ஜெயகாந்தன் – ஒரு அனுபவம்

jaganthanதிரு ஈ வே ரா முன்னிலையில் பேசியது – ஜெயகாந்தன்
1959-ல் என்று நினைக்கிறேன். திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் என்னைச் சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார்கள். திரு ஈ வே ரா மாநாட்டின் திறப்பாளர். திரு. டி.எம். நாராயணசாமி பிள்ளை மாநாட்டின் தலைவர். அவரைப் பற்றி எனக்கு அதற்கு முன்னால் ஒன்றும் தெரியாது. அண்ணாமலை சர்வ கலாசாலையின் முன்னாள் வைஸ் சான்ஸலர் என்று பின்னால் அறிந்து கொண்டேன். அவர் பார்வைக்கு நல்ல வைதிகராகக் காணப்பட்டார். நெற்றியில் திருமண் அணிந்திருந்தார். இந்த மாநாட்டை முன்னின்று நடத்தியதில் முக்கியப் பொறுப்புப் பெற்றிருந்தவர் திரு. அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார். அவர் ஆத்திகர்; சைவர்.
மாநாடு தேவர் ஹாலில் நடைபெற்றது. பிராமணர்களும் தேசிய அரசியல் உணர்வு

மிக்கவர்களும் அந்த மாநாட்டுக்கு அதிகமாய் வந்திருந்தனர். பெரியார் ஈ.வே.ரா.வுக்காகத் திராவிடக் கழக அனுதாபிகளும் நிறையப் பேர் வந்திருந்தனர். முன் வரிசையில் கறுப்புச் சட்டை அணிந்த தி.க. பிரமுகர்கள் வரிசையாய் அமர்ந்திருந்தனர். திறப்பாளர் பெரியார் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவரது பிரசங்கத்தைப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, நேர்முகமாய் இருந்து கேட்டதில்லை. பெரியார் தனது வழக்கமான தோரணையில் நமது இதிகாச புராணங்களையும், இந்து மதத்தையும், பிராமணர்களையும் கடுமையாகக் கண்டனம் செய்து பேசினார்.
‘மகாபாரத – ராமாயண – புராணக் குப்பைகளை எல்லாம் கொளுத்தாமல் தமிழ்நாட்டிலுள்ள எழுத்தாளர்கள் என்னத்தை எழுதிச் சாதிக்க முடியும்? அஞ்சு பேருக்கு ஒரு பெண்டாட்டி இருந்தாள் என்று சொல்லுகிற ஒரு கதையை இந்தக் காலத்தில் வைத்திருக்கலாமா? இதெல்லாம் ஆரியர் சூழ்ச்சி அல்லவா? தமிழன் இவற்றையெல்லாம் ஒதுக்காதவரை தமிழிலக்கியம் உருப்படாது. வடவர்கள் நம்மை ஆளுகிறார்கள். நாம் மூடர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். பார்ப்பனர்கள் அவர்களுக்குக் கையாட்களாக இருக்கிறார்கள்…. தமிழன் பிச்சைக்காரனாகவும், காட்டுமிராண்டியாகவும் ஆனதற்குப் பார்ப்பனர்கள் தான் காரணம்… இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடி ஒழிக்காமல் கதை எழுதுவதால் என்ன பிரயோசனம்? இப்படிச் சொன்னால் நான் பார்ப்பனர்களை ஒழிக்கிறவன் என்கிறார்கள். நான் பார்ப்பனனின் எதிரியா? நான் பார்ப்பனீயத்தையே எதிர்க்கிறேன்!’ என்றெல்லாம் அவர் தனது வாழ்நாளில் கைக்கொண்டிருக்கிற கொள்கைகளை விளக்கி முக்கால் மணி நேரம் பேசினார்.
பாரதி, காந்தி, விவேகானந்தர் மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் கட்சியோடும் பரிச்சயமுள்ள எனக்கு, அவரது வாதங்களெல்லாம் சுத்த அபத்தங்களாகப் பட்டன. இது பற்றியெல்லாம் நான் பத்து வயது முதல் யோசித்து வந்திருக்கிறேன். எனது பள்ளித் தோழனாய் இருந்த சாரங்கபாணி, திரு.வீரமணி ஆக மாறி அக்காலத்திலேயே மேடைகளில் சண்டப் பிரசண்டம் செய்தபோது, அந்த வாதங்களை ஏற்க முடியாமல், ஆனால், அது பற்றி நான் தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கும் வந்திருக்கிறேன்.
எனது அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவரும் நான் பெற்றிருக்கிற எழுத்தறிவுக்கு ஆசானுமான எனது பாட்டனார் தனது இறுதிக் காலத்தில் கடுமையான நாத்திகராய் இருந்தவர். பெரியார் ஈ.வே.ரா.வின் பரம பக்தர். உண்மையான சுயமரியாதைக்காரர். எனினும் எனக்கு அவர்பால் இருந்த அன்பு, மரியாதை, நன்றி உணர்ச்சி கூட அவரது நாத்திக வாதத்துக்கு உடன்படுகிற போக்கை என்னிடம் ஏற்படுத்தவில்லை. அவரது பிராமண எதிர்ப்பு, சமூக அளவில் நான் அருவருத்த ஒன்று. ஆனாலும் அவரது பேச்சுக்களை அதன் சுவை கருதி நான் ரசித்ததுண்டு. பெரியார் ஈ.வே.ரா. கூட எங்காவது ஒரு திண்ணையில் உட்கார்ந்துகொண்டு நாலு பேருடன் இது போலப் பேசுவாரெனில் நான் மறுக்காமல் கேட்டுக் கொண்டிருந்திருப்பேன். ஏன், ரசித்தும் கூட இருப்பேன்.
ஆனால், அவர் இப்போது பேசுகிற இடம் தமிழ் எழுத்தாளர் மாநாடு. மாநாட்டுத் திறப்பாளர் என்ற முறையில் அவர் பேசுகிறார். நான் ஓர் எழுத்தாளன் என்ற பீடத்தில் சிறப்புச் சொற்பொழிவாற்ற உட்கார்ந்திருக்கிறேன். எனவே, பெரியாரின் பேச்சை நான் ரசித்த போதிலும், அவர் மீது எனக்கு எவ்வளவு மரியாதை இருந்த போதிலும், அதை மறுத்துப் பேச வேண்டியது எனது சுய மரியாதையும் சுதர்மமுமாகும் என்று கருதினேன். எனது எண்ணத்தை என் முக பாவத்திலிருந்து கண்டு கொண்ட திரு.அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார், பெரியாரின் கருத்துக்களுக்கு மறுப்பு ஒன்றும் சொல்லாமல் இருக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டு ஒரு சீட்டும் எழுதிக் கொடுத்தனுப்பினார். நான் எழுந்து போய் அவரிடம் சொன்னேன்.
‘இந்த மாநாட்டில் நான் பேச வேண்டுமென்று நினைத்துக் கொண்டு வந்த விஷயங்களெல்லாம் மறந்து போய்விட்டன. இந்த நிலையில் நான் மாநாட்டில் பேசுவதெனில், அந்த பேச்சு எனக்கு முன் இங்கு பேசிய பெரியார் அவர்களின் பேச்சுக்கு மறுப்பாகத்தான் அமையும். ஆனால், என்னுடைய நோக்கம் பெரியாரைக் குறைவுபடுத்துவதோ, அவமதிப்பதோ அல்ல. என்னை நீங்கள் பேச அனுமதிக்கும் பட்சத்தில், எனது பேச்சை அவ்விதமாக யாரும் எடுத்துக் கொள்ளாமல் – அதாவது பெரியாரை அவமதிப்பதாக எடுத்துக் கொள்ளாமல் – இருக்கச் செய்வது என் பொறுப்பு’ என்று அவருக்கு வாக்குறுதி தந்தேன்.
பின்னர் நான் பேச அழைக்கப்பட்டேன். அன்றையப் பேச்சு, பத்திரிகைகளில் ரிப்போர்ட் ஆயிற்றா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், டேப் ரிகார்டரில் பதிவாயிற்று. அந்த டேப் எனக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, எனது நினைவில் இருக்கிற அளவுக்கு அந்தப் பேச்சை அல்லது அதில் உள்ள முக்கியமான சில பகுதிகளை மட்டுமே என்னால் இப்போது மறு நினைவு கொள்ள முடிகிறது.
நான் பேசினேன்:
“மாநாட்டின் தலைவராய் வீற்றிருக்கின்ற ஆஸ்திகப் பெரியார் திரு. நாராயணசாமிப் பிள்ளை அவர்களே, மாநாட்டின் திறப்பாளராய் வீற்றிருக்கிற நாத்திகப் பெரியார் திரு. ஈ.வே.ரா. அவர்களே” என்று எனது பிரசங்கத்தைத் தொடங்கினேன்.
“இது தமிழ் எழுத்தாளர் மகாநாடு. நான் எழுதுகிறவன். எனவே, எனக்குச் சில பொறுப்புகள் இந்த மாநாட்டில் பேசுகிறவன் என்ற முறையில் மட்டுமல்லாமல் மற்ற இருவரையும் விட அதிகமாக இருப்பதாக நம்புகிறேன். எனக்கு முன்னால் பேசிய பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் தெரிவித்த கருத்துக்களை யெல்லாம் உங்களைப் போல் நானும் கேட்டுக் கொண்டிருந்தேன் என்பதனால் அவரது பேச்சுக்கள் எனக்கும் உடன்பாடானது என்று நினைத்து விட வேண்டாம். அவருக்குப் பிறகு நான் பேச ஆரம்பித்து, அவரது கருத்துக்களால் எனக்கு ஏற்பட்ட சலனங்களை வெளியிடாமல் என்ன காரணம் கொண்டும் மறைத்துக் கொள்வேனேயானால் அதற்கு நான் உடன்பட்டு விட்டேன் என்றே அர்த்தமாகும். பெரியார் வயதிலும் அனுபவத்திலும் என்னைவிட மிகமிக மூத்தவர். இந்தக் காரணத்துக்காக, மரியாதை கருதி, அவர் கருத்துக்களை இங்கே நான் மறுக்காமல் இருக்க வேண்டுமென்று உங்களில் சிலர் நினைக்கலாம். நான் கூட நினைத்தேன். ஆனால், பெரியார் அவர்கள் அப்படி விரும்புகிறவர் அல்ல என்று நான் அறிவேன். பெரியாரிடம் எனக்கு ஒரு விஷயத்தில் முழுதும் உடன்பாடு உண்டு. அது, மனிதனின் சுயமரியாதைகளைச் சிதைக்கிற சகல மரியாதைகளையும் உடைப்பது; அதுவே அவரது தலையாயக் கொள்கை. அப்படிப்பட்ட மரியாதைகளை நீங்கள் எத்தனை நூற்றாண்டுகளாகப் பாதுகாத்து வந்தபோதிலும் ‘அதனை இடித்துத் தள்ளுங்கள்’ என்று அவர் சொல்கிறார். வேதத்தில் இப்படி எழுதியிருக்கிறதே என்று சொன்னால் கூட, ‘அந்த வேதத்தையே கொளுத்து’ என்கிறார். அதே போல் என் தகப்பனும், பாட்டனும், இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாலே வாழ்ந்த ரிஷிகளூம் சொல்லியிருக்கிறார்களே என்று சொன்னால் கூட, ‘அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று நம்பாதே! உன் அறிவைக் கொண்டு எதையும் எடை போடு’ என்று யாருக்கும் தராத மரியாதையை எனது பகுத்தறிவுக்கு அவர் தருகிறார். இதற்காக இவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். எனவே, எனது கேள்விகளை, எனது மறுப்புக்களை, எனது நிர்த்தாரணங்களைப் பெரியார் அவர்களிடமிருந்தே நான் தொடங்கலாம் என்று கருதுகிறேன்” என்ற விசாலமான பீடிகையுடன் நான் ஆரம்பித்தேன்.
“முதலில் எழுதுகிறவன் என்கிற முறையில் எதை எழுதுவது என்று தீர்மானிப்பது நானே தவிர, வேறு எவரும் இல்லை. பெரியார் அவர்களின் கட்டளைக் கேற்ப என்னால் எழுத முடியாது. இந்தக் கட்டளையை அவர் இந்த மகாநாட்டில் இடுவதற்கு முன்னால் இங்கே இருப்பவர்களெல்லாம் அதற்கு விருப்பப்படுகிறவர்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்படி அவர் நம்பி அந்தக் கட்டளையை இட்டிருக்கும் பட்சத்தில் நான் அதற்கு உடன்பட மறுக்கிறேன் என்பதை மிகவும் பணிவோடு தெரிவித்துக் கொண்டு, ஏன் அவ்விதம் என்னால் முடியவில்லை என்பதையும் நான் பெரியார் அவர்களுக்கும் உங்களுக்கும் விளக்கியாக வேண்டும்.
நமது தத்துவங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மொழி இவை பற்றியெல்லாம் பெரியார் அவர்களுடைய கருத்துக்கள் வெறும் பகைமை கொண்டிருக்கின்றனவேயல்லாமல், ஆழ்ந்த அறிவு சார்ந்த அணுகல் முறையாகக் கூட இல்லை. எனக்கு இவற்றைப் பற்றியெல்லாம் பகைமையற்ற, இவற்றின் பேரால் ஏற்பட்டுள்ள எதிர்மறை விளைவுகளின்பால் கவலையுள்ள சிந்தனைகள் உண்டு. மகாபாரதம் என்பது ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் எனக்குச் சொல்லவில்லை. மேலும் அது, மகாபாரதம் என்கிற கலாசாரப் பொக்கிஷத்தில் ஒரு விஷயமாகவோ சிபாரிசாகவோ எனக்குப் படவே இல்லை. அந்த விஷயத்தைப் பார்த்துப் புரிந்து கொள்கிற பக்குவம் திரௌபதி அம்மன் கோயிலின் முன்னால் சாமியாடுகிற ஒரு பாமரனுக்கு இருக்கிற அளவுக்குக் கூட நமது பகுத்தறிவுச் சிங்கங்களுக்கு இல்லாது போனது நமது துரதிர்ஷ்டமே.
Anthropology (மனிதன் குல வாழ்வியல்) பயின்றவர்களுக்குக் கூட அல்ல, அதனுடன் சற்றுப் பரிச்சயமுள்ளவர்களுக்குக் கூட மனித குலம் மிருக நிலையில் வாழ்ந்திருக்கிறது என்ற உண்மை புரியும். தாயைப் புணர்ந்து வம்ச விருத்தி செய்ததுதான் மனுஷக் கூட்டமும். அது பாவம், குற்றம், கற்பனைகூடச் செய்ய முடியாத பொய் என்ற வளர்ச்சி நிலைகள் மனித குல வாழ்வியலில் ஏற்பட்டு விட்டதால், அப்படி ஒரு நிலையே இல்லாதிருந்தது என்று நம்புவது மூடத்தனமாகும். ஆண்-பெண் உறவு சம்பந்தப்பட்ட விதிகள் காலத்தால் மட்டுமல்லாது சமூகப் பழக்க வழக்கங்களாலும் தற்கால உலகில் கூட எத்தனையோ மாறுபட்ட ஒழுக்க வித்தியாசங்களுக்கு உட்பட்டே இருக்கிறது. ஓர் ஆண் பல பெண்களை மணந்து கொள்ளுகிற முறையும், ஒரு பெண் பலருக்கு மனைவியாகி இருக்கிற நிலைமையும் ஒழுக்கக் கேடுகளாகக் கருதப்படாத சமூகங்கள் இப்போதும் உண்டு. நமது சமூகத்தில் அப்படிப்பட்ட ஒழுக்கங்கள் இப்போது இல்லை என்பதால், அல்லது நெடுநாட்களாகவே இல்லை என்பதால், எப்போதோ இங்கே இருந்த ஒரு நடை முறைக்காக இப்போது நான் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. வேறு எங்கோ ஒரு சமூகத்தில் இப்போதும் இருக்கிறது என்பதற்காக அதனைப் பழிப்பது எனது அறிவுடைமையுமாகாது. வெட்கமோ, பழிப்பு உணர்ச்சியோ இல்லாமல் ‘இப்படி இருந்தது; அல்லது இருக்கிறது’ என்று புரிந்து கொள்வது மட்டுமே என் வேலை.
மகாபாரதம் அவ்வளவு தொன்மையான கதை. அந்த தொன்மைக் கால நாகரிகத்துக்கு மாறான, இன்றைக்கு நவீனமாக இருக்கிற சிந்தனைகளும் கருத்துக்களூம் அதில் இருப்பதே அதனுடைய இதிகாசச் சிறப்பு. அதற்குக் காரணம் என்னவெனில், மகாபாரதம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட மனிதனால் எழுதப்பட்டதல்ல. மகாபாரதத்தின் மூல ஆசிரியரே வியாசர் அல்ல. காலம் காலமாய் கர்ண பரம்பரையாய், மனித வாழ்க்கையால் பேணப்பட்டு வந்த கதைகளுக்கும், செய்திகளுக்கும், தர்ம சீலங்களூக்கும், இலக்கியம் என்ற ஒன்று தோன்றுவதற்கு முன்னால் மனித ரசனையில் இடம் பெற்று விட்ட நாயக, நாயகிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு வியாசன் தனது மேதைமையினால் சில தர்மங்களை வலியுறுத்தித் தொகுத்து அருளியதே மகாபாரதம். இதில் குறை காண்பதற்கு ஆராய்ச்சி அல்ல; அறியாமையே தேவைப்படுகிறது.
மேலும் நமது காட்டுமிராண்டித்தனத்துக்கோ, நாம் மூடர்களாய் இருப்பதற்கோ, நமது வறுமைக்கோ பிராமணர்கள் காரணமல்ல; பிராமண தர்மங்களும் காரணமல்ல; நமது மதங்களும் காரணமல்ல; நமது கோயில்களும் புராணங்களும் காரணமல்ல. தௌ¤வாகச் சொன்னால் இந்தப் பொதுவான் வீழ்ச்சிக்குப் பிராமணர்களும் பலியாகியே இருக்கிறார்கள். அதன் காரணமாகப் பலரின் வசைக்கு அவர்களும் ஆளாகியிருக்கிறார்கள். பிராமண தர்மங்களிலிருந்து அவர்கள் வழுவிப் போனதனாலேயே நமக்குக் கேடு சூழ்ந்தது என்று பாரதியார் பிராமணர்களைச் சாடுகிறார். எனக்கும் ‘பிராமண எதிர்ப்பு’ உண்டு. அது பாரதியார் வழி வந்தது. ‘பார்ப்பனக் குலம் கெட்டழிவெய்திய பாழ்பட்ட கலியுகம்’ என்று தனது சுய சரிதையில் பாரதி குறிப்பிடுகிறான். அந்நியருக்கு ஏவல் புரிந்த ஆங்கிலக் கல்விமான்களாய், ஆங்கில அரசாங்கத்தின் அதிகாரிகளாய், அறிவற்ற விதேசி மோகிகளாய் வாழ்ந்த பிராமணர்களை மிகக் கடுமையாக எதிர்த்தான் பாரதி. ஆயினும் பிராம்மணீயத்தின் சார்பாகவே எதிர்த்தான். நான் பிராமணர்களை எதிர்க்க வேண்டுமெனில், அதற்குக் காரணம் அவர்கள் பிராமணர்களாக இருப்பதற்காக அல்ல; பிராமணத்துவத்தை அவர்கள் இழந்ததற்காகவே எதிர்ப்பேன்.
நமது சமூகம் புதுமையுற வேண்டும். அதற்குப் பொருள், ஆங்கில பாணியில் அதனை மாற்றுவது அல்ல. நமது பழமையை நாம் அறிந்து கொள்ளாமல், முன்னர் நாடு திகழ்ந்த பெருமையையும், மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியையும் பிரித்து அறிந்தாலன்றிப் ‘பின்னர் நாடுறு பெற்றி’யை நாம் உணர முடியாது.
வருணாச்ரம தர்மத்தால் இந்நாடு மேன்மையுற்று வாழ்ந்தது. அந்தத் தர்மங்கள் கெட்டதனாலேயே தேசம் கெட்டது. ஆன்மீகத்தால் இந்தியக் கலாசாரமும் இந்திய சமுதாயமும் நாகரிகச் செழிப்புற்று விளங்கியது. அந்நியர் வருகையாலும், அடிமை வாழ்க்கையாலுமே நமது அவலங்கள் உருவாயின.
இந்தியாவின் பெருமையையும், தமிழனின் சிறப்பையும் பேசுகிறபொழுது நமக்குள்ளே பகைமை வளர்த்துக் கொள்கிற வகுப்புவாதியைப் போலவும் பிரிவினைவாதியைப் போலவும் நான் பேசவில்லை. பெரியார் அவர்கள், பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என்கிறார். இதை ஏற்றுக் கொள்ள எனக்கு எந்த வித முகாந்திரமுமில்லை. வடக்கே வாழ்கிறவர்கள் எல்லாரும் பிராமணர்கள் அல்ல; பிராமணர்கள் நமது சமூகத்தின் பிரிவினரேயல்லாமல் அவர்களே ஒரு சமுதாயம் அல்ல. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்கள் ஆந்திரர்களாக அங்கீகரிக்கப்படுகிற பொழுது, வங்காளப் பிராமணர்கள் வங்காளிகளாக அங்கீகரிக்கப்படுகிற பொழுது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்கள் மட்டும் தமிழர்கள் ஆகாதிருப்பது எங்ஙனம்? அவர்கள் ஸ்ம்ஸ்கிருத மொழியோடு அதிகம் தொடர்பும் பற்றும் கொண்டிருக்கிறார்கள் என்பது தமிழர் நலனுக்கு விரோதமான பண்பு என்று நான் குற்றம் சொல்லத் தயாராயில்லை. ஏனெனில், ஸ்ம்ஸ்கிருதம் என்பது இந்தியாவின் பொதுச் செல்வமே தவிர, அது எந்தப் பிரிவினருக்கும் சொந்தமான ஏகபோக மொழியல்ல. ஸ்ம்ஸ்கிருத மொழிக்கென்று ஓர் இனமோ, ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்போ இந்தியாவில் தனியாக ஒன்றுமில்லை. அது ஓர் ஆதிக்க மொழி அன்று. அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக ஸ்ம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை மிக்கவனாய் இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் ஸ்ம்ஸ்கிருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவுக்கே வழிகாட்டியிருக்கிறார்கள்.
மேலும் ஸம்ஸ்கிருதக் கலைச் செல்வங்கள் தமிழர்கள் அருளியது அனந்தம். தமிழர் நாகரிகத்தின் பொற்காலங்களில் ஸம்ஸ்கிருதம் அருமையான போஷாக்குப் பெற்றிருக்கிறது. நாளந்தாவுக்கு இணையான காஞ்சி சர்வகலாசாலையில் ஸம்ஸ்கிருதப் பேரறஞர்களான தமிழர்கள் ஆசான்களாய் இருந்திருக்கிறார்கள். தர்க்க சாஸ்திரத்தின் பிதாமகனாகக் கருதப்படுகிற திங்கநாதன் ஒரு தமிழனே ஆவான். இந்தியாவின் எட்டுத் திக்குகளிலும் இந்து சனாதனத்தின் பெருமையைக் கொடி நாட்டி, பௌத்தர்களையும் நாத்திகர்களையும் தனது ஞான வன்மையால் வென்று உபநிஷத்துச் செல்வங்களை உலகுக்கு அளித்த ஆதிசங்கரன் ஒரு தமிழனே ஆவான். கயிலையங்கிரியிலுள்ள சிவாலயத்துக்கு அர்ச்சகராய் இன்றும் தென்னாட்டைச் சேர்ந்த ஒரு “போற்றி”யே போகிறார். நமது ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ராமாநுஜரின் பெயரால் வடபுலம் எங்கும் ராமாநுஜ கூடங்கள் நிறைந்து கிடக்கின்றன. இந்து சமயத்தின் இன்னுமொரு செல்வமான வைணவத்தை வடக்குக்கு அருளியது தெற்கே ஆகும். மற்றுமொரு மார்க்கமான மாத்வத்தை வட நாட்டினருக்கு அறிமுகம் செய்ததும் நமது கும்பகோணத்தில் பிறந்த ஒரு தமிழன் தான். அந்நியரின் படையெடுப்பிலிருந்து இந்தியாவைப் பாதுகாத்த வடபுலத்து ரஜபுத்திர வீரர்களுக்கு இணையாக இந்தியாவின் சமயத்தையும் ஆன்மீகப் பண்புகளையும் காப்பாற்றுவதற்கு ஞான வீரர்களைத் தமிழகமே தந்திருக்கிறது. ஸம்ஸ்கிருதப் பகைமை என்பதே பிரிட்டிஷ்காரர்கள் செய்த சூழ்ச்சியின் விளைவு. அந்த வீழ்ச்சியுற்ற காலத்தில் தோன்றிய மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையைப் போன்ற தமிழ்ப் புலவர் காலத்திலேதான் இந்த வடமொழிப் பகைமை என்கிற வியாதி நம்மைப் பிடித்தது.
நமது ‘மூடத்தன’த்துக்கு இணையாகவும் அதிகமாகவும் உள்ள மூடத்தனங்கள் கிரேக்கப் புராணங்களிலும் உண்டு. மனிதர்கள் வாழ்ந்த, பேசிய மொழிகள் எல்லாவற்றிலும் ‘மூடத்தனம்’ உண்டு.
நாம் காட்டுமிராண்டிகளானது இந்த இரு நூற்றாண்டுக் கால அடிமை வாழ்க்கையில்தான். அதற்கு முன்னால் சுரண்டலற்ற, வர்க்க மோதல்கள் இல்லாத, ஊனமொன்றறியா ஞானமெய்ப் பூமியாய் இந்தியா திகழ்ந்தது. பிராமணர்கள் நமது அறிவுக்கும், ஞானத்துக்கும் தலைமை ஏற்று வழி நடத்திய சமூகத்தில் உயர்வு, தாழ்வு இருந்தது இல்லை. மனு தர்ம சாஸ்திரத்தில் சமூக நியாயங்கள் பேதப்படுகின்றனவே என்று கேட்கலாம். மனு தர்மம் ஒரு சட்டம். காலத்தின் தேவையால், நிர்ப்பந்தத்தால் உருவான சட்டம் அது. அதனை இக்கால அறிவும் அனுபவமும் கொண்டு பார்த்தல் தகாது. ஹிந்து சமூகத்தில் ஏற்பட்ட குறைகளை நான் மறைக்க முயலவில்லை. ஆனால் அந்தக் குறைகளுக்கும் ஹிந்து தர்மத்துக்கும் சம்பந்தமில்லை என்றே சொல்லுகிறேன். எல்லாக் காலங்களிலும் தோன்றிய ஹிந்துமத மகான்கள் அனைவரும் தீண்டாமையை எதிர்த்தே வந்திருக்கிறார்கள். ஹிந்து சமூகத்தில் ஏற்பட்ட குறைகளை அதன் வளர்ச்சியின் மூலமாகவே தவிர்ப்பதற்கான வாய்ப்பு நமக்குத் தடுக்கப்பட்டது. அந்நிய ஆட்சி முறைகளும், இங்கு புகுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளாதார வாழ்க்கை முறைகளும் நம்மை மேலும் அலைக்கழித்துச் சீர்குலைத்தன.
நம்மை விடவும் பலவீனமான ஒரு கலாசாரம் நவீன விஞ்ஞான உதவிகளுடன் பலாத்கார முறைகளினால் நம்மை அடக்கி ஆண்டது. இந்தியாவின் உண்மையான, புராதன கலாசாரங்களைக் ‘காட்டுமிராண்டித் தனங்கள்’ என்று ஆங்கில நாட்டு மூடர்கள் நம்மைப் பற்றிச் சரித்திரம் எழுதினார்கள். அந்தச் சரித்திரத்தை நம் நாட்டு ‘அடிமை அறிவாளிகள்’ கற்றார்கள். அந்நியர் மாதிரி ஆடையணிந்து கொண்டு இந்த உஷ்ணப் பிரதேசத்தில் திரிவதற்கு வெட்கப்படாத தமிழர்கள், நமது கலாசாரப் பண்புகளில் ஒன்றாகிய திருநீறு அணிதல், திருமண் இட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கு வெட்கப் பட்டதுமல்லாமல் அவற்றைப் பரிகசித்து ஏளனமும் செய்தார்கள். இந்தச் செய்கை பகுத்தறிவின்பாற்பட்டது என்று அவர்கள் நம்பினார்கள். இது சமூக வாழ்க்கையில் இன்னொருவரின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுகிற அநாகரிகம் என்று கூட அவர்களுக்குப் புரியவில்லை.
கடவுளை எல்லா மதத்தினரும் நம்புகிறார்கள். கடவுள், மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று எல்லா மதங்களும் ஒப்புக் கொள்கின்றன. மதங்கள் மார்க்கங்களே. அல்லாஹ் என்ற வார்த்தைக்குக் கடவுள் என்றே பொருள். கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொல்லுவது ஏதோ பிராமணர்களை மட்டுமே பழிக்கிற சொல் என்று எல்லாருமே நினைக்கிறார்கள். ஏசு கிறிஸ்துவும், நபிகள் நாயகமும், காந்தியடிகளும் கடவுளை நம்பியவர்கள்தாம் என்கிற விஷயமே யாருக்கும் ஞாபகம் வருவதில்லை. அந்த விஷயத்தில் எல்லா மதத்தினரும் பெரியார் சொல்லுகிற கடவுளை, ஹிந்துக்களூக்கு மட்டுமே சொந்தமாக்கி விட்டார்கள். ஓர் உண்மையான ஹிந்து இந்த வசைகளுக்காகக் கோபங் கொள்ள மாட்டான். ஏனெனில், இந்த மதத்தைச் சேர்ந்த பல பெரியார்களும், நமது அன்றாட வாழ்க்கையில் பல பாமரர்களும் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். ஹிந்து மதத்தைச் சேர்ந்த பல நாத்திகப் பெரியார்களை நாம் சொல்ல முடியும்.
‘நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம்சாத்தியே சுற்றி வந்து மொணமொணென்றுசொல்லு மந்திரம் ஏதடா’
என்று சொல்லிய சிவவாக்கியரின் கொள்கையின் பாதியே பெரியார் அவர்களின் பகுத்தறிவு வாதம். சிவவாக்கியரின் பகுத்தறிவு அதை முழுமை ஆக்குகிறது:
‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்’ என்று.
ஹிந்து தர்மம் இந்த மண்ணில் வாழ்கிறவர்களின் நடைமுறைக்கு ஒத்தது. இதற்கு ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை. இதைப் படைத்தவனும் இல்லை; அழிப்பவனும் இல்லை. இந்த மதத்தில் எவரும் சேர்த்துக் கொள்ளப்படுவதுமில்லை; எவரும் விலக்கப்படுவதுமில்லை. ஒரு முஸ்லிமும் ஒரு கிறிஸ்துவனும் ஆக்கப்படுகிறான். ஒரு ஹிந்து மதம் அதற்கெல்லாம் தடையேதும் விதிக்கவில்லை. மற்ற மதங்களுக்கு அவன் மாறிப்போவது ஏதோ உத்தியோகம் பார்க்க உடை மாற்றிப் போவது மாதிரிதான். ஹிந்து மதம் அதற்கெல்லாம் தடையேதும் விதிக்கவில்லை. இந்த மதமாற்றங்கள் குறித்து விவேகானந்தருக்குக் கோபம் வந்திருக்கிறது. அது பிற மதங்களின் மேல் அவருக்கெழுந்த கோபமல்ல. அந்த மதங்களைச் சார்ந்த அரசுகள் இந்த நாட்டு மக்கள் விஷயத்தில் செய்த கொடுமைகள் குறித்தும், ஹிந்து மதத்தின் களங்கமான தீண்டாமைக் கொடுமையால், பொருளாதார சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாக ஏற்பட்ட மதமாற்றங்கள் குறித்தும் அவர் கொண்ட கோபமே அது. எனவேதான், ‘எல்லா மதங்களும் , உண்மை என்ற ஒரே சமுத்திரத்தை நாடிச் செல்லும் நதிகள்’ என்று அவர் கூறினார்.
இந்தியாவில் ஆத்திகம் போன்றதே நமது நாத்திகமும். இரண்டும் மிக மிகப் பழைமையானவை. இரண்டுமே அறிவில் விளைந்த இரண்டு கனிகள். நமது அடிமை வாழ்க்கையின் விளைவு தற்காலத்தில் அவை இரண்டுமே மூடத்தனத்தில் முளைக்க ஆரம்பித்து விட்டன. ஒருவன் மூடனாய் இருக்க, அவன் ஆத்திகனாய் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. அப்படியிருப்பின் அவன் பேசுகிற ஆத்திகத்துக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை. அப்படிப்பட்ட மூடர்களுக்கு இணையான நாத்திக மூடர்களையும் நான் அறிவேன். அந்த மூடத்தனத்துக்கும் அவர்கள் பேச விரும்புகிற நாத்திகத்துக்கும் சம்பந்தம் ஏற்பட்டு விடக் கூடாதே என்று நான் கவலையுறுகிறேன்.
பிராமணீயம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளாதவர்கள், ஆன்மீகம் என்பது என்னவென்று அறிந்து கொள்ள அக்கறையில்லாதவர்கள், ஹிந்து சமயம் என்பது எப்படிப்பட்ட தன்மை வாய்ந்தது என்று தேர்ந்து கொள்ளாதவர்கள், அதனை எதிர்த்து அழிக்கக் கிளம்பி இருப்பது விபரீதம். பெரியார் அவர்கள் ‘பிராமணீயத்தை எதிர்க்கிறேன்’ என்கிறார். ஆனால், அதற்காக அந்தப் பிராமண தர்மங்களிலிருந்து வழுவிப்போன, வழுவி வருகிற தற்காலப் பிராமணர்களை ஆதரிக்காமல் அவர்களை இவர் பகைப்பானேன்?
எனவே, ‘பிராமணன் என்பவன் யார்?’ என்பதை நாம் விளங்கிக் கொண்டாக வேண்டும்.
இந்தக் கேள்விக்கான பதிலைப் பிராமண இளைஞர் மகாநாட்டில், திருச்சி மகாநாட்டில் கூறியதை விடவும் தௌ¤வாக விவரித்து நான் கூறினேன். எனது திருச்சி மகாநாட்டுப் பேச்சு, நான் மதிக்கிற பிராமண நண்பர்களிடமும் எனக்கு அறிமுகமில்லாத பல பிராமணர்களிடமும் மிகுந்த பாராட்டு உணர்ச்சியை ஏற்படுத்தியது. பிராமணரல்லாத பலர் என்னையும் ஒரு பிராமணன் என்று அந்தப் பேச்சின் விளைவாய் எண்ணிக் கொள்ள நேர்ந்தது. பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டே நான் இவ்வளவும் பேசியதால் திராவிடக் கழக நண்பர்களுக்கு என்பால் கோபமெழுந்தது இயற்கையே.
என்னைப் பொறுத்தவரை அந்தப் பேச்சை நிகழ்த்துவதற்கு எனக்கு எந்தவிதத் துணிச்சலும் தேவையாயிருக்கவில்லை. மனத்தாலும் அறிவாலும் அனுபவங்களாலும் அறிந்த, இதற்கு முன்னால் ஏற்கனவே பலராலும் பன்னிப் பன்னிச் சொல்லப்பட்ட உண்மைகளைப் பகிரங்கமாகப் பேசுவதே ஒரு வீர சாகசமாக ஆகிவிட்டது போலும்.
அந்தத் திருச்சி மகாநாட்டில் கலவரமோ குழப்பமோ நேராததற்கு ஒரே காரணம் பெரியார் அவர்களும் மேடையில் இருந்தது தான். பெரியார் எனது பேச்சை மிகவும் உன்னிப்பாய், செவி மடலைக் கையால் குவித்துக் கொண்டு சிரத்தையோடு கேட்டார். இடையிடையே தனக்கு உடன்பாடான கருத்துக்களை நான் கூறுகிறபோதும் – மக்கள் கரகோஷம் செய்த பொழுதும் தானும் தனது கைத்தடியால் தரையில் தட்டித் தனக்கு மாறுபாடான கருத்துக்களை நான் பேசிய சந்தர்ப்பத்திலும் ஆரவாரித்து என்னை உற்சாகப்படுத்தினார் பெரியார். அவரது இந்த நாகரிகம் மிக மேன்மையானது என்று நான் அப்போது உணர்ந்தேன்.
அறிமுகமில்லாதவர்கள், எவ்வளவு உயர்ந்தவர்களாயினும், இயல்பாக ஒரு சந்தர்ப்பமோ சூழ்நிலையோ உருவாவதற்கு முன்னால் நானாகப் போய்ப் பேசி உறவாடுகிற இயல்பு எனக்கு இல்லாத ஒன்று. பிரசங்கம் முடிந்ததும் பல திராவிடக் கழக அன்பர்கள் எனது பேச்சால் தங்கள் மனம் புண்பட்டு விட்டதாகப் பெரியார் அவர்களிடம் சென்று முறையிட்டுக் கொண்டனர். அப்போது பெரியார் அந்தத் தி.க. தோழர்களுக்கு மிகவும் கண்டிப்பாக அறிவுரை வழங்கினார்: “பொது வாழ்க்கையிலே அப்படி எல்லாம் மனசு புண்படக் கூடாது. இவர் ஒருத்தர் தான் நமக்குப் பதில் சொல்லி இருக்காரு. நாம் எவ்வளவு பேரைக் கேள்வி கேட்டிருக்கோம்? அவங்க மனசு புண்படுமேன்னு யோசிச்சோமா? அப்படியெல்லாம் யோசிச்சிக்கிடிருக்க முடியாது”. அவரது இந்த அறிவொழுக்கம் (intellectual honesty) எனக்கு அவர் அன்று உபதேசித்த ஓர் பாடமாயிற்று. பின்னர் அவர் என்னை அழைத்தார். மிக மரியாதையாக, ஓர் ஆஸ்திக சமாஜத்தைச் சேர்ந்த மடாதிபதி போல, மிகவும் பண்போடு, இருபத்து நான்கு வயதே ஆன என்னை, “வாங்க, ஐயா!” என்று கரங்கூப்பி அழைத்தார். அக்காலத்திலெல்லாம் நான் யாரையும் காலில் விழுந்து வணங்கியதில்லை. ஆனால், அப்படி ஓர் உணர்வு எனக்கு அப்போது தோன்றியது உண்மை! அவர் என்னை விசாரித்தார். “நீங்க பிராமணப் பிள்ளையா?” “இல்லை” என்றேன். “ரொம்ப சந்தோஷம்!” என்றார். நான் விடை பெற்றுக் கொண்டேன்.
நன்றி: (மூலம்: ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன்)

6 Responses to ஜெயகாந்தன் – ஒரு அனுபவம்

 1. srikumar r says:

  Almost all of the reflections of Jayakanthan are true to my best knowledge and belief. The truthness in the statements are to feel and clarity is too good to miss

 2. Dr. A. Raman says:

  Aaththikam and Naaththikam are two opposing segments of philosophy. However, they are not the only two and there should be one in-between. And that is Aaththikanaaththikam. Those who are steadfast bound under Aaththikam can sometimes adopt some beliefs of Naaththikam and this is quite natural when one begins to analyze the prevalent beliefs seriously. One can call oneself Naaththikan or Aaththikan, but it may be that some may be in the AaththikaNaaththikan category without their being cognizant of it.

 3. A. Chandramouliswaran says:

  The article was simply brilliant and can come from only original thinking. I have always had great respect for Jayakanthan and this article has put him in a high pedestal in my mind. It is a pity that such a great thinker and writer had not received his due recognition in the whole of India.

 4. K G. Rangarajan says:

  Good.

 5. Shiva Surya says:

  I liked this article. But, small doubt. Is this originally spoke by jeyakanthan?
  Don’t mistake me. Please clarify my doubt.

  • admin says:

   Sir, 
   It is taken from the book.  The book name is given as reference  in the last line. 
   Regards Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *