Father of Dalits – Vaithiyanatha Iyer
அரிஜனங்களின் தந்தை
பி.கக்கன்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம். பெரியவர்கள் பலர் அதற்கு எதிர்ப்பாக இருந்தார்கள். மதுரையின் வீதிதோறும் கூட்டம் போட்டு, அரிஜன ஆலயப் பிரவேசத்தைப் பற்றிக் கண்டித்துப் பேசினார்கள். ”அரிஜனங்கள் ஆலயத்துக்குள்
நுழைந்துவிட்டால் இந்து மத தர்மமே சீர்குலைந்து போய்விடும்; அதனால் அவர்களை ஆலயப் பிரவேசம் செய்ய அனுமதிக்கக்கூடாது; அதுவும், வைத்தியநாதய்யர் போன்ற ஒரு ஜாதி இந்துவின் தலைமையில் அந்தக் காரியம் நடக்க அனுமதிக்கவே கூடாது” என்றெல்லாம் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எங்களுக்கெல்லாம் உள்ளூர சிறிது தயக்கமாகவே இருந்தது. ஆலயப் பிரவேச தினத்தன்று எங்கே பெரிய சச்சரவும், தகராறும் ஏற்பட்டுவிடுமோ என்று நினைத் துக்கொண்டிருந்தோம். ஆனால் வைத்தியநாதய்யரோ, அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப் படாமல், அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்.
குறிப்பிட்ட தினத்தன்று ஆலயப் பிரவேசம் நடந்து முடிந்தது.
தெய்வாதீனமாக எவ்விதமான குழப்பமும் ஏற்படவில்லை. ஆலயப் பிரவேசம் முடிந்து அனைவரும் திரும்பி வந்துகொண்டிருந்தோம். அப்போது, வழியில் நின்றிருந்த ஒரு பெரியவர் வைத்தியநாதய்யரைப் பார்த்து, ”நீர்தான் அரிஜனாகிவிட்டீரே! உமக்குப் பூணூல் எதற்கு?” என்று சத்தம் போட்டுக் கோபமாகக் கூறினார்.
ஐயர் அவர்கள் ஒன்றுமே பேசாமல் சிரித்துக்கொண்டார்.
முப்பது, முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்பு, ஜாதிக் கொடுமை தீவிரமாக இருந்த நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை. ஆனால், அந்தக் காலத்திலேயே வைத்தியநாதய்யர் வீட்டுக்குள் அரிஜனங்கள் சர்வ சுதந்திரமாகப் போய் வரமுடியும். வீட்டுச் சமையலறை வரையில் கூட சென்று ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.
அவரைப் போல்தான் அவரது மனைவியாரும், அரிஜன மக்களின் நன்மைக்காக உழைத்தவர்.
அய்யரிடம் பண உதவியும், மற்ற உதவிகளும் பெற்றுப் படித்த அரிஜன மக்களில் பலர் இன்று பெரிய பெரிய நிலையில் இருக்கிறார்கள். நான் பொதுப் பணியில் ஈடுபட்டு, பிற்பாடு அரசியல் உலகத்துக்கு வருவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவரே வைத்தியநாதய்யர் அவர்கள்தான்.
அரிஜன சேவையை விட வைத்தியநாதய்யருக்குப் பிடித்த பொதுச் சேவை வேறு எதுவும் இல்லை. அதனால்தான் அவரை ‘அரிஜனங்களின் தந்தை’ என்று போற்றுகிறார் கள்.
அவர் மறைந்த பிறகு, அவரது இறுதிச் சடங்குக்கு நான் சென்றிருந்தேன். ஒரு தந்தைக்கு ஒரு மகன் செய்யக்கூடிய இறுதிச் சடங்குகள் அனைத்தையும் செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.