சௌந்தரம் ராமச்சந்திரன்
1939 ஜூலை 8, காலை 8.45 மணிக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் முதன் முறையாக நுழைந்தார்கள், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆறு பேர். பி.கக்கன், முருகானந்தம், வி.எஸ்.சின்னையா, முத்து, வி.ஆர்.பூவலிங்கம், எஸ்.எஸ்.சண்முகம் ஆகிய ஆறு பேருடன் கோயிலுக்குள் நுழைந்த மற்ற இருவர் – ஏ.வைத்தியநாத ஐயர், மருத்துவர் சௌந்தரம் ராமச்சந்திரன்.
ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழைந்த செய்தி காட்டுத்தீ போல மதுரை நகரெங்கும் பரவியது. அன்றே கள்ளழகர் கோயிலுக்குள்ளும் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழைந்தனர். அடுத்த நாள், கூடலழகர் கோயில், திருவில்லிபுத்தூர் கோயில், தஞ்சை பெரிய கோயில் என்று அடுத்தடுத்து கோயில் களுக்குள் நுழைந்தனர், அதுவரை அனுமதி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள்.
இந்த மாற்றத்தைப் படிப்படியாகக் கொண்டு வந்து, கலவரங்கள் எதுவும் பெரிதாக நிகழாமல் காத்தவை – சௌந்தரம் ராமச்சந்திரனின் திட்டமிடலும் காய் நகர்த்தலும்தான்!
1932-ம் ஆண்டிலேயே, `ஹரிஜன மக்கள் கோயில்களுக்குள் நுழைய உரிமை கோர வேண்டும்’ என்று வலியுறுத்திவந்தார் காந்தி. 1939-ம் ஆண்டுதான் இதற்கான சரியான வேளை வாய்த்தது.
மதுரை நகர் முழுக்க, `ஹரிஜனர்களும் மனிதர்கள்தாம்; அவர்கள் கோயில் களுக்குள் நுழைய அனுமதி வேண்டும்’ என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தினமும் நகரின் மூலைமுடுக்குகளில், கோயில் நுழைவை வலியுறுத்தும் இரண்டு மூன்று பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. மருத்துவர் சௌந்தரம், தியாகராஜ சிவம், கிருஷ்ணகாந்த், பி.கே.ராமாச்சாரி, பட்டாபி ராமையா போன்றோர் பெண்களிடம் அனைவருக்குமான சம உரிமை மற்றும் ஆலயங்களுக்குள் நுழைய உரிமை கோரும் போராட்டத்தின் அவசியத்தை எடுத்துச் சென்றனர். கணவர் ராமச்சந்திரனுடன் இணைந்து தொடங்கிய `ஹரிஜன சேவக் சங்கம்’ மூலம் வீடு வீடாக இந்தச் செய்தியை எடுத்துச் சென்ற சௌந்தரம் இல்லையென்றால், இந்தப் போராட்டம் வெற்றிகண்டிருக்க முடியாது.
1904 ஆகஸ்ட் 18 அன்று, புகழ்பெற்ற டி.வி.சுந்தரம் ஐயங்காருக்கு மகளாக நெல்லையில் பிறந்தார் சௌந்தரம். சுட்டிப் பெண்ணாக சுற்றித்திரிந்த தன் மகளுக்கு, தனக்கு மிகவும் விருப்பமான உறவுக்காரரான மருத்துவர் சௌந்தரராஜனை 1918-ம் ஆண்டு, மணம் முடித்துவைத்தார் சுந்தரம் ஐயங்கார். சில ஆண்டுகளிலேயே மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த சௌந்தரராஜன், பிளேக் நோய் தாக்கி மரணப் படுக்கையில் விழுந்தார். செய்வதறியாத சிறுமி சௌந்தரத்தை கல்வியைத் தொடருமாறு பணித்தார். கூடவே மருத்துவப் படிப்பை முடித்து மக்கள் சேவையில் அவர் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், மனைவி தன்னை மறந்துவிட்டு, வேறொரு திருமணம் கண்டிப்பாகச் செய்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோளும் வைத்துவிட்டு, 1925-ம் ஆண்டு கண்மூடினார்.
வேறு எந்தக் குடும்பத்தில் இதுபோன்ற மரணம் நிகழ்ந்திருந்தாலும், சிறுமிக்கு அதுதான் வாழ்க்கையின் எல்லையாக இருந்திருக்கும். சுந்தரம் ஐயங்கார் குடும்பமோ, புரட்சிகரமான சிந்தனைகளுக்கும் காந்திய சிந்தனைகளுக்கும் உதாரணமாக அன்றே சுட்டிக்காட்டப்பட்ட குடும்பம். கணவரை மிக இளம் வயதிலேயே பறிகொடுத்த சௌந்தரம், கல்வியைத் தொடர வசதியும் வாய்ப்பும் அமைத்துத் தந்தது குடும்பம். பள்ளிப் படிப்பு முடித்து, இறந்துபோன கணவரின் ஆசைப்படி டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் அடியெடுத்துவைத்தார் சௌந்தரம். இங்குதான் விடுதலைப் போராட்ட வீரரும் காந்தியடிகளின் மருத்துவருமான சுசீலா நாயரின் அறிமுகம் சௌந்தரத்துக்குக் கிடைத்தது. காந்தியை சுசீலாவுடன் சந்தித்தார் சௌந்தரம். அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சந்திப்பு அது!
காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, உடனடியாக விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க எண்ணிய சௌந்தரத்தைத் தடுத்து நிறுத்தினார் காந்தி. மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வருமாறு பணித்தார். லேடி ஹார்டிங் கல்லூரியின் தங்கப் பதக்கத்தை வென்ற சௌந்தரம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் மகளிர் நோய் மற்றும் மகப்பேறியல் பட்டமும் பெற்றார். 1936-ம் ஆண்டு, தன் 32-வது வயதில் மருத்துவப் படிப்பை முடித்தார். அடுத்து அவர் சென்ற இடம் காந்தியின் சேவா கிராம் ஆசிரமம். தமிழகத்தின் செல்வமும் செல்வாக்கும் பெற்ற குடும்பத்தில் பிறந்த சௌந்தரம், காதி உடுத்தவும் நூல் நூற்கவும் இங்கு கற்றுக்கொண்டார்; வெறும் தரையில் படுத்து உறங்கினார்; கழிவறையைச் சுத்தம் செய்தார்; கிராம வாழ்க்கை முறைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டார்.
இங்குதான், கேரள மாநிலத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரான ஜி.ராமச்சந்திரனை சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். ராமச்சந்திரன் 35 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொள்வதாகக் காந்தியிடம் ஏற்கெனவே பிரமாணப் பத்திரம் எழுதி கையெழுத்திட்டுத் தந்திருந்ததால், காதல் ஜோடி அவருக்கு 35 வயதாகும் வரை காத்திருந்தது. ஒருவழியாக திருமணம் செய்துகொள்ளும் தங்கள் எண்ணத்தை காந்தியிடம் சொல்ல, காந்தியும் ராஜாஜியும் சுந்தரம் ஐயங்காரிடம் மகளின் மறுமணத்துக்கு அனுமதி கோரினர். சுந்தரம் ஐயங்கார் திட்டவட்டமாக இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். `ஒருவரை ஒருவர் சந்திக்கக் கூடாது, கடிதப் போக்குவரத்து கூடாது’ எனக் கடும் விதிகளை விதித்து, ஓர் ஆண்டு முடிந்ததும் அதே காதல் இருந்தால் தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லி அனுப்பினார் காந்தி.
ஓர் ஆண்டு கழித்து காதலர் இருவரும் வந்து சந்திக்க, அவர்கள் மன உறுதியைப் புரிந்துகொண்டார் காந்தி. 1940 நவம்பர் 2 அன்று, ராஜேந்திர பிரசாத் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் தம்பதிக்கு சேவாகிராமில் உள்ள காந்தி ஆசிரமத்தில் திருமணம் செய்துவைத்தார் காந்தி. மனைவி கஸ்தூரிபா காந்தி நூற்ற கதர் சேலையை சௌந்தரத்துக்குப் பரிசளிக்க, அதையே உடுத்திக்கொண்டு திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். விதவை மறுமணம், வெவ்வேறு சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு மொழிப் பின்புலம் கொண்டவர்கள்; வேறு மாகாணத்தவர்கள்; பெற்றோர் சம்மதமின்றி திருமணம் என்பதால், இந்தத் திருமணம் அன்றைய காலகட்டத்தில் பெரும் புரட்சியாகப் பார்க்கப்பட்டது.
காந்தியின் வழிகாட்டலில், காந்தி தொடங்கிய கஸ்தூரிபா டிரஸ்ட்டின் தென்னிந்திய நிர்வாகிகளாகப் பணியாற்றினர் தம்பதி. சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் சௌந்தரம் கையில் கஸ்தூரிபாவின் ஓவியத்தைத் தந்து, டிரஸ்ட்டின் தென்னிந்திய நிர்வாகியாக அவரை அறிவித்தார் காந்தி. எந்த வசதி வாய்ப்பும் இல்லாத பின்தங்கிய கிராமங்களில் தற்சார்புகொண்ட காந்தி கிராமங்களை இந்தியா முழுவதும் தொடங்க வேண்டும் என்ற காந்தியின் கனவை நனவாக்க எண்ணிய சௌந்தரமும் ராமச்சந்திரனும், திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி கிராமத்தை ஒட்டி, 1947 அக்டோபர் 7 அன்று ‘காந்திகிராமம்’ ஒன்றை நிறுவினர்.
முழுக்க முழுக்க தங்கள் பணிகளைத் தாங்களே செய்ய இங்கு வந்த தன்னார்வலர்கள் பணிக்கப்பட்டனர். காய்கறி விளைவிப்பது முதல், சமைப்பது, துணி நெய்வது, சுத்தம் செய்வது என்று அத்தனையும் தாங்களே செய்தனர். இங்கு அமைக்கப்பட்ட கஸ்தூரிபா இலவச மருத்துவமனை மூலம் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி செய்தார் சௌந்தரம். ‘ஆரோக்கிய சேவகர்’ என்று அழைக்கப்பட்ட தன்னார்வப் பெண்களுக்கு அடிப்படை மருத்துவம் சொல்லித்தரப்பட்டு, அவர்கள் கிராமப்புறப் பெண்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்ய வழிவகை செய்யப்பட்டது. பள்ளிகள் இல்லாத பகுதிகளில் ஆசிரியர்களாகவும், மருத்துவர்கள் இல்லாத பகுதிகளில் செவிலியர் களாகவும், கலவரங்கள் வெடித்த இடங்களில் சமூக நல்லிணக்கத்துக்குப் போராடும் களப் போராளிகளாகவும் இந்த ஆரோக்கிய சேவகர்கள் பணியாற்றினர். ஆரம்பப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட காந்திகிராமப் பள்ளி, கல்லூரியாக வளர்ந்து 1976-ம் ஆண்டு, காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக பிரமாண்ட வளர்ச்சியை அடைந்தது.
1952 மற்றும் 1957-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆத்தூர் மற்றும் வேடசந்தூர் தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சௌந்தரம். 1962-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சௌந்தரத்தின் நேர்மையும் திறமையும், மக்கள் நேசப் பாங்கும் நேருவை வெகுவாகக் கவர, கல்வித்துறை துணை அமைச்சராக அவரை நியமித்தார் நேரு. தமிழகப் பெண் ஒருவர் மத்திய அரசவையில் துணை அமைச்சர் பதவியில் அமர்ந்தது அதுவே முதன்முறை.
தொடக்கக் கல்வியை நாடு முழுவதும் இலவசமாக்கிய பெருமை, அப்போதைய கல்வி அமைச்சர் மற்றும் சௌந்தரத்தையே சேரும். நாட்டு நலப்பணித் திட்டத்தை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குக் கொண்டுவந்ததும் இவரது முக்கியப் பங்களிப்புதான். அதே ஆண்டு சௌந்தரத்தின் சமூகப் பணியைப் பாராட்டி அவருக்கு பத்மவிபூஷண் பட்டம் வழங்கிக் கௌரவித்தது மத்திய அரசு.
1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார் சௌந்தரம். அதன்பின் அரசியலில் இருந்து விலகியவர், முழு நேர சமூக நலப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1984 அக்டோபர் 21 அன்று தன் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டார் சௌந்தரம். அவரது பெயரை இன்னமும் சொல்லியபடி கம்பீரமாக நிற்கிறது காந்திகிராமம்.
“காந்திகிராமம், சௌந்தரம் ராமச் சந்திரனின் தொலைநோக்குப் பார்வைக்கும், காந்தியின் எண்ணங்களுக்கும் கிடைத்த வெற்றியே. ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும், லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கைத் தரம் உயரவும் காந்திகிராமம் உதவியிருக்கிறது.”
– ராஜீவ் காந்தி (1988 அக்டோபர் 3 )
https://www.vikatan.com/lifestyle/women/the-life-story-of-soundaram-ramachandran
Leave a Reply