Indian-origin Vasant Narasimhan to head $48 billion pharma giant Novartis
இந்தியா விடுதலை அடைவதற்கு முன் நடந்த சம்பவம் இது. தென்னிந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தில் பிறக்கிறார் ஒருவர். பார்மா (Pharma) துறையில் படிப்பை முடித்த அவர், அப்போது நிறைய பார்மா நிறுவனங்கள் வரத் தொடங்கிய புனே நகருக்குச் செல்கிறார். அங்கே அவருக்கு வேலை தந்த நிறுவனம் மூலம், சுவிட்சர்லாந்து நாட்டின் பார்மா நிறுவனமான Ciba Geigy-க்கு இன்டர்ன்ஷிப்புக்காக அனுப்பத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு ஒரு மகன் பிறந்து, அவர் மூலம் ஒரு பேரனும் பிறக்கிறார். இன்னொரு புறம், அந்த பார்மா நிறுவனம் இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து இப்போது உலகின் மிக முக்கியமான பார்மா நிறுவனமாக வளர்ந்து விட்டது. தாத்தாவை சுவிஸ்ஸுக்கு அழைத்த அதே நிறுவனம் பேரனுக்கும் வேலை தருகிறது. அந்த நிறுவனத்தின் பெயர் நோவார்டிஸ்; அந்தப் பேரனின் பெயர் வசந்த் நரசிம்மன். தாத்தாவுக்கும் பேரனுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். தாத்தா இன்டெர்ன்; பேரன் சி.இ.ஓ. தலைமைச் செயல் அதிகாரி.
நம் தென்னிந்திய தாத்தாவின் மகன் நரசிம்மன் அப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்தார். அப்போதுதான் (1976) வசந்த் பிறந்தார். நரசிம்மனும் தாத்தாவைப்போல பார்மா துறைதான்; கெமிஸ்ட். அவர் மனைவி நியூக்ளியர் சயின்டிஸ்ட். இவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் எப்படியிருப்பார்? அதேதான். ‘காலை எழுந்தவுடன் படிப்பு… பிறகு இன்னும் கொஞ்சம் படிப்பு…’ என எப்போதும் படிப்புதான். அப்போது வசந்த் படித்த பள்ளியில் ஆசியக் குழந்தைகளே கிடையாது. அதனாலோ என்னவோ, அதிகம் பேச மாட்டார் வசந்த். தாத்தா மருந்தை உற்பத்தி செய்ய, அப்பா அதை விற்றுத்தள்ள, அடுத்த தலைமுறை அதை எழுதிக்கொடுக்க வேண்டாமா? டாக்டர் ஆவதே வசந்த்தின் கனவு. அதுவும் நனவானது. அப்பாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. தன் மகன் டாக்டர் ஆகிவிட்டதால், இனி பிரிஸ்கிரிப்ஷன் எழுதப்போகிறார் என. ஆனால், தோனி போல ‘வசந்த் ஹேட் அதர் ஐடியாஸ்.’
உலக சுகாதார நிறுவனத்தில் (WHO) சேர்ந்து, உலகம் முழுவதும் சுற்றி மக்களின் ஆரோக்கியத்தை உயர்த்த நினைத்த வசந்த் மெடிக்கல் பிராக்டீஸ் செய்யவில்லை.
பின்னர், மெக்கன்ஸி நிறுவனத்தில் சேர்ந்து மருந்துகளின் உலகையும், அதுசார் தொழிலையும் பற்றித் தெரிந்துகொண்டார். அங்கிருந்து 2005-ல் நோவார்டிஸ்ஸுக்கு வந்தார் வசந்த். அவர் தாத்தா கதையெல்லாம் நோவார்டிஸ்ஸுக்குத் தெரியாது. ஆனால், வசந்த்தின் மதிப்பு தெரிந்திருந்தது. 2018-ம் ஆண்டு நோவார்டிஸ்ஸின் தலைமைச் செயல் அதிகாரி ஆனார் வசந்த் நரசிம்மன்.
‘எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சி.இ.ஓ ஆகி நான் என்ன செய்ய வேண்டுமென்பது எனக்கு அப்போது தெரியவில்லை. என் கரியர் பிளானிலும் சி.இ.ஓ என்பதே இல்லை’’ என அப்போதே சொன்னார் வசந்த். அவர் அப்படிச் சொன்னாலும், ஆண்டுக்கு 3.7 லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் செய்யும், 150 ஆண்டுப் பழைமையான, உலகமெங்கும் 1.25 லட்சம் ஊழியர்களுடைய ஒரு நிறுவனம் தன் தலைவனை அப்படி எளிதில் தேர்ந்தெடுத்துவிடுமா? 2015-ம் ஆண்டில் வசந்த் சி.இ.ஓ கிடையாது. ஆனால், 40 வயதுக்குட்பட்ட 40 பெருந்தலைகள் என போர்ப்ஸ் (Forbes) நிறுவனம் வெளியிட்ட ‘40 under 40’ என்ற பட்டியலில் வசந்த் பெயர் இருந்தது. அவர் தன்னடக்கத்தில் தனுஷாக இருக்கலாம். ஆனால், அவர் திறமையும் சாதனைகளும் எப்போதோ அவர் தலைவன் என்பதைச் சொல்லிவிட்டது. அதனால்தான் 40 வயதில் ஒருவரை சி.இ.ஓ ஆக்குவது என்ற ரிஸ்க்கை நோவார்டிஸ் ஜாலியாக எடுத்தது. உலகின் வேறு எந்த நிறுவனமும் இந்த ரிஸ்க்கை எடுத்ததில்லை.
நோவார்டிஸ் ஒன்றும் நட்டத்தில் துவண்டிருந்த நிறுவனம் கிடையாது. ஆனால், அதே சமயம் காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது. அதாவது, சின்ன தவறுகூட அதன் வளர்ச்சியையும் எதிர்காலத்தையும் பாதிக்கலாம். ‘மேனேஜ்மென்ட் படிக்காமல், மருத்துவம் படித்தவர் என்பதால் வசந்த் இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்’ என பார்மா உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. வசந்த் அதைத் திறம்படத் தொடங்கினார்.
நோவார்டிஸின் தலைமைச் செயல் அதிகாரி ஆனதும் வசந்த் செய்த முக்கியமான மாற்றம், பத்தாயிரத்துக்கும் அதிகமான அப்ரூவல்களை நீக்கியது. உதாரணமாக, அட்மின் துறைக்கு ஒரு பேனா வாங்க வேண்டுமென்றால் அட்மின் எக்ஸிக்யூட்டிவ் ஒரு கோரிக்கையைத் தயார் செய்ய, அட்மின் மேனேஜர் அதை அனுமதிக்க வேண்டும். ஆனால், ‘பேனாவுக்கெல்லாம் மேனேஜர் நேரத்தை வீணாக்க வேண்டாம். நீயே வாங்கிக்கோப்பா’ என்றார் வசந்த். அதாவது,, முடிவெடுக்கும் உரிமை நிறுவனத்தின் பல பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. வசந்த் இதை Sense of purpose மற்றும் Sense of autonomy என்கிறார். ‘மனித மனம் அப்படித்தான்; அதை நம்பிப் பணியைத் தந்தால் பொறுப்புடன் செயல்படும்’ என நம்பினார் வசந்த். நோவார்டிஸ்ஸில் அதுதான் நடந்தது. வசந்த்தின் இன்பாக்ஸுக்கு வரும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. ‘அவருக்கு மெயில் வந்தால் அது முக்கியமானதாகத்தான் இருக்கும்’ என்ற நிலை வந்தது. இது நிறுவனம் முழுமைக்கும் பரவியது. வேலைகள் துரிதமாக நடந்தன.
புத்தகப் புழுவான வசந்த்துக்குத் தலைமைப் பண்பை எடுத்துச் சொன்னவை இரண்டு புத்தகங்கள். சீன மொழியில் எழுதப்பட்ட முக்கியமான புத்தகமான Tao Te Ching மற்றும் Drive: The Surprising Truth About What Motivates Us. இரண்டு புத்தகங்களிலும் சொல்லப்பட்ட ஒரு பொதுவான விஷயம் ‘அதிகாரம் செலுத்துபவன் தலைவன் கிடையாது; மாறாக அந்த அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பவன்தான் தலைவன்’ – இதுதான் வசந்த் என்ற சி.இ.ஓ-வின் தாரக மந்திரம்.
ஐ.டி.நிறுவனங்கள்போல இல்லை பார்மா துறை. அதனால் வசந்த்தின் முடிவுகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஆனால், இரண்டு துறைகளுக்கும் இருக்கும் முக்கியமான ஒற்றுமை… ‘தமக்கு சவாலாகவோ, எதிர்காலத்தில் உலகையே புரட்டிப் போடும் வல்லமை மிக்கதாகவோ” கருதப்படும் நிறுவனங்களை விலைக்கு வாங்குவது என்பதுதான். வசந்த், ஆண்டுக்கு 10 பில்லியன் டாலரை இதற்காகவே செலவழிக்கத்் திட்டமிட்டார். ‘இன்னோவேஷனின் அடுத்த அலையில் நோவார்டிஸ் முதலிடத்தில் இருக்க வேண்டும்’ என்றார் வசந்த். அதுதான் 150 ஆண்டுப் பாரம்பரிய நிறுவனத்தைத் தொடர்ந்து இயங்க வைக்க உதவும் என நம்பினார். வசந்த் சி.இ.ஓ ஆகி இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால் இப்போதே 15 இன்னோவேட்டிவ் மருந்துகளை அறிமுகம் செய்ய நோவார்டிஸ் தயாராகிவிட்டது.
வசந்த் ஒரு கடின உழைப்பாளி. அவர் ஆர்&டி டீமைக் கேட்டால் கதைகதையாய்ச் சொல்கிறார்கள். தொடர்ந்து 11 மணி நேரம் அமர்ந்து ஒவ்வொரு விஷயமாகப் பேசி, சந்தேகம் கேட்டு, தெளிவடைவாராம் அவர். 11 மணி நேரத்துக்குப் பிறகும் அவர் முகத்தில் சோர்வென்பதே இருக்காது. ஒரு முறை, பிரபல இயக்குநர் சத்யஜித் ரேவிடம் ‘இயக்குநர் எப்போது ஓய்வு பெற வேண்டும்?’ எனக் கேட்டபோது அவர் சொன்ன பதில், ‘8 மணி நேரம் உட்காராமல் ஓடி ஓடி உழைக்க உடல் ஒத்துழைக்கும் வரை இயக்குநரால் நல்ல படம் எடுக்க முடியும்’ என்பதுதான். ஒரு நிறுவனத்தின் தலைவன் என்பவர் ஒரு படத்தின் இயக்குநர் போலதான். மன வலிமையுடன் உடல் வலிமையும் முக்கியம். வசந்த் அதிலும் பெஸ்ட்.
நோவார்டிஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வருவது சாதாரண விஷயம் கிடையாது. அதில், தன்னை விடவும் தன் மனைவி சிருஷ்டி குப்தாவுக்கு முக்கியப் பங்கிருப்பதாகச் சொல்கிறார் வசந்த். 1998-ல் ஆசிய கலாசாரத் திருவிழா ஒன்றை நடத்திய குழுவில் வசந்த்தும் சிருஷ்டியும் இருந்தார்கள். இருவரும் தங்கியிருந்த இடத்திலிருந்து 40 கி.மீ தள்ளியிருந்தது விழா நடந்த இடம். அதனால், இருவரும் அடிக்கடி காரில் அங்கே பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்தப் பயணம், காதல் நகரம் வழியாகத் திருமண தேசத்துக்கு அழைத்துச் சென்று, இன்னமும் மகிழ்ச்சியாகத் தொடர்கிறது. இருவரும் இணைந்து பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள். ஒருமுறை கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறச் சென்றிருக்கிறார்கள். கடல் மட்டத்திலிருந்து 19,000 அடி உயரம் ஏறி, சூரிய உதயத்தைக் கண்டிருக்கிறார்கள். சிருஷ்டியால் அடுத்து ஒரு அடிகூட எடுத்து வைக்க இயலவில்லை. அந்த உயரத்தை அவர் உடம்பால் தாங்க முடியவில்லை. எப்போது கீழிறங்கலாம் எனக் காத்திருந்தவரிடம் ‘‘என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?’’ என புரபோஸ் செய்திருக்கிறார் வசந்த். ‘‘ஆம்’’ என்றார் சிருஷ்டி. ‘‘அந்த ஆம் உண்மையா, அல்லது, கீழே போனால் போதும் என்ற மனநிலையில் சொன்னேனா என்றுகூட வசந்துக்குத் தெரியாது’’ எனச் சொல்லிச் சிரித்திருக்கிறார் சிருஷ்டி. உயரத்தில் முடிவான அந்த பந்தம், இருவரையும் பர்சனல் வாழ்க்கையிலும் கரியர் விஷயத்திலும் உயரத்துக்குக் கொண்டுபோகுமென அப்போது நினைத்திருக்க மாட்டார்கள். இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த ஜோடி.
குறைந்த வயதில் சி.இ.ஓ ஆனதைப் பற்றிக் கேட்டபோது வசந்த் சொன்னதுதான் காமெடி. ‘‘இனிமேல் எங்கப்பா என்கிட்ட ‘எப்பப்பா ஒரு டாக்டரா, பேஷன்ட்ஸை பாத்து மருந்து பிரிஸ்க்ரைப் பண்ணப் போற’ன்னு கேட்க மாட்டார். அதுதான் சந்தோஷம்’’ என்றார்.
மிஸ்டர் நரசிம்மன், உங்கள் மகன் வசந்த் அடைந்திருப்பது மிகப்பெரிய உயரம். பெருமை கொள்ளுங்கள்.
To comment :
Ref : vikatan.com
Leave a Reply