Adyar Cancer Institute – டாக்டர் சாந்தா
புற்றுநோய் மருத்துவத் துறைக்குத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர், அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா. ‘மகசேசே’ விருது, ‘பத்மஸ்ரீ’, ‘பத்ம பூஷண்’, ‘பத்ம விபூஷண்’ என இந்தியாவின் உயரிய பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர். நம் சம காலத்தின் சாதனைப் பெண்மணிகளில் முக்கியமான முன்னோடி.
“90 வயசுதான் ஆகுது… சாதிக்க வேண்டியது இன்னும் நிறையதான் இருக்கு” என்று எளிமையான அணுகுமுறையுடனும், புன்னகையுடனும் பேச ஆரம்பித்தார் டாக்டர் சாந்தா.
‘பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். ஓலைக் கூரையால் வேயப்பட்ட, அடிப்படை வசதிகள்கூட இல்லாத, மயிலாப்பூர், தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில படிச்சேன். அப்போ எல்லோரையும்போல, எனக்கும் சுதந்திர உணர்வு நிறையவே இருந்துச்சு. எங்க பள்ளியின் முதல்வர் செல்லம். அவங்ககிட்டதான் நிறைய நல் ஒழுக்கங்களைக் கத்துக்கிட்டேன். அந்தக் காலகட்டத்துல பெண்களுக்கு கல்வி கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம். கல்வி கற்ற பெண்கள் பலரும் அதை பயன்படுத்திக்காம, கல்யாணம், குடும்பம், குழந்தைகள்னு இருந்துட்டாங்க. அதனால பெண்கள் படிச்ச படிப்புக்கு அர்த்தம் இல்லாமப் போயிடுச்சேன்னு, அப்போ நான் பல நாட்கள் வேதனைப்பட்டதுண்டு. அப்போதான் தீர்க்கமான ஒரு முடிவெடுத்தேன்” என மருத்துவராக ஆவதற்குத் தன்னை தயார்படுத்திக்கொண்ட தருணத்தை நினைவுகூர்கிறார்.
“நாம படிச்சு மக்களுக்கு சேவை செய்யணும், இந்தப் பிறவியில் ஆக்கப்பூர்வமான சில காரியங்களைச் செய்யணும் என்ற உறுதி வந்தது. டாக்டராகணும்னு முடிவெடுத்தேன். சென்னை மருத்துவக் கல்லூரியில படிச்சு, 1949-ல் டாக்டர் பட்டம் வாங்கினேன். அடுத்து, சென்னை எழும்பூர், பெண்கள், குழந்தைகள் நல மருத்துவக் கல்லூரியில பி.ஜி.ஓ மற்றும் எம்.டினு ரெண்டு முதுநிலைப் பட்டங்கள் வாங்கினேன். பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமாக தேர்வுசெய்யப்பட்டு, அதே மருத்துவமனையில் சில காலம் மருத்துவராகப் பணிபுரிந்தேன்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மா பல கஷ்டமான சூழ்நிலைகளைக் கடந்து ‘விமன்’ஸ் இந்தியன் அசோஸியேஷன் கேன்சர் ரிலீஃப் பண்ட்’ வாயிலாக நிதி திரட்டி, அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டை ஆரம்பிச்சாங்க. அப்போ அமெரிக்காவுல இருந்த அவரது மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை வரவழைச்சு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் தலைமைப் பொறுப்பை கவனிக்க வெச்சதோடு, புதிதாக மருத்துவர்கள் வேணும்னு சொல்லியிருந்தாங்க. அந்த 1955-ம் ஆண்டுதான் இந்த நிறுவனத்துல நானும் ஒரு அங்கமாகச் சேர்ந்தேன். அப்போ டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, நான், ரெண்டு செவிலியர்கள், ஒரு டெக்னீஷியன் உள்ளிட்ட 10 பேர்தான் வேலை செஞ்சோம். நோயாளிகளுக்கு முத்துலட்சுமி அம்மா வீட்டுல இருந்துதான் சாப்பாடு வரும்.
அந்தக் காலகட்டத்துல, கேன்சரைக் குணப்படுத்தவே முடியாது, இந்நோய் வந்தவங்க இறந்து போயிடுவாங்கங்கிற மாதிரியான அச்சம் மக்கள்கிட்ட இருந்துச்சு. அதையெல்லாம் போக்கி, இந்நோயைக் குணப்படுத்தி, கேன்சர் நோயாளிகள் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கழிக்க முடியும்னு நிரூபித்துக் காட்டினோம். அதுக்காக அப்போ நாங்க எடுத்துக்கிட்ட முயற்சிகளும், கஷ்டங்களும் ரொம்பவே அதிகம். இப்போ மருத்துவமனை, ஆராய்ச்சியகம், கல்லூரி என அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் விருட்சமா வளர்ந்திருக்கு. ஏழைகளுக்கு இலவச மருத்துவம் என்ற எங்க மருத்துவமனையின் நோக்கத்தோட, அரை நூற்றாண்டுக்கும் மேலாக புற்றுநோயாளிகளை குணப்படுத்திட்டு வர்றோம்” எனும் டாக்டர் சாந்தா, 62 வருடங்களாக இம்மருத்துவமனையில் தன்னை அர்ப்பணித்து வருகிறார்.
1984-ல் எனக்கு கிடைச்ச அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் தலைமைப் பொறுப்பை, அனைத்து ஊழியர்களின் ஒத்துழைப்போட இன்னைக்கு வரைக்கும் கண்ணும் கருத்துமா கவனுச்சுட்டு வர்றேன். என்னோட 62 வருடப் பங்களிப்பு என்பது சிறியதுதான். நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள்ல இருந்து இப்போ வரைக்கும் இங்க வேலை செய்த, வேலை செய்துட்டு இருக்குற அனைவரின் கூட்டு முயற்சிதான் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் காரணம். அதனால, இந்த சாதனைக்கு என்னைக் காரணமா யார் சொன்னாலும் ஏத்துக்கவே மாட்டேன். தனி ஒருவர் இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணமா இருக்குறது என்பது, எனக்குத் தெரிஞ்சு சாத்தியமில்லை. நானும் ஒரு ஊழியர்தான். என்னைப் போல இங்க நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தன்னலம் பார்க்காம, மருத்துவம்ங்கிற வார்த்தைக்கு உண்மையான பொருள்படும் படியாக சேவை செய்றாங்க. அந்த சேவைக்குதான் மக்கள் இந்த நிறுவனத்தை மதிக்குறாங்க” என்றவர்….
”நாங்க நிறுவனம் தொடங்கினப்போ புற்றுநோய் மரணங்களைத் தடுக்கிறது சவாலாத்தான் இருந்தது. இப்போ புற்றுநோய் பாதிப்புள்ள 65 சதவிகிதக் குழந்தைகள் உள்ளிட்ட பெரியவர்கள் பெரும்பாலானோர் முழுமையா குணமடைஞ்சு போறாங்க. மேலும், இப்போ புற்றுநோயையும் மற்றுமொரு நோயா அச்சமின்றி எதிர்கொண்டு, லட்சக்கணக்கானோர் முறையான சிகிச்சையைப் பெற்று, வாழ்க்கையை இனிதே கழிக்குறதைப் பார்த்து மகிழ்ச்சியடைஞ்சுட்டு இருக்கேன்.
அதே சமயம், வேலைப்பளுவால் உடல் நிலையைக் கவனிச்சுக்காம, இயற்கை உணவுகளைத் தவிர்த்து, துரித உணவுகள் பக்கம் திரும்பி பலரும் இன்னைக்கு புற்றுநோய்க்கு ஆட்படுவதை நினைச்சும், குடும்பத்தைக் கவனிச்சுட்டு பெண்கள் பலரும் தங்களோட உடல்நிலைக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்காம உடல்நிலைப் பாதிப்புகளுக்கு உள்ளாகுறதை நினைச்சும் தினம் தினம் வருத்தப்படுறேன். அதனால எல்லோரும் தங்களோட உணவு, உடல்நிலை மேல போதிய அக்கறை செலுத்தணும். புற்றுநோய் உள்ளிட்ட எந்த நோயையும் வரவிடாமலும், வந்தால் ஆரம்பக் கட்டத்துலயே அதை குணப்படுத்தியும் மகிழ்ச்சியா வாழணும் என்பதே என்னோட ஆசை” என்பவர், வயோதிகத்திலும் இளமைத் துடிப்புடன் வேலை செய்யும் ரகசியத்தைக் கேட்டதும் புன்னகைக்கிறார்.
“நாம நினைச்சதுல எவ்வளவோ விஷயங்களைச் செய்ய முடியலையே, இன்னும் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கேன்னுதான் நினைச்சுட்டு இருக்கேன். எல்லாம் கடவுள் அருள். என்னை எவ்ளோ நாள் இந்த பூமியில் மக்களுக்குச் சேவை செய்யணும்னு கடவுள் பணிக்கிறாரோ, அதுவரைக்கும் என்னோட மருத்துவச் சேவை தடையின்றி தொடரும். எனக்குப் பிறகும், இந்த இன்ஸ்டிட்யூட்டை இன்னொருத்தர் தலைமை ஏற்று சிறப்பா செய்யத்தான் போறாங்க. அதனால இந்த நிறுவனத்தின் நோக்கப்படி, இனி வரும் எல்லாக் காலங்கள்லயும் எங்கள் பணி தொடரும்!”
அவர் முகத்தில் இருக்கும் முதுமைக் கோடுகள் ஒவ்வொன்றும், புற்றுநோய் மருத்துவ வரலாற்றின் முக்கிய அத்தியாயங்கள்!
Ref : Vikatan
To read More about Cancer institute founder Dr Muthu lakshmi Reddy
Muthtulashmi reddy was born in the pudukkotai state Tamil nadu. Her father was s.narayanawami iyer. He was a principal in the maharaja college. Her mother was chandrammal. She was born in isai vellalar community.
Leave a Reply