பு, ராஜாஜி ஆதரவு ரசனைக் கட்டுரைகள் என்கிற உள்ளடக்கத்துடன் வந்து நின்றுபோயிற்று.

மணிக்கொடியின் கதையை, புதுமைப்பித்தன் தனக்கே உரிய பாணியில் இப்படி விவரிக்கிறார்:

“மணிக்கொடி, பொருளாதார நிர்பந்தம் என்ற நண்பரால் சிசுஹத்தி செய்யப்பட்டு அசிரத்தை என்ற குப்பைத்தொட்டியில் எறியப்பட்டு மூச்சுப் பேச்சற்றுக் கிடந்தது. அந்தக் குழந்தையை எடுத்து வந்து ஆசை என்ற ஒரே அமுதூட்டி வளர்ப்பதற்காக நானும் பி.எஸ் ராமையா என்ற நண்பரும் எங்களைப் போலவே உற்சாகத்தை மட்டும் மூலதனமாகக்கொண்ட இன்னும் சக எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்திவந்தோம் . அது இரண்டு மூன்று வருஷங்கள் கன்னிப்பருவம் எய்தி, மனதை மயக்கும் லாவண்யத்தைப் பெறும் சமயத்தில் அதைக் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு ஓடும் நண்பரைப் (ப.ராமசாமி) பெற்றோம். அவர், அவளை ஒருவருக்கு விற்றார். விற்ற உடனே அவளுக்கு ஜீவன் முக்தி இந்தக் கலிகாலத்தில் கிடைத்தது. இதுதான் மணிக்கொடியின் கதை.”

இரண்டாம் கட்டம் எனப்படும் பி.எஸ்.ராமையாவின் காலம்தான், தமிழ்ச் சிறுகதைக்குப் பொற்காலம் என, பல இலக்கிய முன்னோடிகளும் குறிப்பிடும்காலம். `காந்தத்துக்கு, இரும்புத்தூள்களைச் சேர்த்து இழுக்கும் சக்தி உண்டு. ராமையா, இலக்கிய உலகில் ஒருவிதமான காந்தம். குறிப்பாக, தற்காலச் சிறுகதை தமிழ் இலக்கியத்தில் தோன்றுவதற்கு மணிக்கொடியில் களம் அமைத்துத் தந்தவர். பல எழுத்தாளர்கள் அவருடைய சிறுகதை, மணிக்கொடியில் அவ்விதமாக இழுக்கப்பட்டவர்கள் ராமையா திட்டமிட்டு சிறுகதை மணிக்கொடியைப் பயிர்செய்தார். அவரே எதிர்பாராத அளவு ஓர் இலக்கியச் சக்தியாக அவர் கையில் மணிக்கொடி வளர்ந்தது. இந்த இலக்கியச் சக்தி பணக்காரனுடனோ பழைமையுடனோ நின்று திருப்தி அடையவில்லை. ஏழையையும் தனிமனிதனையும் சமூகத்தையும் தத்துவங்களையும் உண்மைக் கண்களோடு பார்க்கும் ஒரு போக்காக அமைந்ததுதான் அதன் சிறப்பு எனக் கூறலாம்’ என்று 1965-ம் ஆண்டில் வெளியான பி.எஸ்.ராமையா மணிவிழா மலரில் ந.பிச்சமூர்த்தி எழுதுகிறார்.

புதுமைப்பித்தன் உள்ளிட்ட தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகளுக்கு மேடை அமைத்துக்கொடுத்த பெருமை பி.எஸ்.ராமையாவுக்கு உண்டு. இன்றைய திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் – மீனாட்சியம்மாள்  தம்பதிக்கு, கடைக்குட்டி மகனாக 1905-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி பி.எஸ்.ராமையா பிறந்தார்.

படிக்க வசதியில்லை. ஆனால், படிப்பில் ஆர்வம்கொண்ட ராமையா, வாரச் சாப்பாடு சாப்பிட்டும், உபகாரச் சம்பளம் பெற்றும் நான்காவது படிவம் வரையில் படித்தார். வேலை தேடி சென்னைக்குப் புறப்பட்டார். படித்த படிப்பு நான்காவது பாரத்துக்கு (ஒன்பதாம் வகுப்பு) மதிப்பு இருந்தாலும், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஊருக்குத் திரும்பலாம் என நினைத்தபோது, திருச்சியில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை கிடைத்தது. ஆனால், அது சரிப்பட்டு வரவில்லை. பிறகு, கடலூரில் சிறு சிறு பணிகள் செய்தார். அதுவும் சரிவரவில்லை.

மீண்டும் சென்னைக்குத் திரும்பி, பற்பல இடங்களில் பணியாற்றி, ஆர்யபவன் உணவுச்சாலையில் சர்வர் வேலையில் சேர்ந்தார். 18 வயது வாலிபரான ராமையா, செய்யாத தொழில் இல்லை; பார்க்காத வேலை இல்லை.

அன்றைய படித்த இளைஞர்கள் பலரையும்போல காந்தி தொடங்கிய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டதால், கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றார். சிறைச்சாலையைவிடச் சிறந்த பள்ளிக்கூடம் வேறென்ன இருக்க முடியும்?

சிறையில், வ.ரா., ஏ.என்.சிவராமன், சங்கு சுப்பிரமணியம் முதலியோரின் அறிமுகமும் நட்பும் கிடைத்தன. சிறைத்தண்டனை முடிந்தவுடன் கதர் விற்பனை நிலையத்தில் வேலை கிடைத்தது. கதர் ஆடைகளை தோளில் சுமந்தபடி விற்பனை செய்தார். பொருட்காட்சியில் கதர்க்கடை போட பி.எஸ்.ராமையா வந்தது பற்றி மௌனியும் குறிப்பிட்டிருக்கிறார்.

காந்திஜியின் நிர்மாணத் திட்டங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. தொண்டர்படை முகாமிலிருந்து தொண்டாற்றினார். ஓர் அணா விலையுடைய சுதந்திர இயக்கப் புத்தகங்களை விற்பனை செய்தார். தூத்துக்குடி, ராஜபாளையம், திருநெல்வேலி, மதுரை, ஈரோடு முதலிய ஊர்களுக்குச் சென்று தொண்டர்படை முகாம்கள் அமைத்தார்.

1932-ம் ஆண்டில் மீண்டும் சென்னைக்கு வந்த ராமையாவுக்கு, அடுத்து என்ன செய்வதென்ற  குழப்பம். காங்கிரஸ் இயக்கத்து ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டார். எழுத்துத் துறையில் ஏற்கெனவே அவருக்கு ஈடுபாடு இருந்தது.

`ஆனந்த விகடன்’ சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் பார்த்தார். அதற்கு கதை எழுதத் தூண்டியவர் சங்கு சுப்பிரமணியம்தான். அவர் தீவிர தேசிய இயக்கக்கொள்கை உடையவர். பாரதி பக்தர். ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்குக் கதை அனுப்பினார் ராமையா. முதல் இடம் பெற்ற கதைக்கு, நூறு ரூபாய் பரிசு கிடைத்தது. ராமையா எழுதிய `மலரும் மணமும்’ கதைக்கு ஆனந்த விகடனின் ஊக்கப்பரிசாக பத்து ரூபாய் சன்மானம் கிடைத்தது.

கதையை அனுப்பிய அவசரத்தில் எழுதியவர் பெயரை எழுத மறந்துவிட்டார் ராமையா. கதையை வெளியிட்டு, `எழுதியவர் பெயரைத் தெரிவிக்கவும்’ என, பத்திரிகையில் பிரசுரித்த பிறகே, எழுதியது தான்தான் எனத் தெரிவித்து அந்தப் பத்து ரூபாயைப் பெற்றார். அதிலிருந்து அவருடைய எழுத்து வாழ்க்கை தொடங்குகிறது.

அவருடைய கதைகளில் சிறந்த கதை என எல்லோரும் தவறாமல் குறிப்பிடுவது `நட்சத்திரக் குழந்தைகள்’ கதையைத்தான். அந்தக் கதை இப்படித் தொடங்குகிறது…

“அப்பா, நட்சத்திரங்களுக்குக்கூட அப்பா  உண்டோ?”
“உண்டு அம்மா!”
“அவர் யார் அப்பா?”
“சுவாமி.”
“சுவாமியா? அப்பா, அவர்கூட உன்னைப்போலத்தானே இருப்பார்? நட்சத்திரம் ரொம்ப அழகாயிருக்கே. அதன் அப்பாகூட அழகாத்தானே இருப்பார்?”
“ஆமாம் அம்மா! சுவாமியினுடைய அழகைப்போல வேறு யாரும் அழகு இல்லை.”
“சுவாமிகூட உன்னைப்போல நல்லவர்தானே?”
“ஆமாம்.”

`ஆமாம். எனக்குக்கூடத் தெரிகிறது. சுவாமி ரொம்ப… ரொம்ப நல்லவர். நட்சத்திரமே பளிச்சினு அவ்வளவு நன்னாயிருக்கே.  அவா அப்பா எப்படி இருப்பார்!”
“அவர் ரொம்ப நல்லவர். நம்மையெல்லாம்விடப் பெரியவர்.”
“அப்பா! நட்சத்திரம் எப்போ பிறக்கும்?”
“சாயங்காலத்தில்.”
“எப்படியப்பா அது பிறக்கிறது?”
“நாம் சத்தியத்தையே பேசுவதால், நாம் ஒவ்வொரு தடவையும் ஓர் உண்மையைச் சொல்லும்போது ஒரு நட்சத்திரம் பிறக்கிறது.”
“நான்கூட நிஜத்தையே சொன்னால் நட்சத்திரம் பிறக்குமா அப்பா.”
“ஆமாம் அம்மா! நீ ஒவ்வொரு தடவையும் நிஜம் சொல்லும்போது ஒரு நட்சத்திரம் பிறக்கிறது.”
“அப்பா!”
“என்ன அம்மா?”
“நம்ம ஊரிலே அவ்வளவு பேரும்  (குழந்தைகள் எல்லாம்) நிஜத்தையே பேசினா, எவ்வளவு நட்சத்திரம் பிறக்கும்? நிறைய… (இரண்டு கைகளையும் விரித்துக்காட்டி) இவ்வளவு நட்சத்திரம் பிறக்குமோல்லியோ?”
“ஆமாம் அம்மா!”

அதைக் கேட்டவுடன், குழந்தை ரோஹிணி வேறொன்றும் பேசாமல் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவளாய்த் திரும்பிவிட்டாள்.

அப்போது ஒரு நட்சத்திரம் எரிந்து கீழே விழுகிறது. அதைக் கண்ட சிறுமியின் தந்தை, “யாராவது பொய் சொல்லிவிட்டால் ஒரு நட்சத்திரம் இப்படி உதிர்ந்து விழுந்துவிடும்!” என்கிறார். ரோகிணியும் அதை ஏற்றுக்கொள்கிறாள்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு ஓர் இரவில் வானத்திலிருந்து எரிந்து விழும் நட்சத்திரம் ஒன்றைக் கண்டு வேதனை தாங்க முடியாமல் ரோகிணி அழுகிறாள். அப்பா சமாதானப்படுத்தும்போது, “நம் ஊரில் யாரோ பொய் சொல்கிறார்கள் அப்பா. ஒரு நட்சத்திரம் உதிர்ந்துபோனால் கடவுள் எவ்வளவு வேதனைப்படுவார். அதை நினைத்துதான் வருத்தப்படுகிறேன்!” என்கிறாள் குழந்தை.

“நீதானே அப்பா சொன்னே, `நாம் ஒரு நிஜம் சொன்னால் ஒரு நட்சத்திரம் பிறக்கிறது’ன்னு. அப்போ ஒரு நட்சத்திரம் கீழே விழுந்தா, யாரோ ஒரு பொய்  சொல்லிட்டாங்கன்னுதானே அர்த்தம்?  சுவாமியினுடைய மனசு இப்போ எப்படி இருக்கும் அப்பா? எனக்கே நிறைய அழ வரதே” என்று சொல்லிவிட்டு அழத் தொடங்கினாள் அந்தக் கபடமற்ற குழந்தை.

`அந்த பச்சை உள்ளத்தில் எழுந்த துக்கத்தையும் அதன் துன்பத்தையும் நாவின் மொழிகளால் விவரிப்பது இயலாத காரியம். அது இதயம் இதயத்தினோடு தனது சொந்த பாஷையில் உணர்த்தவேண்டிய புனிதமான ஒரு  துக்கம்’ என, அந்தக் கதை முடியும். குழந்தை மனதுடன் நெருங்கிப்போகும் அதிசயத்தை இந்தக் கதை நிகழ்த்துகிறது என்றாலும், சற்றே அதீதமாக அறிவுத்தர்க்கம் செய்யும் குழந்தையாகப் படைத்திருப்பது இயல்பாக இல்லை.

நான் இளவயதில் முதன்முதலில் படித்த பி.எஸ்.ராமையாவின் கதை `மலரும் மணமும்’தான். வாசித்து முடித்து ரொம்ப நாளைக்கு மனதில் நின்ற கதையும் அதுதான். அத்தை மகன் ராமதாஸைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் செல்லம், சட்டம் படிக்கப் பட்டணம் போயிருக்கும் அவன் வரவுக்காகக் காத்திருக்கிறாள். அன்றலர்ந்த மலர்போல அவள் மனம் அவனுக்காகப் பூத்துக் குலுங்கிக்கொண்டிருக்கிறது. அவனும் அவளை நேசிக்கிறான். ஆனாலும் படிப்பு முடியும் வரை காத்திருக்கச் சொல்கிறான். ஆனால், காலம் அவளுக்கு வேறொருவனுடன் திருமணத்தை நடத்திவைக்கிறது. சீக்கிரத்திலேயே அந்தக் கணவனும் இறந்து அவள் விதவையாகிறாள். அவளுக்கு வாழ்வுகொடுக்க நினைக்கும் ராமதாஸ், அவளை மணம் முடிக்கிறான். முதலிரவில் அவளை அவன் நெருங்கும்போது, “உன்னுடைய திருப்திக்கும்

சந்தோஷத்துக்கும்தான் நான் இதற்கு சம்மதித்தேன். உயிருள்ள வரை இந்தக் கட்டையை நீ பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று அவன் மார்பில் அவனுடைய அரவணைப்பில் மணமற்ற மலராகிப்போகிறாள்.

காதலில் மலர்ந்து மணம் வீசும் பக்குவம் மிளிரும் காலத்திலேயே இருவரும் சேர்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என இந்தக் கதையை வாசித்த அன்றைய நாளில் என் மனம் ஏங்கியது. செல்லத்துக்காக மிகவும் துக்கப்பட்டேன். மனித உறவுகளில், பெண் மனதில் தாமதம் நிகழ்த்தும் கொடுமையை மிகநுட்பமாகச் சொல்லும் கதை இது.

‘பாக்கியத்தின் பாக்கியம்’ என்ற தொகுப்பின் சிறிய முன்னுரையில் `கார்னிவல்’ என்னுடைய மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என்பது என் கருத்து’ என்று பி.எஸ்.ராமையா எழுதியுள்ளார்.1936-ம் ஆண்டில் மணிக்கொடியில் வந்த கதை இது. ஒரு தாசியின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. பணக்கார மைனர்களுக்கு வீட்டில் இடம் கொடுத்துப் பணிவிடை செய்யும் தாசியான `வனஜாஷி’யிடம் விழுந்துகிடக்கும் மைனர், அவளை வீணை வாசிக்கச் சொல்கிறான்.

அவர் ரொம்ப இனிமையாகக் குனிந்து என் கன்னத்தில் மூச்சுக்காற்றுப் படும்படி நின்றுகொண்டு “வனீ… வீணை வாசியேன்” என்று கொஞ்சலாகச் சொன்னார்.

“அவர் என்னை பல பெயர்களிட்டுக் கூப்பிடுவார். வனஜாஷி என்று என் முழுப்பெயரையும் சொல்லிக் கூப்பிட்டால் அதற்கு ஒரு பொருள். அப்போது அவருடைய நெஞ்சம் என் மயக்கத்தில் சரியாக லயிக்கவில்லை எனச் சொல்லலாம். பிறகு, சிறிது சிறிதாக பெயர் குறுகத் தொடங்கும். `வனஜா, வனஜி’ என்றெல்லாம் மாறி, கடைசியாக `வனீ’ என்று ஆகிவிடும். அதுதான் அவருடைய உள்ளத்தில் என்மேல் எழும் பிரேமையின் உச்சஸ்தாயியைக் குறிக்கும் என்பது எனக்குத் தெரியும்.

ரொம்ப கர்வத்துடனும் பரமதிருப்தியுடனும் வீணையைக் கையில் எடுத்தேன். சாதாரணமாகவே வீணையை மீட்டியவுடன் என் மனம் என் பிடியை மீறிவிடும். அதென்னவோ என்னால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. வீணையின் தந்திகளை சுருதி கூட்டி ஒருதடவை மீட்டிவிட்டவுடன் அந்த நாதத்துக்கு என் உடலில் எங்கேயோ ஓர் எதிரொலி எழுவதாக உணருகிறேன். நான் மீட்டியது வீணையின் தந்திகளை அன்று, என் சொந்த நரம்புகளையேதான் எனத் தோன்றுகிறது.”

சங்கீதத்தை பானம் அருந்திய போதையுடன் கேட்டுக்கொண்டிருக்கும் மைனரின் ரசனைக்குக் கேடாகக் கீழே ஏதோ சத்தமாகத் தகராறு நடக்கிறது. தன்னுடைய வாக்கிங் ஸ்டிக்கால் அவர்களை அடித்து விரட்டுகிறார். கூலி கொடுக்காத பிரச்னைக்காக எழுந்த சண்டை அது. தன் ரசனை குலைந்துபோனதால் வெறுப்படைந்த மைனர், வனஜாஷியை அழைத்துக்கொண்டு காரில் கார்னிவலுக்குப் போகிறார். போய்த் திரும்பும் நடுராத்திரி வேளையில் தெருவில் பாலியல் தொழில் செய்யும் பெண் தனக்குத் தர ஒப்புக்கொண்ட எட்டணாவைத் தராமல் ஏமாற்றும் வாடிக்கையாளரிடம் தகராறு செய்துகொண்டிருக்கிறாள். கூட்டம் கூடி கார், போகும் பாதையை மறித்து நிற்கிறது. மைனர் கீழே இறங்கி பஞ்சாயத்துப் பண்ணி அனுப்புகிறார். “ஊரில் உள்ள தாசிகளை எல்லாம் துரத்தி அடிக்கணும்” என்றபடி காருக்கு வருகிறார். வனஜாஷிக்கு தானும் அந்தத் தெரு தாசியும் ஒன்றுதானே என்கிற பச்சாதாபமும் தன் மீதே அருவருப்பும் அடைகிறாள். கதையில் மைனரைப் பற்றி எதிர்மறையாக ஒரு வார்த்தைகூடக் கிடையாது. ஆனால், கதையை வாசிக்கும் நமக்கு மைனர் மீது கோபமும் வெறுப்பும் உண்டாகிறது. அதுவே இந்தக் கதையின் வெற்றி.

அந்தக் காலத்தில், மணிக்கொடி எழுத்தாளர்களுக்கும் ஆனந்த விகடன் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒரு சீனப்பெருஞ்சுவரே எழுப்பப்பட்டிருந்தது. கல்கிக்கும் புதுமைப்பித்தனுக்கும் இடையே ஒரு பனிப்போரே நிகழ்ந்துகொண்டிருந்தது. ஜனரஞ்சக எழுத்தைப் பிரதிபலிப்பவராக –வாசகனுக்கு வால் பிடித்துச் செல்பவராக கல்கி, மணிக்கொடிக்காரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால், மணிக்கொடி ஆசிரியராகவே பணியாற்றிய ராமையாவுக்கு, ஆனந்த விகடன் பற்றி அத்தகைய உணர்வு இல்லை.

தன்னுடைய சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் இவ்விதம் குறிப்பிடுகிறார்…

‘1933-ம் ஆண்டு மறுமலர்ச்சி இலக்கிய சரித்திரத்தில் ஓர் எல்லைக்கல். அந்த ஆண்டில் ஆனந்த விகடன், தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு ஒரு பெரும்பணி செய்தது. அந்தப் பத்திரிகையில் முதல்முறையாக சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தினார்கள். அந்தப் போட்டியே தமிழ் படிப்பவர்களை இலக்கிய வகைகளில் சிறுகதைக்குரிய இடத்தையும் மதிப்பையும் பற்றிச் சிந்திக்கச்செய்தது…’

சிறுகதை என்கிற புதிய (1930-களில்) இலக்கிய வடிவத்தைப் பரவலாக அறிமுகம் செய்தது ஆனந்த விகடன் என்கிற நெகிழ்வுப் பார்வை அவருக்கு இருந்திருக்கிறது. மணிக்கொடியிலிருந்து வெளியேறிய பிறகு, ஆனந்த விகடனில் வாரம் ஒரு சிறுகதை எழுதினார் பி.எஸ்.ராமையா. அவருடைய கதைகள் வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்டன.

“கதைகள் பின்னுவதில் அவர் வெகு சாமர்த்தியசாலி. இந்த லாகவத்திலிருந்து அவருடைய நாடகத் திறமையும் பிறந்திருக்கிறது. வேறுவிதமாகச் சொன்னால், கற்பனைவளம் மிகுந்தவர் என அவரைக் குறிப்பிட வேண்டும். அவர் நோக்கில் உயர்வு நவிற்சி அதிகம் காணப்படுவதாகக் கூற முடியாது. ஆனால், அதில் ஒரு கிண்டல் பார்வை உண்டு. அவரது பல சிறுகதைகளில் இந்தத் தன்மையைக் காணலாம். குறிப்பாக, வாழ்வின் துன்பம் அவருக்கு முக்கிய இலக்கிய விஷயம். இந்தத் துன்பத்துடன் நடைபெறும் போராட்டமே அவருடைய பின்னல்கள்” என்று ந.பிச்சமூர்த்தி, ராமையாவின் கதைகளைப் பற்றி மதிப்பீடு செய்கிறார்.

`தமிழிலே நட்சத்திரக் குழந்தைகள், சிவசைலம், எங்கிருந்தோ வந்தான், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்கிற தலைப்புகளில் வந்துள்ள கதைகள் ஒப்புயர்வற்றவை’ என்று புதுமைப்பித்தன் 1946-ம் ஆண்டில் `முல்லை’யில் எழுதுகிறார்.

ராமையாவின் வாழ்வு, எழுத்து இரண்டின் அடிப்படையுமே எளிமைதான். அசலான காந்தியவாதியான அவர், விடுதலைக்குப் பிறகான இந்திய வாழ்க்கை சுயநலமே பிரதானம் என்று ஆகிவிட்டது பற்றி வேதனைகொண்டவராக `சுதந்திரம் வந்ததிலிருந்து இந்திய மனநிலை தேய்ந்து சுருங்கிக்கொண்டே வந்து, இன்று அவனவன் தான் தனக்கு என்ற மனோநிலை மேலோங்கி வருகிறது’  என்று கவலைகொண்டிருந்தாலும் அவநம்பிக்கை அடையாமல்தான் இறுதிவரை இருந்தார் என்பது சி.சு.செல்லப்பாவின் கணிப்பு.

ராமையாவின் கருத்தாக சி.சு.செல்லப்பா கூறுவது…

“காந்தி போட்ட வித்து, முளைவிட்டு செடியாக வந்துகொண்டிருக்கிறது. இப்போது அந்தத் தியாக வெப்பம் தணிந்துவிட்டதே என்று நீங்களும் நானும் அங்கலாய்த்துச் சிந்திக்கிறோமே, அதுவே ஒரு அறிகுறிதான். இப்படி எத்தனை பேர் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். அவ்வளவு சிந்தனையும் உணர்ச்சியும் பெருகி நிச்சயமாக பலன் அளித்தே தீரும். காந்தியை போன்ற ஒரு ஜீவசக்தி, ஆத்ம சக்தி ஐம்பது வருஷங்களாகக் கொட்டிய உழைப்பு, பலன் அளிக்காமல் போய்விட்டதென்றால், மனிதகுலத்தின் வரலாற்றே கட்டுக்கதை, கற்பனை என்று ஆகிவிடும்.

`வாழ்க்கையில் துன்பம், துயரம், இன்பம் இருக்கின்றன. அதேபோல தீமை, புன்மை, கயமை ஆகிய தன்மைகளும் இருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் அழகு இருப்பதாகச் சொல்ல முடியாது. ஆனால், அழகு இருப்பதாக அல்லது அழகாக இருப்பதாக எழுதிவிட முடியும் – திறமை உள்ள ஓர் எழுத்தாளனால். ஆனால், தீமையும் புன்மையும் கயமையும் எவ்வளவு அழகுப்படுத்தப்பட்டாலும் இலக்கியச் சரக்கு ஆகாது. அப்போதைக்கு அது மயக்கத்தை எழுப்பலாம். நிலைத்து நீடித்து நிற்காது. அசிங்கத்தை அழகுப்படுத்திக் காட்டுவது அரிய திறமைதான். ஆனால், அறிவாளிகள் அதை மதிப்பதில்லை.

நூற்றுக்கணக்கான கதைகளை பி.எஸ்.ராமையா எழுதியிருந்தாலும், அவற்றில் எந்தக் கதையும் மன விகாரங்களுக்கும் வக்கிரங்களுக்கும் இடமளித்ததில்லை. அவர் கல்கியைப்போல வெகுசன இலக்கியக்காரர் அல்ல. தன் வாசகர்கள் யார் என்ற தன்னுணர்வோடு எழுதியவரும் அல்ல. சிறுகதை வடிவம் குறித்த பிரக்ஞையோடு எழுதியவரும் அல்ல.

ஆனாலும் க.நா.சு. `ராமையா ஒரு நல்ல சிறுகதையைக்கூட எழுதியதில்லை’ என்று கூறுவதை என்னால் ஏற்க இயலவில்லை. முன் முடிவுகள் இல்லாமல் அவருடைய கதைகளை வாசித்தால் நட்சத்திரக் குழந்தைகள், மலரும் மணமும், கார்னிவல் போன்ற அற்புதமான கதைகளை எழுதியவராகத்தான் நாம் அவரைக் கருதுவோம்.

மணிக்கொடியிலிருந்து வெளியேறிய பிறகு  சினிமாத் துறையின் மீது அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. பத்து ஆண்டுகாலம் எழுத்தை மறந்து, சினிமாவில் வேலைசெய்தார். 1940-ம் ஆண்டில் முதன்முதலாக `பூலோக ரம்பை’ என்ற படத்துக்கு வசனம் எழுதினார். அதைத் தொடர்ந்து `மணிமேகலை’, `மதனகாமராஜன்’, `குபேர குசேலா’, `சாலிவாஹன்’, `பக்த நாரதர்’, `விசித்திர வனிதா’ எனப் பல படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.

சிரிப்பு நடிகர் சந்திரபாபுவின் சினிமா பிரவேசம் ராமையாவின் `தன அமராவதி’ என்ற படத்தின் மூலம் நிகழ்ந்தது. சந்திரபாபுவை திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை, பி.எஸ்.ராமையாவுக்கே உரித்தானது. 1943-ம் ஆண்டில் இவர் திரைப்படம் பற்றிய நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்த நூல் திரைப்படத் துறை பற்றிய மிகவும் முக்கியமான பதிவுகளை உள்ளடக்கியது. இவரது திரைப்பணி, 1949-50 வரையிலும் நீடித்தது. பிறகு, இந்தத் துறையை அவர் வெறுத்து முற்றாக வெளியேறி மீண்டும் எழுத வருகிறார்.

அவருடைய 300 கதைகளைப் பற்றியும் ஒரு பார்வையை முன்வைத்து கதைகளைத் தொகுத்து `பி.எஸ்.ராமையாவின் கதை பாணி’ என்கிற நூலை எழுதிய சி.சு.செல்லப்பா, அந்த நூலின் முன்னுரையில் அந்தக் கதைகளை ஓர் அட்டைப்பெட்டியில் அலட்சியமாக ராமையா போட்டுவைத்திருந்தைக் குறிப்பிடுகிறார். தேர்ந்தெடுத்த கதைகளை வரிசைப்படுத்தி ராமையாவுக்கு அனுப்பியபோது அவர் எழுதிய கடிதத்தில், ‘நான் சோற்றுக்கு எழுதிய கதைகளைக்கூடத் தேர்ந்தெடுத்திருக்கிறாயே. சரி, என் விருப்பத்தைச் சொல்கிறேன். குங்குமப்பொட்டு குமாரசாமி துப்பறியும் கதைகளை விட்டுவிட்டாயே. அதைச் சேர்க்க விரும்புகிறேன். உன் விருப்பத்தைத் தெரிவி’  என்று எழுதியதாக செல்லப்பா குறிப்பிடுகிறார்.

சோத்துக்கு எழுதிய கதைகள் என்று அவரே நிராகரிக்கும் கதைகளும் அவரிடம் உண்டு. அது பற்றிய பார்வையும் அவருக்கு இருந்தது என்பதுதான் இங்கு முக்கியம். தன் சொந்த ஊர்க்காரரும் நண்பருமான ராமையாவின் கதைகளைக் காலவெள்ளம் அடித்துச் சென்றுவிடாமல் இருப்பதற்காக, தன் தள்ளாத வயதிலும் அக்கறை எடுத்து சி.சு.செல்லப்பா தொகுத்திருக்கிறார். எப்படிப்பட்ட அன்பு, எப்படிப்பட்ட நட்பு என்பதை நினைத்துப்பார்க்கவே மனம் விம்முகிறது.

`என் கணிப்பில் ராமையா உலகச் சிறுகதைத் துறையில் இடம்பெறக்கூடியவர், ஆண்டன் செகாவ், மாப்பஸான், ஓஹென்ரி, கேத்தரீன் மேன்ஸ்ஃபீல்டு, டி.ஹெச். லாரன்ஸ், ஃபிராங்க் ஓ’கானர், ஹென்ரி ஜேம்ஸ், எர்னஸ்ட் ஹெமிங்வே, ஹெச். ஈ. பேட்ஸ் ஆகியோர் அடங்கிய முன்வரிசை சிறுகதையாளர்களில் ஒருவர் என்பது என் துணிபு. இவர்களிடம் தனித்தனியாகக் காணும் பல அம்சங்களையும் ராமையாவின் கதைகளில் ஒருங்கே காணலாம். அந்த அளவுக்கு அவரது 300 கதைகளில் `நானாவிதம்’ (வெரைடி) காணலாம். மனித சுபாவம் பற்றிய அதிகபட்ச குணாம்சங்களையும் நிறைகுறைகளின் சித்திரிப்பையும் காணலாம். மரபுக்கும் தற்காலத்துக்கும் உறவு ஏற்படுத்தியவர். பழைமைக்கும் புதுமைக்கும் பொருத்தம்காட்டியவர்’  என்று சி.சு.செல்லப்பா தன் நூலில் கணித்துக் கூறுவதை சற்று உணர்ச்சிவசப்பட்ட கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது.

மணிக்கொடி எழுத்தாளர்களில் `புதுமைப்பித்தனைத் தவிர வேறு சிலரும் நல்ல கதைகள் எழுதினார்கள். எனினும் புதுமைப்பித்தனிடமிருந்த மன உணர்ச்சிகளை வார்த்தைகளில் மடக்கிக்கொண்டுவரும் சக்தி மற்றவர்களிடம் குறைவாகவே இருந்தது’ (இலக்கிய விமர்சனம் என்னும் நூலிலிருந்து) என்கிற தொ.மு.சி.ரகுநாதனின் கருத்தை முற்றாக மறுப்போர் இலர்.
எப்போதும் வெற்றிலை போடும் பழக்கமுள்ள பி.எஸ்.ராமையா, தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு 18.05.1983 அன்று சென்னையில் காலமானார். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அவரது சிறுகதைகளுக்காகவும் சிறுகதை என்னும் இலக்கிய வகை செழித்து வளர்வதற்காக அவர் செலுத்திய தன்னலமற்ற உழைப்புக்காகவும் என்றும் அழியாத இடம் உண்டு.

Ref : Vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *