கல்கி

Kalki Krishnamurthy

கல்கி கிருஷ்ணமூர்த்தி என்ற இவர் பெயரில், கல்கி என்பது என்ன? இது இயற்பெயரா? அல்லது அவர் இணைத்துக்கொண்ட ஒன்றா? அல்லது மற்றவர்கள் அவருக்கு அளித்த பட்டப் பெயரா? நான் எண்ணியதுண்டு. பிறகு தான் தெரிந்தது, இவர் தன் மனைவி கல்யாணியின் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களையும், தன் பெயரிலிருந்து முதல் எழுத்தையும் சேர்த்து ‘கல்கி’ என்று தன் பெயர் முன் இணைத்துக்கொண்டாராம். (இந்த இடத்தில் எழுத்தாளர் சுஜாதா நினைவுக்கு வருகிறார்).

இப்படி கல்கியை பெயரளவில் மட்டுமே அறிந்திருந்த நான், பொன்னியின் செல்வனைப் படித்து சற்று மிரண்டுதான் போனேன். 2500 பக்கங்கள் கொண்ட அந்த பெரும் நாவலை படித்த அனுபவம் எனக்கு இல்லை .. அதோடு வாழ்ந்ததாகவே எண்ணுகிறேன். நாவலின் முதல் பக்கம் தொடங்கி இறுதி வரையில், என்னுடன் கைக்கோர்த்து தன்கூடவே அழைத்து சென்றார் கல்கி. வெறும் நாவல்தான் என்றாலும், அது ஏற்படுத்திய பாதிப்பு ஆழமானது.
சுமார் 1000 வருடங்களுக்கு முன் நடந்த வரலாற்றை இன்று படிக்கும்போது, உள்ளுக்குள் ஏதோ செய்தது. அந்த காடும், மலையும், ஆறும், குதிரை ஓட்டமும், அரண்மனையும், கடைவீதியும் எங்கோ பார்த்ததாகவே இருந்தது. அன்று அவ்விடத்தில் வாழ்ந்ததாகவே உள்ளம் உணர்ந்தது. இது கல்கியின் எழுத்தாற்றலோ, இல்லை என் புதைத்து வைத்த ஞாபகங்களோ தெரியவில்லை. ஆனால் அனுபவம் இனிமை.

பார்த்திபன் கனவு – கல்கியின் மற்றுமொரு வரலாற்று நாவலை இன்று படித்து முடித்தேன். பொன்னியின் செல்வனைப்போல் அல்லாமல், இது ஒரு சிறு நாவல்.

முதலாம் நரசிம்மவர்மன் பல்லவ நாட்டை 630 – 668 வரை ஆண்டு வந்தார். அவர் தந்தை மகேந்திரவர்மன், கலையின்மேல் கொண்ட தீரா ஆசையால், மாமல்லபுரம் சிற்ப வேலைகளைத் தொடங்க, அதை வெற்றிகரமாக முடித்துவைத்தார் நரசிம்மவர்மன். இன்றும், 1400 வருடங்கள் ஆகியும், அந்த சிற்பங்கள், பல புயல்களையும், சுனாமிகளையும் தாண்டி, வடிவம் மாறாமல், கம்பீரமாய் நின்று, பல்லவ வம்சத்தின் திறனை, நம் தமிழ் முன்னோரின் திறனை பறைசாற்றுகிறது.

சைவத்தை சார்ந்த 63 நாயன்மார்களில் சிறந்த மூவர் இக்காலத்தில் இவரருகில் வாழ்ந்தார்கள் என்ற பெருமை நரசிம்மவர்மனுக்கு உண்டு. அப்பர் என்ற திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், பரஞ்சோதி என்ற சிறுத்தொண்டரும் இம்மூவர் ஆவர்.

இதில், பரஞ்சோதி என்ற சிறுத்தொண்டர், நரசிம்மவர்மரின் படைத் தளபதியாய் இருந்து, வாதாபி போரில், சாளுக்கியரிடம் போரிட்டு பெரும் வெற்றியைத் தேடித்தந்தவர். பிறகு, போர்களைவிட்டு, பதவியைத் துறந்து, ஒரு சைவத் தொண்டராக மாறி, சிவாலயங்களுக்குச் சென்று தொண்டு செய்து வந்தார்.

ஹ்யுஆங்க் சாங் (Xuan Zang also known as Huang Tsang) என்ற புகழ்பெற்ற சீனநாட்டு பயணி, இதே காலத்தில் வாழ்ந்தவர். அவர், இந்தியாவில் பயணம் செய்தபோது, பல்லவ தலைநகரான காஞ்சியில் பல்லவ மன்னன் நரசிம்மவர்மனை சந்தித்தார்.

மேற்கூறியவை அனைத்தும் வரலாறு. 7ஆம் நூற்றாண்டில் நடந்தவை. இந்த வரலாற்றை அடிப்படையாக வைத்து, கல்கி, தம் கற்பனையை சேர்த்து அழகாய் வடித்தெடுத்த சிற்பங்கள் தான் சிவகாமியின் சபதம், மற்றும் பார்த்திபன் கனவு என்ற இரு நாவல்கள்.

நரசிம்மவர்மனின் இளைய பருவமும், சாளுக்கியருடன் அவர் புரிந்த போரையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான் சிவகாமியின் சபதம். பிறகு, பலவருடங்களுக்குப்பின், சோழநாட்டைக் கைப்பற்றி, கற்பனை மன்னனான பார்த்திபனுடன் போரிட்டு, வெற்றிபெற்று, பின், பார்த்திபனின் மகன் விக்ரமனையே சோழநாட்டின் மன்னனாக முடி சூட்டிவைப்பது தான் பார்த்திபன் கனவு.

இக்கதையை கல்கி, தமக்கே உரிய எளிய சுவையான நடையில் எழுதியிருப்பதுதான் அதன் வெற்றி எனலாம்.

பொன்னியின் செல்வன், இரைக்க இரைக்க சுரக்கும் ஓர் ஆழ்கிணறு என்றால் பார்த்திபன் கனவு ஒரு அழகான சிறு ஓடை. இந்த ஓடைப்பயணம் சுகமாகவே இருந்தது.

கல்கியின் மறைவுக்கு பிறகு அவர் அலையோசை நாவலுக்காக அவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.

Ref: Vidial

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *