`அடையாற்றின் மற்றோர் ஆலமரம்’… மருத்துவர் சாந்தா காலமானார்!

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை 3.30 மணியளவில் சாந்தா காலமானார். இவருக்கு வயது 94.

சென்னை அடையாறு என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது புற்றுநோய் நிறுவனம். லட்சக்கணக்கான புற்றுநோயாளிகளைக் குணப்படுத்திய இந்த நிறுவனத்துக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான புற்றுநோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருப்பவர் மருத்துவர் சாந்தா.

1954-ம் ஆண்டு குடிசையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தன்னையும் இணைந்துக்கொண்ட சாந்தா, இதற்காக அரசுப் பணியையும் கைவிட்டார். அதன் பிறகு கடந்த 67 ஆண்டுகளாக சாந்தாவின் உலகமே இந்த புற்றுநோய் நிறுவனம்தான். நிறுவனத்தை விரிவுபடுத்துவது, நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்தத் திட்டமிடல் போன்ற பணிகளுடன், தினந்தோறும் மருத்துவ சிகிச்சையும் வழங்கிவந்தார்.

வயோதிகத்தைப் பொருட்படுத்தாமல் புற்றுநோய் நிறுவனத் தலைவராகப் பணியாற்றிவந்த நிலையில், கொரோனா சமயத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பதை மட்டும் தவிர்த்துள்ளார். தனது அலுவலக வீட்டில் இருந்தபடியே வழக்கமான நிர்வாகப் பணிகளை மேற்கொண்டுவந்தார். சாந்தாவுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்துள்ளது. இதனால் அவ்வப்போது சுவாசப் பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சாந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சாந்தாவுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவே, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன. பின்னர் வீடு திரும்பிய நிலையில், நேற்று பகல் முழுக்க இயல்பாகவே இருந்திருக்கிறார். திடீரென நேற்று இரவு சாந்தாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை 3.30 மணியளவில் சாந்தா காலமானார். இவருக்கு வயது 94.

சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள புற்றுநோய் நிறுவனத்தில் சாந்தாவின் வசிப்பிடம் இருக்கிறது. அதில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் நிறுவன ஊழியர்கள், பிரபலங்கள், பொது மக்கள் பலரும் சாந்தாவுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். அவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.

ஜவஹர்லால் நேரு முதல் இன்றைய இந்திய அரசியல் பிரபலங்கள் வரை அனைவரின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றுள்ள சாந்தா, தனது தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக ஆசியாவின் உயரிய விருதான `மகசேசே’ விருது உட்பட இந்தியாவின் உயரிய விருதுகள் அனைத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடையாற்றின் மற்றோர் ஆலமரம்போல புற்றுநோய் நிறுவனத்தை விருட்சமாக உருவாக்கிய சாந்தாவின் மரணம், மருத்துவ உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவே கருதப்படுகிறது.

Ref : Vikatan

-x-x-x-x-x-x-x-x-x-x-

“என் வயது 91… இன்னும் செய்யவேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன!” – டாக்டர் சாந்தா

 

மகால வாழ்நாள் சாதனையாளர்களில் மிக முக்கியமான ஆளுமை. எளிமை, எல்லோரிடமும் மென்மையாகப் பழகக்கூடிய பண்பு, முதுமையைப் பொருள்படுத்தாத இடைவிடாத உழைப்பு, அர்ப்பணிப்புடன்கூடிய மருத்துவச் சேவை… இவைதாம் சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சாந்தாவின் அடையாளம். இதோ… வாசகிகளின் கேள்விகளுக்கு டாக்டர் சாந்தா அளிக்கும் பொக்கிஷப் பதில்கள்.

 

சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டங்களில், பெண்களைக் கல்வி கற்க அனுப்புவது அரிதாகவே இருக்கும் எனச் சொல்லுவார்கள். அது உண்மையா? உங்கள் வீட்டில் எப்படி?

ஹெச்.யமுனா, திருவனந்தபுரம்

உண்மைதான். ஒருவேளை படிக்கவைத்தாலும், அதிகபட்சமாக எஸ்.எஸ்.எல்.சி முடித்ததும் பெண்களுக்குக் கல்யாணம் செய்துவைத்து விடுவார்கள். அந்தக் காலத்தில் அதுவே பெரிய படிப்பாக இருந்தது. என் அம்மா பாலபார்வதியிடம் வீட்டிலிருந்தபடியே ஐந்தாண்டுகள் கல்வி கற்றேன். மிடில் கிளாஸ் குடும்பம்தான். என் இளைய தாத்தா (தாத்தாவின் தம்பி) இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி.ராமன். தாய்மாமா (அம்மாவின் தம்பி) சுப்பிரமணியன் சந்திரசேகர். இருவரும் நோபல் பரிசு பெற்றவர்கள்.

பி.எல் படித்த அப்பா விஸ்வநாதன் பிற்காலத்தில் ரயில்வேயில் வேலை செய்தார். இப்படிக் குடும்பத்தில் எல்லோரும் படிப்பின் அவசியம் புரிந்தவர்கள். அதனால் மூத்த பெண்ணான என்னையும் என் உடன்பிறந்த நான்கு தங்கை மற்றும் இரண்டு தம்பிகளையும் நன்றாகப் படிக்கவைத்தார்கள்.

ஓலைக் கீற்றால் வேயப்பட்ட பள்ளியில் நீங்கள் படித்ததாகப் பத்திரிகையில் படித்திருக்கிறேன். அந்த இளமைக்கால அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்

சுசீலா ராஜேந்திரன், சென்னை-32

என் வாழ்நாளில் மறக்க முடியாத மிகச் சந்தோஷமான காலகட்டம் அதுவே. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் இருந்த நேஷனல் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். இப்போது இருப்பதுபோன்ற பெரிய அடுக்குமாடிக் கட்டடங்களெல்லாம் அப்போது இல்லை. ஓலைக்கீற்று மற்றும் சாதாரண ஓட்டுக் கட்டடங்கள்தான் இருக்கும். என் தலைமையாசிரியை மிஸ் வீல் அவர்களும் மற்ற ஆசிரியைகளும் அன்பும் அர்ப்பணிப்புமாகச் சொல்லிக்கொடுத்தார்கள். நல்லொழுக்கம், நேரம் தவறாமை, பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது போன்ற நல்ல பண்புகளையும் கற்றுக்கொடுத்தார்கள். அந்தப் பள்ளியில் படித்த காலகட்டம் முழுக்கவே பசுமையான நினைவுகள்தாம். தோழிகள் எல்லோரும் அன்போடும் ஒற்றுமை உணர்வோடும் பழகினோம்.

மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் எப்போது ஏற்பட்டது? அந்த எண்ணம் எளிதாக நிறைவேறிவிட்டதா?

கலாவதி இளங்கோவன், தஞ்சாவூர்

நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்த நேரம். பெண் டாக்டர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். வெள்ளை கோட்டு அணிந்திருந்த அவரின் நடை, பேச்சு, பாவனை எல்லாமே கம்பீரமாக இருந்தன.

பின்னர், நான் எஸ்.எஸ்.எல்.சி முடித்த பிறகு, தனித்துவமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து, டாக்டராவதையே இலக்காகத் தீர்மானித்தேன். என் முடிவுக்கு வீட்டாரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதனால் டாக்டருக்குப் படிப்பது எனக்குப் பெரிய சிரமமாக இல்லை.

கால மாற்றங்கள் பெரிதாக ஏற்பட்டிருக்கும் இன்றைக்கு, ‘மெடிக்கல் கட் ஆஃப்’, ‘நீட் தேர்வுஎன ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. சுதந்திரம் கிடைத்திருக்காத அந்தக் காலத்தில் மருத்துவம் படிக்க பெரிய சிரமங்கள் இருந்தனவா?

ஷைலஜா கணேசன், பாலக்காடு

எங்கள் காலத்தில் மருத்துவம் படிக்க பெரிய சிரமங்கள் ஏதுமில்லை. அப்போது கல்லூரி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அந்த நிலை உயர அரசும் நிறைய உதவிகள் செய்தது. அப்போது எஸ்.எஸ்.எல்.சி முடித்ததும், இரண்டாண்டு ‘இன்டர்மீடியட் கோர்ஸ்’ (இப்போதைய ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ போல) படிக்க வேண்டும். மாநிலக் கல்லூரியில் அந்த கோர்ஸை முதல் வகுப்பு தேர்ச்சியுடன் முடித்தேன். அடுத்து மெடிக்கல் படிக்க நடத்தப்படும் இன்டர்வியூவில் தேர்வாகி, ‘மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி’யில் எம்.பி.பி.எஸ் படித்தேன்.

 

சுதந்திரம் அடைந்த காலகட்டத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்களேன்… ‘இனி நம் நாடு இப்படியெல்லாம் மாறப்போகிறதுஎன நீங்கள் நினைத்த மாற்றங்கள் நடந்திருக்கிறதா?

வத்சலா ஸ்ரீதரன், கோயமுத்தூர்-18

அந்தப் பொன்னான தருணம் நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான் மருத்துவக் கல்லூரி மாணவி. தொலைக்காட்சிப் பெட்டியெல்லாம் கிடையாது. ரேடியோ, பத்திரிகைகள் வாயிலாகத்தான் நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். சுதந்திரம் பெற கடைசி நேரத்தில் நம் தியாகிகள்பட்ட கஷ்டங்களைத் தெரிந்து கொண்டு மிகவும் நெகிழ்ந்தேன். சுதந்திரம் கிடைத்த பிறகு, ‘இனி எல்லா உரிமைகளும் நமக்குக் கிடைத்து, நாடு வல்லரசு என்ற தன்னிறைவு நிலைக்கு உயர்ந்துவிடும்’ என எல்லோருடனும் சேர்ந்து நானும் எதிர்பார்த்தேன்.

அப்போது இருந்ததைவிட, இப்போது ஆண்களுக்கு நிகரான அளவில் பெண்கள் நன்றாகப் படிக்கிறார்கள். ஆனால், அதில் வெறும் 2% பேர் மட்டுமேதான் மிக உயரிய பதவிகளில் இருக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் கழிந்த நிலையிலும், ‘பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள்; வேலைவாய்ப்பில், தேர்தல் அரசியலில் முன்னுரிமை கொடுங்கள்’ எனப் போராடிக்கொண்டே இருக்கிறோம். குடிப்பழக்கத்தால் ஆண்கள் சீரழிவதோடு, அவர்களின் குடும்பமும் துன்பங்களைத் தினமும் சந்திக்கிறது. இது வளர்ச்சிப் பாதையா? இதுதான் 70 ஆண்டுகளுக்கான வளர்ச்சியா? லஞ்சம் இல்லாத, வன்முறை இல்லாத, பாலியல் பாகுபாடுகள் மற்றும் பாலியல் குற்றங்கள் இல்லாத மற்றும் வசதி படைத்தவர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி குறைந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதே என் ஆசை.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் பணியாற்றிய காலத்தில் நீங்கள் கற்றுக் கொண்டது என்னென்ன?

எஸ்.தாரிணி, சேலம்

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனைக் கல்லூரியில் டி.ஜி.ஓ (D.G.O)  மற்றும் எம்.டி (M.D) ஆகிய மேற்படிப்புகளை 1954-ம் ஆண்டு முடித்தேன். அதே மருத்துவ மனையில் மகப்பேறு மருத்துவராக முழுநேர மருத்துவப்பணியைத் தொடங்கி னேன். அப்போது மருத்துவராக நாங்கள் கற்றுக்கொண்ட முதல் விஷயம் ஒழுக்கம். காலை 8 மணிக்குப் பணிக்கு வந்துவிட வேண்டும். ஐந்து நிமிடங்கள் தாமதமானாலும் ஆப்சென்ட் போட்டுவிடுவார்கள். அதனால் சரியான நேரத்துக்கு வேலைக்கு வருவது முதல் எல்லா நோயாளி களையும் கனிவோடு அணுகுவது உள்ளிட்ட நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண் டோம். அப்போதெல்லாம் பிரசவத்துக்கு ஒரு பெண் மருத்துவமனை நுழைவுவாயில் அருகே வந்ததுமே, எங்களுக்கு மணி யடித்து முன்னெச்சரிக்கை செய்வார்கள். நாங்கள் வேகவேகமாக அவரை அழைக்கச் செல்வோம். ஒரு வருஷம் பணியாற்றிய அந்த மருத்துவ மனையில் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்கள் ஏராளம்.

புற்றுநோய் சிகிச்சைக்கான முன்னணி மருத்துவமனையாக இருக்கும்அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்எந்தச் சூழலில் தொடங்கப்பட்டது?

லக்ஷ்மி தாமோதரன், அரக்கோணம்

தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் தங்கை சுந்தரம், 1923-ல் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போதைய சூழலில் புற்றுநோய் பற்றி மக்களுக்குப் பெரிதாகத் தெரியாது. அந்த நோய்க்கான சிகிச்சையும் அப்போது பெரிதாகக் கிடையாது. சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி அம்மாவின் தங்கை இறந்துவிட்டார். தன் தங்கையைப்போல பெண்கள் உள்பட பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டதைப் பார்த்துக் கலங்கிய முத்துலட்சுமி அம்மா, ‘புற்றுநோயால் எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படு கின்றன தெரியுமா?’ என ஆட்சியாளர்களிடம் புள்ளி விவரங்களோடு புற்றுநோயின் தீவிரத்தை அழுத்தமாக எடுத்துக் கூறினார். ஒருமுறை லண்ட னுக்குச் சென்றிருந்தபோது, மேம்பட்ட சிகிச்சை முறை களைத் தெரிந்துகொண்டு வந்தார். தன் ஒரு மகன் ராணுவத்தில் இருந்ததால், மற்றொரு மகனான கிருஷ்ணமூர்த்தியைப் புற்றுநோய்  மருத்துவராக்க வேண்டும் என முடிவெடுத்து அவரை அமெரிக்காவுக்கு அனுப்பினார். 1949-ல் படிப்பை முடித்துச் சென்னை திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப் பட்ட புற்று நோய் சிகிச் சைத் துறையின் முதன்மை அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கினார். அப்போது மருத்துவமனையில் நடந்த சில சம்பவங்கள் அவருக்குப் பிடிக்காமல்போக, பணி யிலிருந்து விலகிவிட்டார். பின்னர்தான் பல போராட்டங்களுக்குப் பிறகு தனியாக ஒரு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டை முத்து லட்சுமி ரெட்டி அம்மா தன் மகன் கிருஷ்ண மூர்த்தியுடன் இணைந்து தொடங்கினார்.

அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் நீங்கள் இணைந்த தருணம் எப்படி நிகழ்ந்தது?

தமிழினி, திருச்சி

“எம்.பி.பி.எஸ் ஃபைனல் இயர் படித்துக்கொண்டிருந்த வேளை. டாக்டர் முத்து லட்சுமி அம்மா, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி இருவரும் பேசும் கருத்தரங்குகளில் நானும் பார்வையாளராக அமர்ந்து அவர்கள் சொல்லும் கருத்துகளைக் கவனித்திருக்கிறேன். அப்படி ஒருமுறை  மெடிக்கல் ஆபீசர்ஸ் அசோசியேஷனில் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை முன்னேற்றங்களை அறிய முடிந்தது. அவரின் முன்னோக்கு சிந்தனையும் பேச்சும் புற்றுநோய் குறித்து என் மனதில் பலமான தாக்கத்தை ஏற்படுத்தின.

1949-ல் ஹவுஸ் சர்ஜனானபோது, சென்னை அரசு பொது மருத்துவமனையின் கேன்சர் யூனிட்டிலேயே முதல் போஸ்ட்டிங் அமைந்தது என் அதிர்ஷ்டம். அந்த நேரம் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் புற்றுநோய் அதிகாரியாக அதே மருத்துவமனையில் சேர்ந்தார். அவரின் பணி திறமையைக் கண்கூடாகப் பார்த்தேன். தொடர்ந்து எழும்பூர் மருத்துவமனையில் உதவி மருத்துவ அதிகாரியாக ஒரு வருடம் பணி செய்தபோது, பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இன்டர்வியூவில் தேர்வாகி அரசு மருத்துவராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ‘அரசு மருத்துவராகச் சென்றால், பத்து வருடத்தில் உயர்ந்த பதவிக்கு வந்துவிடலாம்’ என்று பலரும் சொன்னார்கள். அத்தருணத்தில்தான் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டை முத்துலட்சுமி அம்மா தொடங்கினார். அந்த நல்ல முயற்சியில் நானும் பங்கெடுக்கலாம் என நினைத்தேன். அதனால் என் அரசு மருத்துவர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினேன்.

 

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் பழகியதில் மறக்க முடியாத நினைவுகள்..?

மதுஸ்ரீ, ஹைதராபாத்

முத்துலட்சுமி அம்மா, ‘விமன்’ஸ் இண்டியன் அசோசியேஷன்ஸ்’ அமைப்பை ஆரம்பித்து, அதன் மூலமாக கேன்சர் ரிலீஃப் ஃபண்டு திரட்ட பல வருடங்களாக நிறைய கஷ்டப்பட்டார். முடிவில் ஒரு லட்சம் ரூபாய் நிதி திரட்டினார். அப்போதைய தமிழக அரசு, சென்னை அடையாறில் நிலம் கொடுத்தது. அந்தநேரம் மும்பையில் புற்றுநோய்க்காக டாடா மெமோரியல் ஹாஸ்பிடல் இருந்தது. இந்தியாவின் இரண்டாவது மற்றும் தமிழ்நாட்டின் முதல் புற்றுநோய் மருத்துவமனையானது அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்.

1954-ல், 12 படுக்கைகள், 2 மருத்துவர்கள் (கிருஷ்ணமூர்த்தி அவர்களும் நானும்), 2 செவிலியர்கள், 2 டெக்னீஷியன்களுடன் அடையாறு இன்ஸ்டிட்யூட்டை ஆரம்பித்தார் முத்துலட்சுமி அம்மா. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான அவர், பல போராட்டங்களுக்குத் தைரியமாகக் குரல் கொடுத்தவர். சமூக சேவகியாக, இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக, தமிழகச் சட்டமன்ற துணைத் தலைவராகப் பணியாற்றியவர்.  தேவதாசி முறையை ஒழித்தது உள்ளிட்ட நிறைய பாராட்டுதலுக்குரிய செயல்களைச் செய்த  பெருமையும் அவருக்குண்டு. ஒரு புற்றுநோய் மருத்துவமனையை ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நிறைவேற்ற அவர்பட்ட கஷ்டங்கள் மிகவும் அதிகம். அம்மாவுடன் நெருங்கிப் பழகிய அந்த நாள்கள் எல்லாமே மறக்க முடியாத நினைவுகள்தாம்.

கேன்சர் இன்ஸ்டிட்யூட் தொடங்கப்பட்ட காலத்தில் புற்றுநோயின் தாக்கம் எந்த அளவில் இருந்தது?

கீதா குமார், பாளையங்கோட்டை

‘குணப்படுத்த முடியாத நோய்; மரணம் மட்டும்தான் முடிவு; வளர்ந்த நாடுகளில் வாழ்பவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய்’ என்கிற கருத்துகள்தாம் அப்போது அதிகமாக இருந்தன. மருத்துவர்களுக்கும்கூட இந்நோயைக் கண்டுபிடிப்திலும், அதற்கான சிகிச்சையளிப்பதிலும் சரியான புரிதல் இல்லாமல் இருந்தது.

கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் தொடக்கக் காலத்தில் குழந்தைகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, மருத்துவமனையில் அதிக அளவில் உயிரிழந்ததாக அறிந்தேன். அவையெல்லாம் உங்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின?

கவிப்ரியா, புதுச்சேரி

மருத்துவ வளர்ச்சி பெரியதாக இல்லாத அந்தக் காலகட்டத்தில், குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்களுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. மரபணுக் காரணங்களாக இருக்கலாம் என்றுதான் சொல்ல முடிந்தது. எங்களிடம் சிகிச்சைக்காக வந்த குழந்தை நோயாளிகள் பெரும்பாலும் ரத்தப் புற்றுநோயுடன் இருந்தார்கள். அந்தச் சூழலில் புற்றுநோயைக் கட்டுப்பாடில் கொண்டுவர முடியவில்லை. எனவே, 1960-ல் பீடியாட்ரிக் ஆன்காலஜி டிவிஷனை ஆரம்பித்தோம். அதன்பிறகு முன்னேறிய தொழில்நுட்பங்களுடன் சிகிச்சையளித்து, கடந்த 50 வருடங்களில் குழந்தைகளுக்கு உண்டாகும் புற்றுநோயை 65% கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம்.

அனைவரும் அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற கூற்றுக்கு உங்கள் கருத்து? ஆரம்பக்காலம் முதல் இன்றுவரையிலான உங்கள் உடற்பயிற்சி என்ன?

மைதிலி பிரகாஷ், காரைக்குடி

ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். இதன் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும் நான் எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை. இதற்குக் காரணங்கள் பல. காலை 6.30 மணிக்குத் தொடங்கும் என் தினசரி அலுவல்கள் முடிவதற்கு மாலை 6 மணி ஆகிவிடும். எனவே, உடற்பயிற்சி செய்ய நேரமில்லை. இருந்தாலும் தினசரி பல வார்டுகளைச் சுற்றிப் பார்ப்பதிலேயே எனக்குத் தேவையான உடற்பயிற்சி கிடைத்துவிடுகிறது. கூடவே கட்டுப்பாடான உணவு முறையினால் எனக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை.

முதுமைக் காலம் உங்களுக்கு எத்தகைய உணர்வைக் கொடுக்கிறது?

வி.தீபிகா, திருவாரூர்

ஒருவர் வளர வளர வாழ்க்கை அனுபவம் தரும் பாடங்கள் அவரை மேற் கொண்டு செம்மைப்படுத்தும். கடந்த காலத்தை நினைத்துப்பார்த்தால், ‘நாம் இதுவரை செய்தது என்ன… நினைத்த காரியத்தைச் செய்துவிட்டோமா… அப்படி இல்லை என்றால், இன்னும் நன்றாகச் செய்திருக்கலாமோ… என்னென்ன தவறுகள் செய்தோம்?’ – இப்படி பலப் பல கேள்விகளைத் தொடர்ந்து எனக்குள் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பிறவிக்கு ஓரளவுக்குப் பயனுள்ள காரியங்களைச் செய்துள்ளதாக நினைக்கிறேன். இப்போது என் வயது 91. இன்னும் செய்யவேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன. அதை நோக்கி இன்றைக்கும் உத்வேகமாகச் செயல்படுகிறேன்.

Ref : Aval Vikatan

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *