முதுமையிலும் தளராத முக்தா!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர், ஃபிலிம் சேம்பர் தலைவர், எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர்மன், அரசு திரைப்பட விருதுக்குழு தலைவர்… இப்படிப் பல பொறுப்புகளில் இருந்த தயாரிப்பாளரும் இயக்குநருமான முக்தா சீனிவாசன் சமீபத்தில் காலமானார். தன் நெருங்கிய நண்பர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் சிவகுமார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள மானாபுரம் கிராமத்தில் 1929-ம் ஆண்டு பிறந்தவர், முக்தா சீனிவாசன். அவரின் அண்ணன் ராமசாமி. ஏழ்மையான குடும்பம். பள்ளிக் கட்டணம் கட்டக்கூட வசதியில்லை. முக்தாவின் வகுப்புத் தோழராக இருந்த கபிஸ்தலம் கருப்பையா மூப்பனார்தான் இருவருக்கும் எஸ்.எஸ்.எல்.சி-வரை மாதாமாதம் கல்விக் கட்டணத்தைக் கட்டினார்.

பள்ளிப்படிப்பை முடித்த முக்தாவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஈர்ப்பு வந்தது.  கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது, சேலம் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த முக்தாவைக் காவல்துறை கைதுசெய்தது. அந்த சமயத்தில் முக்தாவின் அண்ணன் ராமசாமி, ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்தில் வேலை பார்த்தார். தன் தம்பியை விடுதலை செய்ய டி.ஆர். சுந்தரத்தின் உதவியை அவர் நாடினார். டி.ஆர்.சுந்தரத்தின் முயற்சியின்பேரில் விடுதலையான முக்தா, ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்திலேயே உதவி இயக்குநராகச் சேர்ந்தார். மாதுரிதேவி, அஞ்சலிதேவி, பின்னாளில் எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என்.ஜானகி ஆகியோருக்கு வசனம் சொல்லிக்கொடுத்தவர் முக்தா.

இந்த நிலையில் கருணாநிதி கதை, வசனத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த ‘அம்மையப்பன்’ படம் சரியாக ஓடாததால் சோர்ந்திருந்தார் எஸ்.எஸ்.ஆர். அந்தச் சமயத்தில்தான் 1957-ம் ஆண்டு ‘முதலாளி’ திரைப்படத்தை எஸ்.எஸ்.ராஜேந்திரனை வைத்து இயக்கினார் முக்தா. அப்போது ஒரு படத்தை எடுத்துமுடிக்க ஒரு வருடத்துக்கும் மேலாகும். ஆனால் ‘முதலாளி’ படத்தை முக்தா 123 நாள்களிலேயே முடித்து ஆச்சர்யப்படுத்தினார். ‘முதலாளி’ படத்துக்காக முக்தாவுக்குத் தேசியவிருது கிடைத்தது. ‘நாலு வேலி நிலம்’, ‘தாமரைக்குளம்’ என்று அவர் ஆரம்பத்தில் இயக்கிய மூன்று படங்களும் கம்யூனிச சித்தாந்தம் கொண்ட கதைகளே.

1961-ம் ஆண்டு முக்தாவும் அவரின் அண்ணன் ராமசாமியும் இணைந்து தனியாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தனர். அப்போது படம் ரிலீஸாகும் முன்பே அதில் பணியாற்றிய அத்தனை பேரின் சம்பளப் பணத்தையும் செட்டில் செய்வது எனக்குத் தெரிந்து இரண்டு பேர்தான். ஒருவர் சாண்டோ எம்.எம்.சின்னப்பா தேவர், இன்னொருவர் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ சுந்தரம். இவர்களைப்போல் முக்தாவின் தயாரிப்பு நிறுவனமும் நற்பெயரைப் பெற்றது.

ரஜினியை வைத்து ‘பொல்லாதவன்’, ‘சிவப்புச் சூரியன்’. என்னை வைத்து ‘அவன் அவள் அது’, ‘தம்பதிகள்’ என்று முக்தா ஃபிலிம்ஸ் 65 படங்களைத் தயாரித்தது. முக்தா இயக்கிய படங்கள் 44. இவற்றில் வெற்றிவிழா கண்ட படங்கள் 21. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘நாயகன்’ படத்தை முதலில் தயாரித்த முக்தா ஃபிலிம்ஸ், ஒரு கட்டத்தில் படத்தை ஜீவி ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் கைமாற்றிவிட்டது.

திரைத்துறையில் ஜீனியஸாக இருக்கும் பலருக்கும் பல பலவீனங்கள் இருக்கும். ஆனால் சினிமாவில் எனக்குத் தெரிந்தவரையில் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் 89 வயதுவரை வாழ்ந்த ஒரே இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் ஒருவரே. கர்னாடக இசை மேதைகளான செம்மங்குடி சீனிவாசய்யர், மகாராஜபுரம் சந்தானம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளையும் பி.யு.சின்னப்பா, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், காளி என். ரத்தினம் போன்ற கலைஞர்களின் வாழ்க்கையையும் புத்தகங்களாக எழுதிக்கொண்டே இருந்தார்.

இந்த வருடப் புத்தக்காட்சிக்குச் சென்றபோது தனது புக் ஸ்டாலில் அமர்ந்திருந்த முக்தா சீனிவாசன் சினிமா, புத்தகங்கள் குறித்து என்னிடம் நீண்ட நேரம் பேசினார். இப்போது அவரைப்பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன். அவரிடம் நான் கற்றுக்கொண்டது ஒன்றே ஒன்றுதான்.  ‘முதுமை வந்துவிட்டால் ஓய்வெடுக்கக்கூடாது. உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்’ என்பதுதான்!

ref : vikatan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *