Cho – A Teacher

கவிஞர் சுரதா 1971ல் ஆனந்த விகடனில் எழுதிய கவிதையை சோ, ‛இதுதான் கவிதையா’ என விமர்சித்தார். அதற்கு ‛பழுதென்ன கண்டீர் என் பாட்டில்’ என விளக்கம் அளித்திருந்தார்  சுரதா.  அப்போது சுரதாவுக்கு வாலி, சுப்பு , லட்சுமணன் ஆகியோர்  ஆதரவாக நின்றனர்.  குறிப்பாக வாலி, சோ ராமசாமியை கடுமையாக சாடியிருந்தார்.

காலம் கடந்தது.  ஆனந்த விகடனில் 2011ல் வாலி எழுதிய ‛நினைவு நாடாக்கள்’ பகுதியில், மறக்காமல் சோவைப் பாராட்டி இருப்பார் வாலி.  அதன் விவரம்…

ஒன்றுக்குள் இன்னொன்று ஒன்றிக்கிடப்பதும் –  காலத்தே அது கண் விழிப்பதும் இயற்கை நியதி போலும்!

‘ஓம்’ –
ஓரெழுத்து;
‘சோ’ –
ஓரெழுத்து!
முன்னது – ஆன்மிகத்தை
முன்னிட்டு நிற்பது;
பின்னது – அரசியலை
முன்னிட்டு நிற்பது!

 

1960-ல் சென்னை வானொலியில் ஒரு நாடகம் நடிக்கப் போயிருந்தேன்.

அங்குதான் – திரு.சுகி.சுப்பிரமணியன் அவர்களால், எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் திரு. சோ.

அடர்த்தியான முடியோடு, அழகுற வாரி வகிடெடுக்கப்பெற்ற கிராப்; மூக்கின் மேல் மொய்த்துக்கிடந்தது கண்ணாடி; கண்ணாடிக்குப் பின்னாடி –

உருண்டை உருண்டையான விழிகள் உமிழ்ந்துகொண்டிருந்தன, அவர் உள்ளிருக்கும் அறிவு வெளிச்சத்தை.
ஆம்;

அவர் ஒரு LAWYER;  புகழ்வாய்ந்த ஒரு கம்பெனியில், LEGAL ADVISER!

சட்டம் படித்த ஒரு மனிதன், சபையேறி நடிக்க வந்ததும்; சபையேறி நடிக்க வந்த மனிதன், சினிமாவில் நடிக்கப் புகுந்ததும்; சினிமாவில் நடிக்கப் புகுந்த மனிதன், சினிமாவை இயக்கப் புகுந்ததும்… இன்னும் இன்னும்…

ஒரு வக்கீலுக்குள் இத்துணை வடிவங்கள் உறைந்துகிடந்ததும்; அன்னணம் கரந்துகிடந்த அவை –

அவ்வப்போது வெளிப்பட்டதும் அதிசயமல்ல; நான் ஆரம்பத்தில் சொன்னபடி, அது இயற்கை நியதி!

சட்டம்; சினிமாவோடு – சம்பந்தப்பட்ட ஒரு மனிதன் – ‘சட்’டென்று பத்திரிகை ஆசிரியராகப் பரிணாமம் பெறுவதும் – அதுவும் அட்டை டு அட்டை – அரசியலை உள்ளீடாய்க்கொண்டிருப்பதும் –

 

‘அந்த ஆசாமியா, இந்த ஆசாமி! – என்றென்னைக் கேட்கவைக்கிறது!

‘BLITZ’   – நடத்திய திரு.கராஞ்சியா; ‘FILM INDIA’ – நடத்திய திரு.பாபுராவ் படேல்; இன்னும் – திரு.குஷ்-வந்த் சிங்; ‘LAST PAGE’ எழுதிக்கொண்டு இருந்த திரு.க்வாஜா அஹமத் அப்பாஸ்…

இவர்கள் வரிசையிலே இருத்துவேன் சோவை.

எனக்கும் சோவுக்கும், ஏராளமான விஷயங்களில் ஏழாம் பொருத்தம்தான்; இருப்பினும், சோவிடம் நான் சொக்கிப்போகிறேன்.
அவரும் ‘அவாள்’; நானும் ‘அவாள்’ என்பதாலல்ல. நானும் அவாள் இவாளைக் கடந்தவன்; அவரும் அவ்வாறே.
பின் – என் இதயம் அவர் பின் போவதேன் என்று வினவினால், இதோ அதற்கான விடை.

எழுத்திலும் சொல்லிலும் – அவர் ஏற்று நிற்கும் கற்பு நெறி; வேண்டுதல் வேண்டாமை அற்று விமர்சித்தல்; ஆதி சங்கராயிருந்தாலும், ஆட்டோ சங்கராயிருந்தாலும் – பேதா பேதமற்றுத் தன் கருத்தைக் காரண காரியங்களோடு பெய்தல்; மற்றும் அஞ்சாமை; துஞ்சாமை; ஆரிடமும் கெஞ்சாமை…

இத்துணைக் குண நலன்களோடு ஒரு பத்திரிகை நடத்திக்கொண்டு – ஏச்சையும் பேச்சையும் – சம திருஷ்டியோடு ஏற்றுக்கொண்டு –
அகவை எழுபத்தேழில் ஒருவன் ஆன்ம பலத்தோடு நிற்பது கண்டு, என் புருவங்கள் பொட்டுக்கு ஏறுகின்றன.

 

 

புல்லேந்தும் குலத்தில் பிறந்து, வில்லேந்தும் குலத்தார்போல் துலங்கிய –

துரோணரை நான் எப்பவும் துதிப்பேன் – கரம் கூப்பி; சோ அவர்கள் – துரோணரின் கார்பன் காப்பி!

கொள்கை ரீதியாக பல விஷயங்களில் முரண்பட்டிருந்தாலும், சோவும் வாலியைப் பாராட்டத் தவறவில்லை. ‛வாலி – 1000’ நூல் வெளியீட்டு விழாவில் சோ பேசும்போது, “வாலியின் கவிதைகள் காலம் கடந்தும் நிற்பவை. இது அவருக்கு கடவுள் தந்த பரிசு. அதனால்தான் அவரால் ராமாயணத்தைப் பற்றியும் எழுத முடிகிறது. முக்காப்புல்லாவும் எழுத முடிகிறது. வாலியால் ஆன்மிகம் பற்றியும் பேச முடியும். நாத்திகர்களைப் பாராட்டவும் முடியும். அதில் ஒன்றும் தவறு கிடையாது. கவிதை, பாடல்களை எழுதும் போது அதிலேயே அவர் ஐக்கியமாகி விடுகிறார். தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். அவரிடம் இன்னும் திறமைகள் கொட்டிக் கிடக்கிறது. கண்ணதாசன் காலத்திலும் புகழ் பெற்ற கவிஞராக இருந்தவர் வாலி. கண்ணதாசன் பாடலுக்கும் இவரின் பாடலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தது. அனைத்திலும் கவித்துவம் இருக்கும். எல்லோரையும் வாலியால் கவர முடியும்” என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/74427-cho-ramaswamy-is-carbon-copy-of-dronacharya.art

 

5 Responses to Cho – A Teacher

  1. S, Ramesh says:

    excellent website.. Noteworthy contribution to Brahamins’ society.. Don’t have words to praise….

  2. MATHAVAN K says:

    SUPER, ANY TIME CALL ANY HELP MATHAVAN 9750968844

  3. MATHAVAN K says:

    AGRICULTURE , TEMPLE VISIT, EDUCATION , JOB RELATED ANY HELP CALL MATHAVAN , PUDUKKOTTAI TAMIL NADU CELL NO:9750968844, 9159068844

  4. Seshadri says:

    super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *