உண்மையான சமூக சீர்திருத்தவாதி – ராமானுஜர் 1000

ramanujar

பாரதத் திருநாட்டில் அவதாரங்களும், மகான்களும் என்றும் வாழ்கின்றனர். நேற்றும், இன்றும், நாளையும் இது தொடரும். ஏனெனில் இது புண்ணிய பூமி, கர்ம பூமி.

மனிதன் தன் வாழ்வின் லட்சியமாம் முக்தி பெற பிறவி எடுக்க வேண்டிய புனித பூமி பாரதம். எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம் அவதாரங்களோ, மகான்களோ தோன்றி மக்களை நெறிப்படுத்துவர், வழிநடத்துவர்.

அத்தகு மரபில் தோன்றிய மகானே ஸ்ரீராமானுஜர்.

தற்பொழுது அரசியல்வாதிகளும், அறிவு ஜீவிகளும் வெறும் விளம்பரத்திற்காக சில பிரச்சினைகளைக் கூறி கூக்குரலிடுகின்றனர். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமயப் புரட்சியை தனி ஒருவராகச் சாதித்த பெருமை ஸ்ரீ ராமானுஜருக்கு உண்டு.

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே எனப் பரமனிடமே எதிர்வாதம் செய்த நக்கீரர் போன்று, வேத வசனங்களின் விளக்கத்தை தவறாகச் சொன்ன குருவிடமே, சரி எது என புது விளக்கம் கொடுத்த புண்ணியர் ஸ்ரீ ராமானுஜர்.

தவறு நடந்தால் அதைத் திருத்தும் மனநிலை அவசியம். அவ்வாறு செய்யுந்தோறும் நமது தவறுகளையும் நாம் திருத்தும் துணிவு, மனப்போக்கு நமக்கு வரும்.

ஆனால் அதே நேரத்தில் குருவையே பிழை திருத்தியோன் என்ற அகங்காரமின்றி, அவர் இவரிடம் கோபம் கொண்டு கொல்ல முயன்றபோதும், குருவிடம் மிக்க பணிவுடன் நடந்த பண்பாளர் ஸ்ரீராமானுஜர்.

சிவபிரான் அவர்தம் குமாரர் முருகப் பெருமானிடம் உபதேசம் பெற்றது, மக்கள் குருவிடம் சென்று உபதேசம் பெற்று மேனிலை அடைய வேண்டுமென்பதை வலியுறுத்தவே என்பர். அதுபோன்றே எல்லாம் அறிந்த யோகேஸ்வரனாம்  கிருஷ்ணர் சாந்தீபினி மகரிஷியைக் குருவாக ஏற்று, குருகுல வாசம் செய்தது, மக்களுக்கு குருகுலவாசப் பெருமையை உணரச் செய்யவே. இதே பாணியிலேயே ஸ்ரீ ராமானுஜரும், குருவை சென்று சேர்ந்து பாடம் கேட்கிறார்; தீக்ஷை பெறுகிறார்.

சீடர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அவரே முன் உதாரணம்.

ஸ்ரீரங்கம் கோவில் பொறுப்பையேற்ற ஸ்ரீராமானுஜர் அதைச் செம்மைப்படுத்த பல மாற்றங்களைச் செய்தார்.

ஒவ்வொரு துறைக்கும் உரிய அதிகாரிகளை நியமித்து எங்கும் தவறு நடக்காத வண்ணம் சீரமைத்து, நிர்வாகம் சிறப்பாக நடைபெறச் செய்த நிர்வாகச் செம்மல் ஸ்ரீ ராமானுஜர்.

நிர்வாகச் சீர்திருத்தத்தால் தவறு செய்ய இயலாத கொடியவர்கள், அவரைக் கொல்ல ஏற்பாடு செய்கின்றனர்.

பிச்சை உணவில் விஷம் கலந்து கொடுக்கச் செய்தனர். இறையருளால் அவ்வுணவில் விஷம் உள்ளதறிந்து உண்ணாது உயிர் தப்பிய உத்தமர் அவர்.

தீயோர்கள் திருந்த வேண்டுமென தான் உண்ணாவிரதம் கடைபிடித்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உண்ணா நோன்புப் போராட்டத்தைத் துவக்கிய நல்போராளி.

ஸ்ரீரங்க வசந்த திருவிழாக் கூட்டத்தில் மனைவியின் கண் அழகில் மதிமயங்கிச் சென்று கொண்டிருந்த பிள்ளை உறங்காவில்லி தாசனை வலிய ஆட்கொண்டு ஸ்ரீரங்கப் பெருமானின் கண் அழகைக் காட்டி அருள் புரிந்து அரங்கனின் அடியாராக்கிய அற்புத குருநாதர்.

‘நான் நரகத்திற்குச் சென்றாலும் நாட்டோர் பலர் இறைவனருள் பெற்று நலம் அடைவரே’ என்ற தியாக உணர்வால் குருவின் உபதேச மந்திரத்தைத் திருக்கோட்டியூரார்களைக் கூட்டி உரக்க உபதேசித்த தியாகச் செம்மல்.

தீண்டாமை, தீட்டு என்பன ஹிந்து சமயத்தினை அல்லல்படுத்திய காலகட்டத்தில் அதை உடைத்தெறிய அமைதியாக ஆர்பாட்டமில்லாது ஆவன செய்தவர் ஸ்ரீ ராமானுஜர்.

ஹிந்து மதத்தில் பிறப்பால் எங்கும் உயர்வு தாழ்வு கூறப்படவில்லை. மேலும் வர்ணம் என்பது பிறப்பாலல்ல. அது குணத்தாலும் தொழிலாலும் வருவது என்பதுதான் ஹிந்துமத அடிப்படை நூல்களாம் வேதங்களின் சாரமாகிய ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் தரும் செய்தி.

காலப்போக்கில் சிலரது சுயநலத்தால் நான்கு வர்ணங்கள் ஆயிரக் கணக்கான ஜாதிகளாக உருமாறின. அவையும் பிறப்பின் அடிப்படையில் அமைந்ததாக கருதப்பட்டன. இது முற்றிலும் தவறு.

ஹிந்து மதத்தில் பிராமணர்கள் தான் பிறப்பால் உயர்ந்தவர்கள். அவர்கள்தான் வேதம் கற்க வேண்டும், பூஜை செய்ய வேண்டும் என்பன போன்ற சில நடைமுறைகளும் சிலரால் கொண்டு வரப்பட்டன. ஆனால் இதற்கு சாஸ்திர சம்மதம் கிடையாது. ஏனெனில் பிறப்பால் ஜாதி என வேதத்தில் எங்கும் கூறப்படவில்லை.

வேதரிஷிகள் அனைவரும் பிராமண குலத்தில் பிறந்தவர்களல்லர்.

மீனவப் பெண்ணின் மகன் வந்தான், வேதங்களையே வகுத்தளித்தான். மகாபாரதம் தந்ததும் அவர்தான்.

ராமாயணம் தந்த வால்மீகி வேடர். அவதாரமென வழிபாட்டுக்குரியவர்களான ராமரும் கிருஷ்ணரும் ஷத்ரியரும், வைசியரும்தான்.

சிவனோ, முருகனோ, கண்பதியோ, தேவியோ பிராமண குலத்தில் உதிக்கவில்லை.

ராமர் வேடனையும், வானரனையும் சகோதரனாக ஏற்றுக் கொண்டபின் பிராமணருக்குப் பிறந்த அசுரகுல விபீஷணனையும் ஏற்றுக் கொள்கிறார்.

நமது ஆலயங்களில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் என வழிபாட்டுக்கு உரியவர்களாக உள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜாதியில் பிறந்தவர்களே.

எனவே ஹிந்து மதத்தில் குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம் என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனாலும் சிலரால் புகுத்தப்பெற்ற ஜாதி ஏற்றத்தாழ்வுகளை மாற்றி, உண்மை உணர்த்த திருவுளம் கொண்டார் ராமானுஜர்.

அதனால் நீராடச் செல்லும் பொழுது பிராமண குலத்தில் பிறந்தோர் தோளில் கைவைத்தபடி சென்றார். நீராடி வரும்பொழுது திருக்குலத்தவரான பிள்ளை உறங்காவில்லி தோளில் கைவைத்துத் திரும்புவார். அதற்கு அவர் கூறிய காரணம் மிகவும் சிந்திக்கத்தக்கது.

“பிராமண குலத்தில் பிறந்தவன், எனவே உயர்ந்தவன் என்ற அகங்காரம் குறையவும், எக்குலத்தில் பிறப்பினும் நாம் தாழ்ந்தவர்களில்லை;நாமும் இறைவனின் குழந்தை என்ற அபிமானம் வளரவும் இது வகை செய்யும்” என்றார்.

எத்தகைய சமுதாயச் சீர்திருத்தவாதியாக அவர் திகழ்ந்தார் என்பதனை இதன்மூலம் அறியலாம்.

கூக்குரலிட்டு ஊரைக் கூட்டி சுயலாபமடைய நினைக்காமல் அமைதியாகப் புரட்சி செய்த பெரியவர் ராமானுஜர்.

தினமும் பெருமாளுடன் உரையாடும் திருக்கச்சி நம்பியைக் குருவாக அடையப் பலவித்த்தில் முயற்சிக்கிறார்.ஆனால் ”தான் பிறந்த குலம் தாழ்ந்த குலம்” எனக் கூறி மறுக்கும் அவரிடம், ”பிறந்த ஜாதி முக்கியமில்லை, ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் எல்லா ஜாதியிலும் பிறந்துள்ளனரே” என வாதிடுகிறார்.

அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனாலும் அவரையே குருவாக மனதால் பாவித்து அவரைத் தன் இல்லத்திற்கு பிரசாதம் உண்ண அழைக்கிறார். அவர் உண்ட மீதியை உண்டால் குரு- சீட உறவு வந்துவிடும் என்பது ஸ்ரீராமானுஜரின் திட்டம்.

ஆனால் இதைத் தெரிந்து கொண்ட நம்பி அவ்வாறு நடைபெறாமல் இருக்க அவரில்லாத நேரத்தில் சென்று உணவருந்தி மீண்டார்.

ஸ்ரீராமானுஜரின் மனைவி தாங்கள் பிராமண குலத்தில் பிறந்தவர்கள் என்ற அகந்தை காரணமாக மீதி உணவைப் பிச்சைக்கார்ர்களுக்கு இட்டுவிடுகிறார்.

இதை அறிந்து மிகவும் வருந்தும் ஸ்ரீ ராமானுஜர் மனைவியைக் கண்டிக்கிறார். தனக்கு பாக்கியமில்லை என மனதைத் தேற்றிக் கொள்கிறார். ஆயினும் தனது முதல் குருவாகவே அவரை பாவித்து வந்தார்.

ஒருமுறை தனது சீடர்கள் புடைசூழ திருப்பதி நோக்கிப் பயணித்த ஸ்ரீ ராமானுஜர் வழி தெரியாமல் ஓரிடத்தில் தயங்கி நின்றார்.

அருகில் கிணற்றிலிருந்து பயிருக்கு நீர்பாய்ச்ச ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தவரிடம் வழி கேட்க அவரும் சரியான பாதையைக் காட்டினார்.

அனைவரும் அந்தப் பாதையில் பயணிக்கலாயினர். ஆனால் ஸ்ரீ ராமனுஜர் ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்த அவரை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார்.

சீடர்கள் அதிர்ந்து ஓடி வந்து,  “ஐயோ, அபசாரம், நீங்கள் ஆச்சார்யர் கீழ் குலத்தானை வணங்கலாமா?” என வினவினர்.

அதற்கு, “உங்கள் கண்களை ஜாதி மறைக்கிறது. மோக்ஷத்திற்கு வழிகாட்டும் திருமலையான். அவனை அணுக திருமலைக்கு வழிகாட்டியிருக்கிறார் இந்த பாகவதன். பகவானை அணுக வழிகாட்டுபவன் ஆச்சார்யன். எனவே வணங்குங்கள்” என்றார் ஸ்ரீராமானுஜர்.
”அந்தணர் என்போர் அறவோர்”


“குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”

”நந்தனைப் போலொரு பார்ப்பான்
இந்த நாட்டினிலே இல்லை – குணம்
நல்லதாயின் எந்தக் குலத்தினரேனும்
உணர்வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்”.

– என்பன போன்ற பெரியோர்களின் வரிகள் எத்துணை உண்மை என்பதை ஸ்ரீ ராமானுஜர் வாழ்வு நமக்கு எடுத்துக்காட்டாக்கி உதவுகிறது.

மகான் ஸ்ரீ ராமானுஜர் ஓர் எடுத்துக்காட்டான சீடர், வலிய ஆட்கொள்ளும் குரு, திற்மையான நிர்வாகி, குலத்தாழ்ச்சி- உயர்ச்சி சொல்லல் பாவம் என்பதை உலகோருக்கு உணர்த்திய சமூக சீர்திருத்தவாதி.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின் அங்கமே நாமெல்லாம் என்ற விசிஷ்டாத்வைதக் கொள்கையை பரப்பிய ஆன்மிக ஞானி.

அற்புதங்கள் பல செய்த சித்தர். இத்தகு சிறப்புமிக்க ஸ்ரீ ராமானுஜருடைய வாழ்க்கை, அனைவரும் அறநெறிப்படி வாழ்ந்து வாழ்வில் மேனிலை அடைய உதவும் என்பதில் ஐயமில்லை.

எனவே அவர்தம் வரலாற்றைப் படித்துப் பலருக்கும் எடுத்துக் கூறி, அனைவரும் உயர்நிலையடையச் செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும்

இப்பணி இறைபணி!
இன்றே செய்வோம்! இனிதே வாழ்வோம்!

குறிப்பு:

Written By: பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர், வெள்ளிமலையில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா ஆசிரமத்தின் தலைவர்.

 

Ref: Ramanujar1000

One Response to உண்மையான சமூக சீர்திருத்தவாதி – ராமானுஜர் 1000

  1. V.Nandakumar says:

    Really he is great mahaan and we need like this mahaan nowadays

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *