சாவித்திரியம்மா, அம்மாக்களின் அம்மா!
சமூகப்பணிக்காக வாழ்ந்த சாவித்திரி!
அப்போது சாவித்திரிக்கு வயது 16. பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் கூவக்கரை குப்பங்களில் அல்லலுறும் பெண்களைப் பார்த்துக்கொண்டே செல்வார். “நாம எவ்வளவு வசதியா இருக்கோம்… அவங்களும் நம்மை மாதிரி மனுஷங்கதானே… அவங்க மட்டும் ஏன் அந்தச் சாக்கடைக்குப் பக்கத்துல கிடந்து அல்லல்படுறாங்க” என்கிற கேள்வி அவருக்கு உதித்துக்கொண்டே இருந்தது. அந்தக் கேள்விதான் ‘விஷ்ராந்தி’க்கு விதை.
சுய விருப்புவெறுப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு தன் வாழ்க்கையை முற்றுமுழுதாக மற்றவர்களுக்காக, அதுவும் எல்லோராலும் கைவிடப்பட்டு விளிம்பில் நிற்கும் பெண்களுக்காக அர்ப்பணித்ததுதான் சாவித்திரியை உயர்நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. புகழ்பெற்ற சமூக சேவகரும், ‘கில்ட் ஆப் சர்வீஸ்’ அமைப்பின் நிறுவனருமான மேரி கிளப்வாலா ஜாதவ், “இந்தியாவில் கைவிடப்பட்ட முதியோரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும்” என்று சொன்னபோது, “நான் ஒரு இல்லத்தையே ஆரம்பிக்கிறேன்” என்று முன்வந்தார் சாவித்திரி. இரட்டையராகப் பிறந்து உறவுகளால் கைவிடப்பட்டு நின்ற இரண்டு பாட்டிகளோடு குரோம்பேட்டையில் சிறிய வீட்டில் தொடங்கியது தமிழகத்தின் முதல் முதியோர் இல்லமான ‘விஷ்ராந்தி.’ இன்று 42 ஆண்டுகளைக் கடந்து 170 பெண்களோடு பாலவாக்கத்தில் பிரமாண்டமானதொரு கூட்டுக்குடும்பமாக இயங்கிவருகிறது. அந்தக் குடும்பத்தின் வேராக இருந்த சாவித்திரி, கடந்த சனிக்கிழமை காலை இயற்கையோடு கலந்துவிட்டார்,
மயிலாப்பூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் சாவித்திரி. அப்பா கும்பகோணம் திருவேங்கடம் கிருஷ்ணசாமி ஒரு பிரிட்டிஷ் கம்பெனியில் வேலை செய்தவர். காந்திமீதான அபிமானத்தில் வேலையை விட்டுவிட்டு ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டவர். அம்மா பெயர், ருக்மணி. சாவித்திரியின் கணவர் வைத்தி, புகைப்படக் கலைஞர். இரண்டு சகோதரரிகளோடு பிறந்த சாவித்திரி, பள்ளியோடு படிப்பை நிறுத்திவிட்டார். பள்ளிக்காலத்திலேயே ‘அசோக் விஹார்’ என்ற தொண்டு அமைப்பில் இணைந்து, குடிசைப்பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்துவது, பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது என நிறைய களப்பணிகள் செய்ய ஆரம்பித்தார். காங்கிரஸ் நடத்தும் சேவைப்பணிகளிலும் பங்கேற்றார்.
“1965-களில் பெண்களோட உலகம் ரொம்பவே சின்னது. வீட்டை விட்டு வெளியில வரவே பயப்படுவாங்க. அந்தக் காலகட்டத்துல பெண்கள் சுய பொருளாதார சார்போட இருக்கணும்னு அம்மா நினைச்சாங்க. அதுக்காக சமையல் கிளாஸ் போய் கத்துக்கிட்டு, மயிலாப்பூர் நரசிம்மபுரத்துல அவங்க வீட்டைச் சுத்தியிருக்கிற பெண்களை எல்லாம் அழைச்சு, எல்லாருக்கும் கத்துக்கொடுத்தாங்க. பயிற்சியில தயாரிக்கப் படுற உணவுப் பொருள் களை வித்து அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் அந்தப்பகுதியில இருக்கிற குடிசைப்பகுதி பெண் களுக்கு உதவி செய்வாங்க. காலப்போக்குல நிறைய பேர் ஆர்வமா இந்தப் பயிற்சிக்கு வர, அவங்களை யெல்லாம் வச்சு ஒரு அமைப்பை உருவாக்கினாங்க. திங்கள்கிழமை தொடங்கின அமைப்புங்கிறதால அதுக்கு ‘திங்கள் அறநிலை சங்கம்’னே பேர் வச்சாங்க. பொதுவா வெளியில வர நினைக்கிற பெண்களுக்கு மாமியார்கள்தான் தடையா இருப்பாங்க. அதனால சாவித்திரியே மாமியார்களைச் சந்தித்துப் பேசி மனம்மாற்றி களத்துக்குக் கொண்டு வருவாங்க. 20 பேரோடு ஆரம்பிச்ச திங்கள் அறநிலை சங்கத்துல இப்போ 200 பேர் இருக்காங்க. ஒவ்வொரு திங்கள்கிழமையும் இந்தச் சங்கத்தோட கூட்டம் நடக்கும். திருமகள் திருமண உதவித்திட்டம், முதியோருக்கு உதவும் ஊன்றுகோல் திட்டம், கல்வி உதவி வழங்குற வித்யாதான் திட்டம், வசதியில்லாத மாணவர்களுக்கு புக் பேங்க், போட்டித்தேர்வு எழுதுற மாணவர்களுக்கு நூலகம்னு இந்தச் சங்கம் மூலமா சத்தமேயில்லாம 50 ஆண்டுகளா நிறைய வேலைகள் நடந்துகிட்டிருக்கு. அம்மா உடல்நிலை சரியில்லாம இருந்த காலத்திலகூட இந்தப்பணிகள் தொய்வில்லாம நடந்துச்சு…” என்கிறார் இந்தச் சங்கத்தின் துணைத்தலைவர் லட்சுமி நடராஜன்.
இதன் தொடர்ச்சியாகத்தான் ‘விஷ்ராந்தி’ தொடங்கப்பட்டது. தொடங்கிய காலத்தில் சாலையோரங்களில் தனித்து இருப்பவர்கள், தானாக வந்து உதவி கோரும் முதியோரை மட்டுமே இல்லத்தில் சேர்த்துக்கொள்வார். பெற்றோரை அழைத்து வந்து ‘பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று விடும் பிள்ளைகளை அமரச்செய்து கவுன்சலிங் கொடுத்துத் திருப்பி அனுப்பிவிடுவார்.
“அம்மாவுக்கு விஷ்ராந்திதான் உலகம். பாட்டிங்க எல்லாம் இவங்களை வாய்நிறைய அம்மான்னு கூப்பிடுவாங்க. சின்ன மனக்குறைகூட இல்லாம எல்லாரையும் பாத்துக்குவாங்க. கிட்டத் தட்ட 70 வருடங்கள் மத்த வங்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிச்சிருக்காங்க. சாஸ்திர, சம்பிரதாயங்களில் தீவிரமான பிடிப்புகொண்ட குடும்பத்திலிருந்து வந்தவங்க… இறந்துபோன 500 தாய்களுக்கு மகளா இருந்து மயானம் வரைக்கும்போய் இறுதிச்சடங்கு செஞ்சிருக்காங்க. இன்னைக்கு அவங்கமூலம் தமிழகத்துல ஏராளமான முதியோர் இல்லங்கள் உருவாகியிருக்கு. அம்மாவோட பணியை நாங்க தொய்வில்லாம முன்னெடுத்துக்கிட்டுப் போவோம்…” என்கிறார் ‘விஷ்ராந்தி’ இல்லத்தின் செயலாளரும் சாவித்திரியின் சகோதரி மகளுமான ஸ்ரீலேகா.
16 வயதில் களத்துக்கு வந்த சாவித்திரி 80 வயதுவரை சமரசமில்லாமல் மற்றவர்களுக்காக வாழ்ந்திருக்கிறார். 83 வயதில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. படிப்படியாக நினைவு தப்பியது. காலமானபோது 90 வயது. எந்த விளம்பர வெளிச்சமும் இல்லாமல் தன்னை முற்றுமுழுதாக சமூகப்பணிக்கென அர்ப்பணித்த சாவித்திரியம்மா, அம்மாக்களின் அம்மா!
Ref : Vikatan
Leave a Reply